அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்,
சிம்கோ காலனி,
திருச்சி. |
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் கிராப் பட்டிக்கும், எடமலைப் பட்டி புதூருக்கும் இடையே சிம்கோ காலனியில் உள்ளது இந்த பழனி ஆண்டவர் மற்றும் வரசித்தி விநாயகர் கோயில். |
கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் உள்ளே நுழைந்ததும் முதலில் முருகப்பெருமான் சன்னதியும், அடுத்து வரசித்தி விநாயகர் சன்னதியும் உள்ளன. முருகப்பெருமானின் கருவறைக்கு எதிரே மயிலும் பீடமும் இருக்க, கருவறையில் பழனியாண்டவர் நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறார். இந்த பழனியாண்டவரின் திருமேனி பழனியில் உள்ளது போலவே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமியை தரிசித்துவிட்டு சன்னதியை வலம் வரும் போது வித்தியாசமானதேர் அனுபவம் கிட்டுகிறது. பழனியாண்டவரின் கோஷ்டத்தில் அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருவுருவச்சிலைகள் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. அறுபடைவீடுகளுக்கும் சென்று வந்த திருப்தி தேவகோட்டத்தில் உள்ள திருமேனிகளை தரிசிக்கும் போது உண்டாகிறது. முருகன் சன்னதியை அடுத்து சித்தி விநாயகர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தாமதமாவோர் இங்கு வந்து முருகன் சன்னதியில் பதினொரு செவ்வாய்க் கிழமைகள் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட அவர்களது செவ்வாய் தோஷம் நீங்கும் என்கின்றனர். |
|
|