அருள்மிகு அரசானை அக்னீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அரசானை அக்னீஸ்வரர் திருக்கோயில்,
கொங்கம்பாளையம், ஈரோடு. |
ஈரோடு மாவட்டம், சேலம்-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது விஜயமங்கலம். கோவை மற்றும் சேலத்தில் இருந்து இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. விஜயமங்கலம் டோல்கேட் அருகில் இறங்கி, இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அரசானை மலைக்கோயிலுக்கு ஆட்டோ மூலம் செல்லலாம். |
கொங்கம் பாளைய கிராமத்தில் சிறிய மலையின் மீது அரசானை அக்னீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அரசு+ அண்ணாமலை என்பது மருவி அரசானைமலை என்று மாறியது என்று ஒருசாராரும், பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின்போது அர்ஜுனன் இங்கு வந்து வழிபட்டுச் சென்றதால், அர்ஜுன மலை என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் அரசானைமலை என்று மாறியது. இங்குள்ள அக்னீஸ்வரரும் அரசாத்தாளும் மிகுந்த வரப்பிரசாதியான தெய்வங்களாகும். ஈஸ்வரன் இங்கு மேற்கு நோக்கி அருள்வது விசேஷமாகும். முற்காலத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஏழைப் பெண்கள் அரசாத்தம்மனிடம் வந்து வணங்கும்போது, அரசாத்தம்மன், அதோ அங்கே இருக்கிறது. தங்கம் எடுத்துக் கொள் என்பாள் அம்மன். அதேபோல தங்கம் இருந்தது. வேண்டிக்கொண்டவர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். பிறகு அரசாத்தம்மனின் அருளால் வசதி வந்ததும் அம்பிகையிடம் பெற்ற தங்கத்தைத் திரும்பக் கொடுத்து விடுவார்கள். கருவறையின் உள்ளே ஒன்பது நவகிரக சிலைகள் உள்ளன. இங்குள்ள அரசானைமலையில் தினமும் அதிகாலை நேரத்தில் இந்த மலையில் ஏறி இறங்குபவர்கள் ஆரோக்கியமாக வாழலாம் அவர்களை எந்த நோயும் நெருங்காது என்று பக்தர்கள் கூறுகின்றனர். அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடிநீர் பாட்டில்கள், பூஜைப் பொருட்கள் அனைத்தையும் அருகில் உள்ள விஜய மங்கலத்தில் இருந்தே வாங்கிச் செல்வது நல்லது. மலைப் பாதை கரடுமுரடாகவும், செங்குத்தாகவும் இருப்பதால், வயதானவர்கள் தகுந்த துணையுடன் செல்வதுதான் நல்லது. |
|
|