அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
எழும்பூர்.
சென்னை. |
சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. |
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்த நாரீஸ்வரர் கோயில், சென்னை எழும்பூர் பூந்த மல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது தேவார வைப்புத்தலம். திருநாவுக்கரரின் ஆறாம் திருமுறையில் உள்ள பாடலில் எழுமூர் என இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. மூலவரின் சிவனின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது. கருவறைச் சுவரில் அர்த்தநாரீஸ்வரரின் உருவச்சிலை உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க இங்கு, உத்தரவாகினி ஆறு வடக்கு நோக்கி ஓடியதால், புனிதமாக விளங்கியது. அந்நியர் ஆட்சிக் காலத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. 18ம் நூற்றாண்டில், இப்பகுதியைச் சேர்ந்த ஆராவமுத நாயுடு, தன் தோட்டத்தில் தூர் வாரிய போது, இங்குள்ள சிவலிங்கத்தையும், விநாயகர் சிலையையும் கண்டெடுத்தார். அவை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நூறு ஆண்டுக்கு முன்,வெங்கடகிரி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, இந்த சிவனிடம் வேண்டிக் கொள்ள குணமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக, கோயிலுக்கு உற்ஸவ மூர்த்தி விக்ரஹங்களை வழங்கினார். இங்கு சிவராத்திரியன்று (பிப்.27) அபிஷேக ஆராதனை நடக்கிறது. திறக்கும் நேரம் காலை7.00- 1.00, மாலை 5.00- இரவு 8.30. |
அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகளத்தூர், சென்னை. |
சென்னை குன்றத்தூர்- சோமங்கலம் சாலையில், குன்றத்தூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது சிறுகளத்தூர்.திருக்காவனூர் என்றும் இந்தக் கிராமத்தை அழைப்பார்கள். இங்கே, சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது பர்வதவர்த்தினி சமேத ராமநாதீஸ்வரர் கோயில். இந்த கோயிலில், வைபவ லட்சுமிக்கு சன்னிதி உள்ளது. |
வனவாசத்தின் போது, ராமர் இங்கு வந்து சிவலிங்கத்தை வழிபட்டதாகச் சொல்கிறது. ஸ்தல புராணம். தவிர, முனிவர்களும் ரிஷிகளும் வணங்கி வழிபட்ட கோயில் இது.இத்தனைப் பெருமைகள் கொண்ட கோயிலில், வைபவ லட்சுமி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாள் என்பது கூடுதல் சிறப்பு! திருமணம் போன்ற பல மங்கலகரமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னதாக, வைபவ லட்சுமியின் சன்னிதிக்கு வந்து, அம்பாளுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்து வழிபட்டால். காரியங்கள் இனிதே நிறைவேறும்; கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி ஆகியன சேர்ந்து வரும் நாளில், கோயிலில் மாக்கோலமிட்டு,செம்மண் பூசி, தென்னை மற்றும் பனை ஓலைகளால் அலங்கரித்து, வைபவ லட்சுமிக்கு மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால் மாங்கல்ய பலம் பெருகும், மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்கின்றனர் பக்தர்கள்.
