|
கிருதயுகத்தில் சிந்து தேசத்தில் பாலி என்ற கிராமத்தில் கல்யாண்சேட் என்ற வியாபாரி வசித்து வந்தார். அவரது மனைவி இந்துமதி; மகன் பல்லால். சிறு வயது முதலே அவன் விநாயகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். கல்லில் தானே செதுக்கிய விநாயகர் விக்ரகத்தை எந்நேரமும் துதிப்பதே அவன் பொழுது போக்காக இருந்தது. அக்கம் பக்கத்தில் வசித்த சிறுவர்களுக்கும் பக்தி மார்க்கத்தையே காட்டினான். சிறுவர்களும் விளையாட்டு, கேளிக்கைகளை மறந்து விநாயகர் துதி பாடத் தொடங்கினர். பல்லாலை பித்தனாகக் கருதிய கிராமத்தினர், தங்களது குழந்தைகள் அவன் வழியில் செல்வதை விரும்பவில்லை. தங்களது குழந்தைகளை பல்லால் வலிய வந்து கெடுக்கிறான் என அவன் தந்தையிடம் முறையிட்டனர். கல்யாண்சேட்டிற்கும் ஆரம்பத்திலிருந்தே மகனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. புகார்கள் அடுக்கடுக்காக வரத் தொடங்கின. ஒருநாள் இரவாகியும் தங்கள் பிள்ளைகள் வீடு திரும்பாததைக் கண்ட பெற்றோர்கள், அதற்குக் காரணம் பல்லால் என முடிவு செய்து, கல்யாண் சேட்டிடம் வந்து முறையிட்டனர். அவருக்கு சினம் தலைக்கேறியது. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு பல்லாலைத் தேடி விரைந்தார். காட்டுப் பகுதியில் மகன் வழக்கமாகச் செல்லும் அந்த இடம் கல்யாண் சேட்டிற்குப் பரிச்சயமானதுதான்.
விநாயகர் சிலை முன் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தான் மகன். கண்களை மூடியபடி அவன் விநாயக புராணத்தை உச்சரிக்க, மற்ற சிறுவர்கள் மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கோபத்தின் உச்சிக்குச் சென்ற கல்யாண்சேட், மகன் என்றும் பாராமல் குச்சியால் அவனை விளாசித் தள்ளினார். அவனோ எதையும் உணராது கணேசாய நமஹ என்ற வார்த்தையை உரத்துக் கூறியபடி மூர்ச்சை அடைந்தான். அந்த நிலையிலும் மகனை அடிப்பதை தந்தை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் களைப்படைந்தவுடன், அருகிலிருந்த மரத்துடன் அவனைப் பிணைத்தார். உன்னை அந்த விநாயகர் வந்து விடுவித்தால்தான் உண்டு! எனக்கும் உனக்கும் இருந்த உறவு இன்றுடன் அறுந்தது! எனக் கோபமாகக் கூறியதுடன், அவன் வழிபட்ட விநாயகர் விக்ரகத்தைத் தூர எறிந்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். சிறிது நேரத்தில் பல்லால் மயக்கம் தெளிந்தான். மீண்டும் அவனிடமிருந்து கணேசாய நமஹ என்ற மந்திரமே வெளிப்பட்டது. பக்தர்களின் வேதனையை ஆண்டவன் உணரமாட்டானா என்ன? கணபதி ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் வந்து, மரத்தில் கட்டப்பட்டிருந்த பல்லாலை விடுவித்தார். அவரது ஸ்பரிசம் பல்லாலின் வேதனையைப் போக்கியது. ஒரு கூக்குரல் இடக்கூடாதா? என அன்புடன் கேட்கிறார். வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்டாலும் பல்லாலிடம் புன்னகையே பிறந்தது. எனக்கு இடர் தந்ததை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், என் சுவாமியை நிந்தித்தவர் எவராக இருப்பினும் அவர் குறைகளுடன் பிறந்து அவதியுற வேண்டும் என பல்லால் சபித்துவிடுகிறான். என்னை நிந்தித்தவர் உனது தந்தையே ! என அந்தணராக வந்த விநாயகர் கூறவும், பல்லால் மனம் நொந்துபோகிறான். விதிப்படி அது நடந்தே தீரும் எனச் சொல்லிவிட்டு, விநாயகர் அவனைத் தேற்றுகிறார். பிறகு, உனக்கு வேண்டிய வரம் எது? தயங்காமல் கேள்! என விநாயகர் பல்லாலை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவனிடம் கேட்கிறார். இந்தத் தலத்தின் பெருமையை ஓங்கச் செய்ய தாங்கள் இங்கேயே தங்கி அருள்புரிய வேண்டும்! என்ற கோரிக்கையை விநாயகர் முன் வைக்கிறான். அப்படியே ஆகட்டும்! என ஆசி வழங்கியவர், பல்லால் வைத்திருந்த இன்னொரு விக்ரகத்தில் பல்லாலேஷ்வரராக குடியேறுகிறார். |
|