சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தர் இவரை "வடுகூரில் ஆடும் அடிகளே!' என்று பதிகம் பாடியிருக்கிறார்.
அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு "வடுகர் நாயகி' என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி, பைரவருக்கு தேன், கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். 6 முகம், 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரியார் திருப்புகழில் பதிகம் பாடியிருக்கிறார்.
கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன், போர்க்கோலத்தில் இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.
இவளுக்கு இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர், வலது புறம் பிரதோஷநாயனார் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.
|