அந்தக் காலத்தில் வீரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்ட இந்த ஊரில், அழகே உருவெனக் கொண்டு திகழ்கிறது அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில். தென்பெண்ணையாற்றங்கரைக்கு அருகில், வன்னிமரமும், கொன்றை மரமும் ஸ்தல விருட்சங்களாக உள்ள இந்தத் தலத்தில், வீரபத்திரர் சிவனாரை எண்ணித் தவத்தில், ஆழ்ந்தார். அவருக்கு ஈசன் ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்தருளிய ஒப்பற்ற திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.
வேத வியாசர் அருளிய வேதங்களில், அவரிடமிருந்து சாம வேதத்தைக் கற்றறிருந்தவர், ஜைமினி முனிவர். தென் பெண்ணையாற்றங்கரையில், வன்னி மரங்களும் கொன்றை மரங்களும் சூழ்ந்த வனப்பகுதியில், தினமும் சிவனாரை மனமுருகப் பிரார்த்தித்துப் பூஜைகள் செய்து வந்தார் ஜைமினி முனிவர். அப்போது சிவனருளால்,சாமகான வேதம் எனும் இசைத் தொகுப்பை அமைத்தார் அவர். சிவனாரின் அன்பையும் அருளையும் பெறுவதற்காக ராவணன், சாம கானம் பாடியதாகச் சொல்கிறது புராணம். சாமவேதம் ஓதுபவர் என்று ஈசனைப் புகழ்ந்து பாடியுள்ளார் அப்பர் பெருமான். அத்தனை மகத்துவம் வாய்ந்த சாம கான வேதத்தை ஜைமினி முனிவர் தொகுத்தருளிய தலம் இது என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர். வீரபத்திரரும் ஜைமினி முனிவரும் வணங்கி வழிபட்டு அருள் பெற்ற திருத்தலம் இது என்பதால், மன்னர் பெருமக்களும் பெருஞ்செல்வந்தர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, சிவனாரை வணங்கி வழிபட்டனர்; மனதுள் தைரியம் பெற்றனர்; கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கினர். இங்கே வழிபடுவதால் கிடைக்கும் பலன்களைக் கண்கூடாகக் கண்டு பூரித்துப் போனவர்கள், இந்தத் தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்தனர்.
இந்தத் தலத்தின் நாயகி- சௌந்தர்ய கனகாம்பிகை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வந்து, சௌந்தர்ய கனகாம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; கன்னிப் பெண்கள், நல்ல கணவனைப் கைப்பிடிப்பார்கள்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். தை மாதம் 5 ஆம் தேதி அன்று, கங்கை நீரானது தென்பெண்ணையாற்றில் கலப்பதாக ஐதீகம். அன்றைய தினம், பல்லக்கில் ஸ்வாமி வீதியுலா வந்து, ஆற்றுக்குச் செல்வதும், தீர்த்தவாரி நடப்பதும், வழக்கம். இன்றும் இந்த நிகழ்ச்சிகள் தவறாமல் நடக்கின்றன. கிழக்குப் பார்த்த கோயில் இது. சுவாமி ஒப்பிலா மணீஸ்வரரும் சௌந்தர்ய கனகாம்பிகையும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகின்றனர். வைகாசி மாதத்தில், அஷ்டமி நாளின்போது, துர்கையின் சன்னதிக்கு எதிரே, மகா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும்.
தல வரலாறு:
தட்சன், தான் நடத்தும் யாகத்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு, உலகாளும் நாயகனும் தனது மாப்பிள்ளையுமான சிவனாரை மட்டும் அழைக்காமல் புறக்கணித்தார். அந்த அவமானம் கோபமாக மாற, கோபத்தில் கண்கள் சிவக்க, கடும் உக்கிரத்துடன் சிவனார் உருவாக்கிய திருவுருவம்தான் வீரபத்திரர். சிவனாரின் மொத்தச் சக்தியையும் ஒருங்கே கொண்ட வீரபத்திரர், யாகத்தைச் சீர்குலைத்து, தட்சனை அழித்தொழித்தார். வீரபத்திரரை வணங்கினால், மனதில் உள்ள பயங்கள் யாவும் நீங்கி, தைரியம் பெறலாம்; சிவனருள் கிடைக்கப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பது ஐதீகம்!
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வீரபத்திரர் தவமிருந்து சிவனை வழிபட, அவருக்கு ஈசன் ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்த சிறப்புடையது.
இருப்பிடம் : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் (32 கி.மீ.,) வேட்டவலம் உள்ளது. அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வீரபாண்டி.