|
இன்றும் இக்கோயிலில் அட்சய திருதியை முதல் எட்டு நாட்கள் மட்டுமே மகாலட்சுமியை தரிசனம் செய்ய முடியும். மற்ற நாட்களில் விஷ்ணுவை மாத்திரமே தரிசிக்கலாம். பிற நாட்களில் மகாலட்சுமி விஷ்ணுவுக்குப் பணிவிடை செய்வதாக ஐதீகம் நிலவுகிறது. அதன்படி அட்சய திருதியையன்று வீரலட்சுமியாக காட்சியளித்து நம்முடைய பயத்தைப் போக்கி தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறாள். இரண்டாம் நாள் கஜலட்சுமியாகத் தோன்றி ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் முதலியவற்றைத் தருகிறாள். மூன்றாம் நாள் சந்தான லட்சுமியாக வந்து சந்தான பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் அருள்கிறாள். நான்காம் நாள் விஜயலட்சுமியாக வந்து தேர்வில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, தொழிலில் அபிவிருத்தி, கலைகளில் வெற்றி முதலியன கிடைக்கச் செய்கிறாள். ஐந்தாம் நாள் தான்யலட்சுமியாக வந்து பூமி பாக்கியம், விவசாய அபிவிருத்தி, சொந்த வீடு முதலிய ஆசைகளை நிறைவேற்றுகிறாள். ஆறாம் நாள் ஆதிலட்சுமியாகத் தோன்றி பாவதோஷ நிவாரணம், கிரகதோஷ நிவாரணம் அளித்துக் காக்கிறாள். ஏழாம் நாள் தனலட்சுமியாக வந்து தனபாக்கியம், நிலையான செல்வம் முதலியவற்றைத் தருகிறாள். எட்டாம் நாள் மகாலட்சுமியாக வந்து எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாள். அட்சய திருதியையொட்டி இங்கு வந்து மகாலட்சுமியை வழிபட்டால், அஷ்ட லட்சுமிகளின் கடாட்சம் நமக்கு கிடைக்கும் என்கின்றனர். இதற்காக அவள் தரிசனம் தரும் எட்டு நாட்களும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு நடக்கிறது.
இது தவிர, பட்டுத் துணியும், கண்ணாடியும் சன்னதியில் சமர்ப்பிப்பது என்ற சடங்கும் இங்கு செய்யப்படுகிறது. தேவிக்கு சமர்ப்பித்த துணியையும் கண்ணாடியையும் நமக்கே திருப்பித் தந்து விடுவார்கள். அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதால் இங்கு வருபவர்கள் எல்லோரும் இந்தச் சடங்கைச் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் இதோடு நின்றுவிடுவதில்லை. மஞ்சள், மற்றும் அரிசியை (அட்சதை) அர்ச்சித்து தேவியை திருப்திப்படுத்துவார்கள். இச்சடங்கை சுமங்கலிகள் மட்டுமே செய்வார்கள். அரிசியை மஹாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாக சங்கல்பம் செய்து, புரோகிதர் சொல்லித் தரும் மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி இச்சடங்கைச் செய்கின்றனர்.
|
|