அம்பிகைக்கு நீல நிற வஸ்திரம் சார்த்தி, பல வகை மலர்களால் கிரீடம் சூட்டி வழிபட, குடும்பத்தில் நிம்மதி நிலவும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் என்பர்.குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமான், இங்கு வந்து வழிபட்டு கிரிவலம் வந்ததும், தென் திருவண்ணாமலை என்று போற்றப்படுவதுமானது இந்த கோயில். |
அருள்மிகு ஊரணீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு ஊரணீஸ்வரர் திருக்கோயில்,
ஊரப்பாக்கம், சென்னை. |
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஜி. எஸ்.டி. சாலையில், வண்டலூரை அடுத்து ஊரப்பாக்கத்தில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது, ஊரணீஸ்வரர் கோயில். |
மூலவர் ஊரணீஸ்வரர், ஊர்வன வடிவில் (நாகப்பாம்பு) சித்தர்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனி எனச்சொல்லப்படுகிறது. இவருக்கு சாதாரண அலங்காரம் செய்தாலே அழகுற காட்சி தருகிறார். அற்புத சக்தியாக அன்னை பூரணாம்பிகை உடனிருக்கிறாள். தன்னை அண்டியவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதியராக இறைவனும் இறைவியும் விளங்குகிறார்கள். பிரதி மாதம் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருவிளையாடல் புராணம் சொற்பொழிவும், செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு பெரிய புராணம் சொற்பொழிவும் இத்தலத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்வு நடக்கிறது. இங்கு சேவை செய்யும் பூஜைக்குரியவர்கள் அன்றைய வரவு-செலவு கணக்குகளை ஊரணீசன் முன்பு தினமும் வாசிக்கிறார்கள். காரணம் கோயில் வளர்ச்சிக்கு மனிதர்கள் யாரும் பொறுப்பில்லை சிவபெருமானே வரவும்- செலவும் தருபவன் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். |
அருள்மிகு குணபரணீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு குணபரணீஸ்வரர் திருக்கோயில்,
குணகரம்பாக்கம்,
சென்னை. |
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது குணகரம்பாக்கம். சுங்குவார்சத்திரத்தில் இருந்து குணகரம்பாக்கம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. |
மேற்கே சஹ்யாத்திரி மலை முதல், கிழக்கே வங்கக்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவன்கோயில்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று, சுந்தரசோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, ஆதித்த சோழன் காலத்தில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்த பல கோயில்கள் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன. ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில், குணகரம்பாக்கம் குணபரணீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. கி.பி. 883-ல் ஆதித்ய சோழனால் கற்றளிக் கோயிலாகக் கட்டப்பட்டது. விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரரின் சிலைகள் உள்ளன. சோசுந்தரர், அம்பாள், முருகப்பெருமான் ஆகியோரின் உற்ஸவ விக்கிரகங்களும் உள்ளன. பிரதோஷம், சிவராத்திரி நாள்களிலும் பூஜைகள் செய்து வருகின்றன. கோயிலின் முதற்கட்டப் பணிகளின்போது கல்வெட்டு ஒன்று கிடைத்ததாம். விழுப்புரத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவனை அழைத்து வந்து அதைக் காட்டியபோது, இடைக்கால சோழ அரசர்களில் கோ ராஜசேகரி பட்டமுடைய ஆதித்தனின் எட்டாவது ஆட்சியாண்டில் மனையிற்கோட்டத்துக் கனறூர் நாட்க்குட்பட்ட குணுக்கரனபாக்கம் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். அப்போதுதான், இது சோழர் காலத்திய கோயில் என்பதை அறிந்தார்களாம் ஊர்மக்கள்.
|
அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில்,
அசோக் நகர், சென்னை. |
சென்னை அசோக் நகரில் அசோக் பில்லரில் இருந்து வடபழனி செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது மல்லிகேஸ்வரர் கோயில். |
ராஜகோபுரம் துவஜஸ்தம்பம் எல்லாம் அந்தக் காலத்து அமைப்பில் உள்ள கோயில். கருவறையில் சுயம்பு லிங்கத் திருமேனியராக சிறிய வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் மல்லிகேஸ்வரர். மல்லிகை வனத்தில் இருந்தவர் என்பதால் இவருக்கு மல்லிகை சாத்தி வணங்குறது சிறப்பாக சொல்லப்படுகிறது. நான்கு திருக்கரங்களோடு மகேஸ்வரி என்ற திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள் அம்மன். காலன் திசை பார்த்து நிற்கிற இவளை வழிபட்டால் யமபயமும், அகால மரண பயமும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சித்தர் வகுத்துவந்த வழிமுறைப்படி இங்கே அருள்பாலிக்கின்ற மல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூவை சாத்தி பிராகாரத்தில் ஏழுமுறை வலம் வந்து வேண்டிக்கிட்டால் மனதில் நினைத்த பலனை அடையலாம். சிவராத்திரியும், நவராத்திரியும், இங்கே ரொம்ப விசேஷம். அஷ்டமி தினங்களில் சாயங்காலத்தில் இங்கே இருக்கிற பைரவருக்கு அர்ச்சனை பண்ணி வடைசாலை சாத்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டா வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா தடைகளும் விலகும். இங்கே சத்யநாராயணருக்கு நடக்கிற பவுர்ணமி பூஜை ரொம்பவே பிரசித்தம்! |
|
|