தடைப்பட்ட திருமணங்கள் நடைபெற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பங்குனி உத்திர நாளில் சுவாமிக்கும், அம்மனுக்கும் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்மனுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி, அதில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிராகார வலம் வந்தும், அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் ஐதீகம். திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்மனும் ஊஞ்சலில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருவர்.
தல வரலாறு:
ஸ்ரீலங்காவில் இருந்து வணிகர் ஒருவர், வருடந்தோறும் திருவாதிரையின்போது, சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் செல்வார். அந்த முறை கடும் புயல், மழை. குலசேகரப்பட்டினம் வரை கப்பலில் வந்தவர். தொடர்ந்து செல்லமுடியாமல் அங்கேயே தங்கும்படியானது. சிவனாரைத் தரிசிக்கமுடியவில்லையே என்று துக்கத்தால் கதறி அழுதார், அந்த வணிகர். பக்தரின் வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்குத் திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார். அப்போது, இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்குப் பாதை காட்டும். அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன் என அசரீரி கேட்டது. அதன்படியே எறும்புகள் வழிகாட்ட... அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார். பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சுவாமிக்கு சிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார் என்று புராணங்கள் சொல்லுகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நடராஜர் இத்தலத்தில் திருவாதிரை தரிசனம் காட்டியது சிறப்பு.