|
செங்கல் கட்டுமானம்: பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.
கல்வெட்டுகளும், வரலாறும்: கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது.
அகத்தியர் புடைப்புச்சிற்பம்: முப்பெரும் தேவியர்களான, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உலக இன்னல்களைத் தீர்க்க இங்கு உள்ள கைலாசநாதரை வழிபட்டு உள்ளனர். அகத்தியர் சிவனை வணங்குவது போன்றதொரு பெரிய புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் அகத்தியர் சிவனை பூஜிப்பது போன்று உள்ள சந்நிதியில் தினமும் பூஜை நடந்து வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளும், முள்புதர்களுமாக காணப்படுகிறது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர். இந்த கோயிலைப் புதுப்பிக்க தமிழக பக்தர்கள் முன்வந்தால் மிகப் பெரிய கலைக்கூடம் காப்பாற்றப்படும்.
|
|