இங்குள்ள பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சென்னை கருவூலத்தில் கோயில் பற்றிய செப்பேடு உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
உடுமலைப்பேட்டை, வீதம்பட்டி, திருப்பூர்.
போன்:
+91 7888 04064, 94897 04064.
பொது தகவல்:
கரிவரத ராஜர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். விஷ்வக்சேனர்,ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், கருடாழ்வார் சந்நிதிகளும் உள்ளன. வாயிலின் இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் ஸ்ரீவிருட்சம் என்ற வில்வமரமும், புற்றும் உள்ளது.
பிரார்த்தனை
நினைத்தது நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கரிவரதராஜர்: பாண்டிய மன்னன் இந்திரத்துய்மனின் அவைக்கு அகத்தியர் வந்தபோது, மதிக்காமல் அலட்சியம் செய்தான். கோபம் கொண்ட அகத்தியர் மன்னனை, காட்டில் யானையாக திரியும்படி சபித்தார். அவனும் திரிகூடாசலம் என்னும் மலையில் கஜேந்திரன் என்னும் பெயருடன் யானையாக வாழ்ந்தான். அதே காட்டிலுள்ள குளத்தில் கூகு என்ற கந்தர்வன் ஒரு சாபத்தால் முதலையாக வாழ்ந்து வந்தான். ஒருநாள், கஜேந்திரன் குளத்தில் நீர் அருந்த வந்த போது, முதலை தன் கோரப்பற்களால் யானையின் காலைப் பிடித்து இழுத்தான். வேதனை தாளாமல் கஜேந்திரன், ஆதிமூலமே என திருமாலை அழைத்தான். கருட வாகனத்தில் விஷ்ணு ஓடோடி வந்து யானைக் காத்தார். கஜேந்திரனுக்கு அருள்புரிந்த திருமாலை கரிவரதராஜர் என்று குறிப்பிடுவர். கரி என்றால் யானை. பாகவதத்திலுள்ள இந்த வரலாற்றின் அடிப்படையில் பெருமாள் இத்திருநாமத்தோடு விளங்குகிறார்.
சக்கரத்தாழ்வார்: பக்தர்களுக்கு அருள்புரியத் தயாரான நிலையில், நின்ற கோலத்தில் சக்கரத்தாழ்வார் இங்கு வீற்றிருக்கிறார். இடக்காலை ஊன்றி, வலக்காலை சற்று முன் தூக்கியபடி இவர் இருப்பது சிறப்பு. இருகைககளைக் குவித்தபடி இருக்கும் இவரின் பின்னால் சக்ராயுதமும், சுதர்சன ஸ்லோகமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் தான் இத்தகைய சுதர்சனரைக் காண முடியும். ஜய ஜய ஸ்ரீசுதர்சனா மந்திரத்தை 108 முறை சொல்லி இவரை வழிபட்டவருக்கு நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
மேய்ச்சலுக்குச் சென்ற பசு, புற்றில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மக்கள் புற்றில் தெய்வீக சக்தி குடியிருப்பதை உணர்ந்தனர். அங்கு தோண்டியபோது, சுயம்பு மூர்த்தியாக பெருமாள் சிலை இருப்பதைக் கண்டனர். அப்போது திருமலைநாயக்கர் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரின் கனவில் தோன்றிய பெருமாள், புற்றில் சுயம்பு மூர்த்தியாக இருப்பதாகவும், அங்கு ஒரு கோயில் கட்டும்படியும் ஆணையிட்டார். மன்னரும் அங்கு கோயில் எழுப்பினார். சென்னை கருவூலத்தில் கோயில் பற்றிய செப்பேடு உள்ளது. அதில் வழிபாடு, விழாக்கள் முறையாக நடந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சென்னை கருவூலத்தில் கோயில் பற்றிய செப்பேடு உள்ளது.