இங்குபகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதி, உச்சிவேளையில் சிவப்புஆடையில் லட்சுமி, மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாக அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 3.30 மணி முதல் 12.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிக பகவதி அம்மன் திருக்கோயில்
சோட்டானிக்கரை- 682 312,
எர்ணாகுளம் மாவட்டம்,
கேரளா.
போன்:
+91 484 - 2711 032
பொது தகவல்:
இங்குள்ள கிழக்கு மண்டபமே கோயிலின் முக்கிய நுழைவு மண்டபமாகும். மண்டபத்தின் நடுவில் மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது. பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பிரசாத கவுண்டரும், இதனை அடுத்து கக்கசேரி ஸ்மார்க்க சன்னதியும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் கொடிமரத்தையும், மூலஸ்தான கலசத்தையும் ஒன்றாக தரிசிக்கலாம். கோயிலைச்சுற்றி பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் முழுவதும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் ஏற்றப்படும். பக்தர்கள் தனியாக கட்டணம் செலுத்தியும் இந்த சுட்டு விளக்கை ஏற்றலாம். பிரகாரத்தின் தெற்கு பக்கம் பகவதியை தரிசித்துவிட்டு வெளியே வரும் வாசல் உள்ளது. அடுத்ததாக சந்தனம் மற்றும் தீர்த்தம் தரும் மண்டபம் உள்ளது. இதன் எதிரில் மிகப்பெரிய நவராத்திரி மண்டபம் உள்ளது.
கோயில் தெற்குப்பிரகாரத்தின் இடது பக்கம் கோயிலின் தோட்டம் உள்ளது. வலது பக்கம் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை தரிசிக்கலாம்.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள், பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் பூஜைசெய்கிறார்கள். பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி, நாகர் சன்னதிகளும் தல விருட்சமும் உள்ளது. இதனை அடுத்துள்ள சன்னதியில் சிவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள கீழ்காவு பகவதி அம்மனை சோட்டானிக்கரை பகவதியின் சகோதரி என்கிறார்கள். சோட்டானிக்கரை பகவதியை தரிசிப்பவர்கள் இந்த அம்மனையும் அவசியம் தரிசக்க வேண்டும் என்பது ஐதீகம். கீழ்காவு பகவதி சன்னதிக்கு எதிரில் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் இடது பக்கம் நாகர் சன்னதி உள்ளது. மண்டபத்தின் இடது பக்கம் வெடிவழிபாடு கூடமும், மண்டபத்தின் வலது பக்கம் ஸ்ரீதர்ம சாஸ்தாவின் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கணபதி சன்னதிகளும் அமைந்துள்ளது. இந்த சன்னதிகளுக்கு தெற்கு பக்கம் யானைகளை கட்டிப்போடும் யானைக் கொட்டில் உள்ளது. திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இங்கிருந்து தான் யானை அழைத்து வரப்படுகிறது.
கோயிலுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல் இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள மேற்கு வாசல் வழியாகத்தான் பகவதியை தரிசிக்க வருகிறார்கள். வாசலின் ஒரு புறம் கோயிலைப்பற்றிய சிறப்பும், இன்னொரு புறம் கோயில் பூஜை பற்றிய விபரங்களும் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசலின் எதிரில் பக்தர்களின் வசதிக்காக மிகப்பெரிய நடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்கு பக்கம் கோயிலின் நிர்வாக அலுவலகமும், அதனைத் தொடர்ந்து பூஜைப்பொருள் விற்கும் கடைகளும் உள்ளது. மண்டபத்தின் தெற்கு பக்கம் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கும் அறையும், அதையடுத்துள்ள பகுதியில் கோயிலின் மேல் தோற்றமும் வரையப்பட்டுள்ளது.
12ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவந்தபட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும். பண்டைய காலத்தில் எல்லாக் கோயில்களைப் போல இங்கும் பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தற்போது அந்த பூஜை கிடையாது. இதற்கு பதிலாக சைவ முறையில் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பிரார்த்தனை
திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. பில்லி. சூன்யம், ஏவல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் புஷ்பாஞ்சலி செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் வெடிவழிபாடு சிறப்பானது.
தலபெருமை:
மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ருத்திராட்சத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுதிறது. இங்கு அதிகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப்படும். தேவியின் வலதுபக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா,தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா, எனப் பாடப்படுகிறார். மாசி மாதம் மகம் நாள் இங்கு மிக விசேஷமான நாளாகும். அன்று உச்சபூஜைக்கு பின்னர் 2 மணிக்கு நடைதிறக்கும். அப்போது சர்வ அலங்கார விபூஷிணியாக தேவி காட்சி தருவார். திருவாபரணம் அணிந்து தங்கமாக ஜொலிக்கும் அந்த விக்ரகத்தை வணங்குவது மிக புண்ணியமாக கருதப்படுகிறது. திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. மாசி மகம் நாளில் இங்கு லட்சக்கணக்கான பெண்கள் கூடுகின்றனர். மேலும் இங்கு மனஉளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு பூரண சுகம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதற்காக இங்கு ஒரு பலாமரம் உள்ளது. ஐந்து இலைகளுடன் கூடிய இலை உள்ள இந்த மரத்தில் மனச்சாந்தி இல்லாதவர்கள் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆணி அடிப்பதால் அவரை பிடித்துள்ள பீடைகள் விலகுவதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு:
சோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.
சரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே ! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை! பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை ! சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.
தேவி மகனே! வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குபகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதி, உச்சிவேளையில் சிவப்புஆடையில் லட்சுமி, மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாக அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.