சித்திரை தமிழ்வருடப்பிறப்பு, சித்திரா பவுர்ணமி, அட்சயதிருதியை சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா, வைகாசி விசாக நட்சத்திர சுவாமி வெள்ளிக்கருட வாகனத்தில் வீதிஉலா. ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், விஜயதசமி, கார்த்திகையில் திருகார்த்திகை, அனுமன்ஜெயந்தி, ஸ்ரீராமநவமியில் ஆஞ்சநேயருக்கும், சுவாமி தாயாருக்கும் சேர்ந்து இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாக்கள் நடக்கிறது.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி-621 705,
அரியலூர் மாவட்டம்
போன்:
+91-4329- 228 890
பொது தகவல்:
கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கோயிலாக உள்ளது. மூலஸ்தானம் அருகிலேயே தலவிருட்சமான மகாலிங்கமரம் உள்ளது. இது ஆதிகாலத்திலிருந்தது போலவே இன்றும் தளிர்த்து செழித்து காட்சி தருகிறது.
பிரார்த்தனை
விவசாய விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோயிலுக்கு செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். கோயிலில் காது குத்துவிழா மட்டுமே நடக்கிறது. திருமண நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.
நேர்த்திக்கடன்:
விவசாய விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் சரியாவதற்கும், முதல் கன்று கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவதாகவும் விவசாயிகள் பிரார்த்தனை செய்துவிட்டு, அதன்படி கன்றுகளையும் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு உள்ளது. தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடனிருப்பதாக ஐதீகம். உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:
அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாடுகள் நிறைந்த மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார்.
மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "அன்ப! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. கன்றுடன் பசு நின்றிருந்த இடத்தில் சாய்ந்து கி டந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த பேதையே! பொய்ப்பொருளாம், உன்பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், என்னை உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது'', என அசீரீரி ஒலித்தது. தொடர்ந்து "கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது.
கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் யான் என்பதை அறிக. கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள் எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை.
இருப்பிடம் : அரியலூர் நகரிலிருந்து கிழக்கே இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் ஆறு கி.மீ.,தூரத்தில் கோயில் உள்ளது. அரியலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதியுள்ளது