மகாசிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி,தைப்பூசம்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும்.
இக்கோயிலின் தெற்கு பிரகாரத்திலுள்ள பாதாளத்தில் 14 படிகள் இறங்கினால், "பாதாள கணபதி'யை தரிசிக்கலாம். இது ஆந்திரமாநிலம், காளஹஸ்தியிலுள்ள அமைப்பை போல் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில்,
வெங்கனூர்,
சேலம் மாவட்டம் .
போன்:
+91438 292 043, +9194429 24707
பொது தகவல்:
பிரகாரத்திலுள்ள வன்னிமரத்தின்கீழ் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அருள்பாலிக்கிறார்கள். அருகில் ஒரு விநாயகரும் இருக்கிறார்.
பிரார்த்தனை
இங்கு வேண்டிக்கொள்ள கல்வியில் சிறந்து திகழலாம், ஞானம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
ஓம் வடிவ கருவறை: தன்னில் இருந்து உருவாகிய முருகனின் ஞானத்தை உலகம் அறிந்து கொள்வதற்காகவே, முருகன் மூலமாக பிரணவப்பொருளை கேட்டறிவதுபோல சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தினார். ஆனால், உண்மையில், "பிரணவத்திற்கு தானே ஆதாரம்' என்பதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் "ஓம்' வடிவ கருவறையில் அருளுகிறார். இதன் காரணமாக இந்தக் கோயிலில் முருகனுக்கு தனிச்சன்னதி கிடையாது. ஒரு சிறிய மண்டபத்தில், பாலதண்டாயுதபாணியை பரிவார மூர்த்தியாக மட்டும் வைத்துள்ளனர்.
இத்தலத்து இறைவனை வேண்டினால், கல்வியில் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் தெற்கு பிரகாரத்திலுள்ள பாதாளத்தில் 14 படிகள் இறங்கினால், "பாதாள கணபதி'யை தரிசிக்கலாம். இது ஆந்திரமாநிலம், காளஹஸ்தியிலுள்ள அமைப்பை போல் உள்ளது. தலையில்லாத கிளிகள்: அம்பாள் விருத்தாம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது கருவறை சுவரைச் சுற்றிலும், பல சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயில் கட்டியபோது, அதிகளவில் கிளி சிலைகள் வடித்தனர். மிகவும் தத்ரூபமாக இருந்த அக்கிளிகள் உயிர்பெற்று கீச்சிட்டு பறக்க ஆரம்பித்தன. எனவே மன்னன் அவற்றின் தலையை வெட்டிவிட்டானாம். இன்றும் இக்கோயிலில் தலையில்லாத கிளிகளைக் காணலாம். கல்லில் செதுக்கிய சங்கிலி, இசைத்தூண்கள் ஆகியவை காணவேண்டிய சிற்பங்கள்.
விஷ்ணு, ஆதிசேஷன் குடையாக இருக்க, அதன் மடியில் அமர்ந்த கோலத்தில் அருளுகிறார். அருகில் ஒரு விநாயகரும் இருக்கிறார். இவர்களை வணங்கி மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண, புத்திர தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வந்ததாம். எனவே, வெண்கல ஊர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் "வெங்கனூர்' என்று மருவியது
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த குறுநில மன்னர்கள் இருவர் சிவன் மீது அதீத பக்தியுடையவர்களாக இருந்தனர். இவர்கள் பிரதோஷ வேளையில், விருத்தாச் சலத்திலுள்ள விருத்தாசலேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் பிரதோஷ பூஜைக்கு சென்றபோது கனத்த மழை பெய்தது. வழியில் இருந்த ஸ்வேத (குடமுருட்டி) நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவர்களால் நதியை கடக்க முடியவில்லை. "பிரதோஷ நேரம் கழிவதற்குள் உன்னை தரிசிக்க வேண்டுமே இறைவா' என அவர்கள் சிவனிடம் முறையிட்டு வருந்தினர். அப்போது நதி இரண்டாக பிரிந்து வழிவிட்டது. பின்பு, விருத்தாச்சலம் சென்ற அவர்கள் சுவாமியை தரிசித்துவிட்டு திரும்பி விட்டனர்.
அடுத்த பிரதோஷ பூஜைக்கு கோயிலுக்கு சென்றபோதும், இதேபோல நிகழ்ந்தது. அன்றும் அவர்கள் சிவனைப் பிரார்த்தித்தனர். ஆனால், நதியில் வெள்ளம் வற்றவில்லை. அவர்கள் வருந்தி நின்ற வேளையில் அசரீரி ஒலித்தது.
""நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் பிரதோஷ தரிசனம் எவ்வகையிலும் தடைபடாது. இந்த ஆற்றின் கரையிலுள்ள வன்னிமரத்தின் அடியில் நான் சுயம்புவாக இருக்கிறேன். என்னை அங்கேயே வந்து வழிபடலாம்,'' என்றது.
அவர்கள் மகிழ்ச்சியுடன் வன்னிமரத்தடியில் பார்த்தபோது, சுயம்புலிங்கத்தை கண்டனர். அங்கேயே கோயில் எழுப்பினர். சுவாமிக்கு "விருத்தாச்சலேஸ்வரர்' என்றே பெயர் வைத்து விட்டனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஞ்ஞானம் அடிப்படையில்:இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும்.
இருப்பிடம் : சேலத்தில் இருந்து 78கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 22 கி.மீ., சென்றாலும் வெங்கனூரை அடையலாம். பஸ் வசதி உண்டு.