Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
  அம்மன்/தாயார்: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
  தல விருட்சம்: தர்ப்பை
  தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
  புராண பெயர்: திருநள்ளாறு
  ஊர்: திருநள்ளாறு
  மாவட்டம்: காரைக்கால்
  மாநிலம்: புதுச்சேரி
 
பாடியவர்கள்:
     
  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

தேவாரபதிகம்

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம்.
 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606.  
   
போன்:
   
  +91 4368 - 236 530, 236 504, 94422 36504 
    
 பொது தகவல்:
     
  இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.


ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள் : திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.




தீர்த்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.

சனீஸ்வரனை வணங்கும் முறை
: காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

தங்கக்கவசம் : சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, தமிழ் மக்களுக்கு ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.




சனீஸ்வரன் வரலாறு : சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.

சனி-அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.




சனீஸ்வரனுக்கு உரியவை

ராசி-மகரம், கும்பம்
திசை-மேற்கு
அதிதேவதை-எமன்
நிறம்-கருப்பு
வாகனம்-காகம்
தானியம்-எள்
மலர்-கருங்குவளை
வஸ்திரம்-கருப்பு ஆடை
ரத்தினம்-நீலமணி
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம்
சமித்து-வன்னி
உலோகம்-இரும்பு.




 
     
  தல வரலாறு:
     
  நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar