மூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான்.
சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான்.
மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார்.
தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, ""தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!'' என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.
குயில்மொழி நாயகி: அம்மனின் திருநாமம் குயில்மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.
கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு "குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
கலா சந்திரன் : இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு "கலா சந்திரனாக' காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது.
|