அருள்மிகு அபூர்வவிநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு அபூர்வவிநாயகர் திருக்கோயில்,
சோழகுருணி,
மதுரை. |
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சோழகுருணி. பேருந்து எண் 76-ல் சென்றால் வளையங்குளத்தில் இறங்கி ஷேர் ஆட்டோமூலம் செல்லலாம். 16டி பேருந்து கோயில் அருகே செல்லும். |
விநாயகர் நின்ற கோலத்தில் அருள்புரியும் அபூர்வமான சிற்பம் ஒன்று சோழகுருணி கிராமத்தில் உள்ளது. இந்த விநாயகர் இங்கு கோயில் கொண்டதைப் பற்றி செவிவழியாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிக் கொண்டிருந்த சமயம், அதன் தலைமைச் சிற்பி ஒரு விநாயகர் சிலையை வடித்து, அதை புனித தலங்கள் தோறும் எடுத்துச்சென்று வருமாறு சோழனிடம் கூறினார். அதன்படியே ராஜராஜனும் தன் படைகள் சூழ விநாயகர் சிலையுடன் காசி, திரிவேணி சங்கமம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற பல தலங்களுக்கும் சென்றான். அங்கெல்லாம் அத்தலத்து புனித நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்துவழிபட்டான். அவ்வாறு திரும்பிவரும் வழியில் பாண்டிய நாட்டில் கடம்பவனம் சூழ்ந்த பகுதியில் தங்கினான்.
மறுநாள் அங்கிருந்து புறப்பட விநாயகர் சிலையை எடுத்தபோது அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி வாக்கு, மன்னா, நான் இங்கேயே கோயில்கொள்ள விரும்புகிறேன் என்று ஒலித்தது. விநாயகரின் திருவுள்ளம் இதுவென்று உணர்ந்து, அங்கேயே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டான் ராஜராஜன். அங்கே ஒரு குளமும் வெட்டினான். பின்னர் பூஜைக்கென்று ஆட்களை நியமித்து நிவந்தங்களையும் வழங்கிவிட்டு நாடு திரும்பினான் மன்னன். அந்த விநாயகர் சிலையே இது என்கிறார்கள். சோழன் வெட்டிய குளம் உள்ளதால், சோழன்குருணி என்று பெயர் ஏற்பட்டு, தற்போது சோழகுருணி என்றழைக்கப்படுகிறது. இந்த விநாயகர் சிலை சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது. ஆவுடையார்மீது நின்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத அமைப்பு. தலைக்குமேல் குடை உள்ளது. நான்கு கரங்களில் பாசம், அங்குசம், சூலம், அமிர்த கிண்ணம் உள்ளது. துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது. வலக்காலை சாய்த்து, இடக்காலை நிமிர்த்தியபடி இடம்புரி விநாயகராகத் திகழ்கிறார். இவரது முகத்திற்கருகே இரண்டு பக்கமும் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. அவை தன் கால்களில் பாம்பைக் கவ்வியுள்ளன. விநாயகரின் பாதங்களுக்கு அருகே ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் நாகரும் காட்சியளிக்கின்றனர். அபூர்வமான இந்த விநாயகரை வழிபட திருமணத்தடை விலகும். வேலைவாய்ப்பு, புத்திர பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரம் செழிக்கும். சுகப்பிரசவம் உண்டாகும். காலசர்ப்ப தோஷம் நீங்கும். இவர் சன்னிதியில் பல திருமணங்கள் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வணங்கினால் கூடுதல் பலன் கிட்டும். |
|
|