இத்தலத்தை தென் திருப்பதி என அழைக்கின்றனர். திருப்பதிக்கும் இத்தலத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இத்தலத்தின் தலவிருட்சம் புளியமரம். ஏழு சிறிய குன்றுகளைக் கடந்துதான் கோயிலை அடைய வேண்டும். அரப்பு தயாரிக்கப் பயன்படும் இலைகளைக் கொண்ட ஊஞ்ச மரங்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.
இத்தலத்தில் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுவது அவல் பிரசாதமாகும். அவல் துருவிய தேங்காய், கரும்புச் சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை கலந்து பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். தேங்காய்களைத் துருவ கோயிலேயே உபகரணங்களை வைத்துள்ளனர். பசுமையான வனச் சூழலில் பச்சைமாமலை போல் மேனியரான பெருமாளை மலர் அலங்காரக் கோலத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம். புரட்டாசி 5-வது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறகிறது. காலையில் முதல் பூஜையின் போது பந்த சேவை எடுத்து சங்கநாதத்துடன் ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் பின் கருட வாகனத்தில் உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி சென்று திருவீதி உலா வருவார். ஐந்தாவது சனிக்கிழமை பூஜைகள் அனைத்தும் உபயதாரர் பங்களிப்புடன் நடைபெறுகிறது. கோயிலின் அருகே என்றுமே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை காணிக்கையாக வழங்குகின்றனர். தாசர்களுக்கு செய்யும் இச்செயல் பெருமாளுக்கே செய்யும் சேவை என்பது பக்தர்களின் நம்பிக்கை! |