கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு.
இது தவிர சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
கோயிலில் அம்மன் இல்லை என்றாலும், 12 வருடத்திற்கு ஒரு முறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு.
இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காண கண்கோடி வேண்டும். இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்,
வைக்கம்- 686 141, கோட்டயம் மாவட்டம்.
கேரளா மாநிலம்
போன்:
+91- 4829-225 812.
பொது தகவல்:
அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் கோயில் நிர்வாகத்திடம் பணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும். மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர லிங்கம் அமைந்துள்ளது. அம்மனுக்கு சன்னதி கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
பிரார்த்தனை
இங்குள்ள வன துர்க்கையை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து ,வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
வைக்கத்தஷ்டமி: சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழித்து முருகப்பெருமான் வெற்றிபெற, வைக்கத்தஷ்டமி தினத்தன்று சிவபெருமானே நேரடியாக இங்கு அன்னதானம் செய்ததாக தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு "பிராதல்' என்று பெயர். இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம்.
வனதுர்க்கை சன்னதி: கோயிலின் தெற்கு பகுதியில் வன துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சன்னதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்தபோது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வ கன்னி இப்படி அரக்கியாக மாறியிருப்பது தெரிய வந்தது. அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்ட, அவர் திரிசூலியை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார். அதன்படி செய்ததில் உடல்பகுதி விழுந்த இடத்தில் தான் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
திரிசூலியை அனுப்பிய கணபதி, இத்தலத்தின் பலிபீடம் அருகே இருக்கிறார்.
தல வரலாறு:
கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 லிங்கங்களைக் கொடுத்து அதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய கூறினார். வலக்கையில் ஒரு லிங்கமும், இடக்கையில் ஒரு லிங்கமும், வாயில் ஒரு லிங்கமுமாக அவன் எடுத்து சென்றான். அச்சமயத்தில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், சிவனை நோக்கி தவம் இருந்தார்.
இவரது தவத்தின் பலனாக கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,""வேண்டும் வரம் கேள்''என்றார். அதற்கு வியாக்ரபாதர், ""இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்''என வேண்டினார். (இதுவே "வைக்கத்தஷ்டமி' விழாவாக கொண்டாடப்படுகிறது)
இதன் பின் கரன், தனது வலக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடம் தான் "வைக்கம்' என அழைக்கப்படுகிறது.
கரன் இடக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை ஏற்றமானூரில் மேற்கு நோக்கியும், வாயில் கடித்து கொண்டு வந்த மூன்றாவது லிங்கத்தை கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்தான் கரன்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு.
இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காண கண்கோடி வேண்டும்.
இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார்.
இருப்பிடம் : எர்ணாகுளத்திலிருந்து 34 கி.மீ. தூரத்திலும், கோட்டயத்திலிருந்து 42 கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.
எர்ணாகுளம் - கோட்டயம் செல்லும் பஸ்களில் வைக்கம் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
எர்ணாகுளம்,கோட்டயம்
அருகிலுள்ள விமான நிலையம் :
கொச்சி
தங்கும் வசதி :
இங்கு வைக்கம், எர்ணாகுளத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.