Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வரத் விநாயகர்(அஷ்ட கணபதி-4) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரத் விநாயகர்
  அம்மன்/தாயார்: ரித்தி, சித்தி
  ஊர்: பாலி
  மாவட்டம்: புனே
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள விநாயகர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரத் விநாயகர் திருக்கோயில் பாலி, புனே, மகாராஷ்டிரா.  
   
    
 பொது தகவல்:
     
  கோபுரம் இருபத்து ஐந்து அடி உயரம் கொண்டது. தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் சனியுடன் பகவான் ராகு கேதுவும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளனர். தத் மந்திரும் அருகில் உள்ளது. கோயிலின் மேற்குப் புறத்தில் சிறிய ஏரி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலில் விக்ரகம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கணபதியின் வடிவம், இடஞ்சுழியாக உள்ளது. சதுர்த்தியன்று இவரை வழிபட்டு தேங்காயைப் பிரசாதமாகப் பெறும் அன்பர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. கர்ப்பகிரஹம் எட்டடி நீளம், எட்டடி அகலத்தில் உள்ளது. புராதன விக்ரகம் வெளிப்புறமும் புது விக்ரகம் உட்புறமும் நிறுவப்பட்டுள்ளன. ரித்தி, சித்தி மூர்த்தங்களும் வரத விநாயகர் அருகில் வைக்கப்பட்டுள்ளன. நந்தா தீபம் ஒன்று இங்கே தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கிறது! விநாயகர் சன்னதிக்கு அருகில் கீழ்ப்புறம் மங்கலேஷ்வர் குடிகொண்டுள்ளார். அவரை தரிசித்த பிறகே வரத் விநாயகரை பக்தர்கள் வழிபடுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
 

புராண காலத்தில், கவுண்டின்யபுரம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு பீமா என்ற அரசன் ஆண்டு வந்தான். புத்திர பாக்கியம் இல்லாததால் ராஜகுருவின் ஆலோசனைப்படி, பட்டத்து அரசியுடன் வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான். வனத்தில் அவர் மகரிஷி விஸ்வாமித்திரரைச் சந்திக்க நேர்ந்தது. விஸ்வாமித்திரர் அரசனுக்கு ஏகாட்சர கணபதி மந்திரத்தை உபதேசித்து, அருகிலிருந்த ஆலயத்தில் தங்கி தவமிருக்கச் சொன்னார். இறையருளாலும் தவ மகிமையாலும் சில நாட்களில் ராணி கருவுற்றாள். தம்பதிகளுக்கு அழகிய ஆண் மகவு ஒன்று பிறந்தது. ருக்மகந்தன் என அக்குழந்தைக்குப் பெயரிட்டனர். வசீகரத்துடன் நற்குணங்களும் நிரம்பப் பெற்ற ஏகாட்சர மந்திரத்தை புதல்வனுக்கும் முறைப்படி உபதேசித்திருந்ததால், ருக்மகந்தனுக்கு விநாயகர் அருளும் கூடியிருந்தது. ஒருநாள் ருக்மகந்தன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். பசியும் தாகமும் தாக்க, அருகிலிருந்த வாசக்னவி என்ற மகரிஷியின் குடிலுக்குச் சென்றான். களைப்புடன் வந்த இளவரசனுக்கு முகமன் கூறி வரவேற்ற முனிவர், குடிலில் தங்கி இளைப்பாறும்படி சொன்னார். தனது பத்தினியிடம் ஆவன செய்யுமாறு பணித்துவிட்டு நீராடச் சென்றார். குடிலில் நுழைந்த இளவரசனின் தோற்றமும் கம்பீரமும் ரிஷி பத்தினி முகுந்தாவை நிலைமறக்க வைத்தது. இயல்பிலேயே நற்குணங்கள் நிறைந்த ருக்மகந்தன் முகுந்தாவின் ஆசையை ஏற்க மறுத்தான். சீற்றம் கொண்ட முகுந்தா அவனை பெருநோய் பீடிக்க சபித்தாள். உருமாறி குரூபியான ருக்மகந்தன் அப்போதும் கலங்காமல் விநாயகர் அருளை வேண்டி தவமிருந்தான்.

அது சமயம் நாரதர், ருக்மகந்தனைச் சந்தித்து, சிந்தாமணி என்னும் ஏரியில் நீராடி தவத்தை மேலும் தொடரப் பணித்தார். நாரதரின் அறிவுரைப்படியே ருக்மகந்தன் ஏரியில் நீராடினான். அவனது பழைய உருவம் மீண்டும் திரும்பியது. ரிஷி பத்தினி முகுந்தாவினால் ருக்மகந்தனை மறக்க இயலவில்லை. பத்தினியின் மனநிலையை அறிந்த இந்திரன், ருக்மகந்தன் உருக்கொண்டு முகுந்தாவின் ஆசையைத் தணித்தான். அதன் பலனாக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். கிரித்சமதா என்ற நாமத்தை, வாசக்னவி முனிவர் அக்குழந்தைக்கு சூட்டினார். வேத மந்திரங்களை முறைப்படி உபதேசித்தார். பல முனிவர்களின் ஆசியும் சேர்ந்து கிரித்சமதாவின் வேத அறிவும் வாக்குத் திறமையும் ஞானமும் பெருகிக்கொண்டே போனது. ஒருசமயம், மகத நாட்டில் ரிஷிகள் அத்ரியும் விஸ்வாமித்திரரும் பங்கேற்ற வாதப் பிரதிவாதத்தில், கிரித்சமதாவும் கலந்து கொள்ள நேரிட்டது. கிரித்சமதா முழு வீச்சில் தனது வாதத்தை எடுத்துவைத்த சமயத்தில், ரிஷி அத்ரிக்கு சினம் மேலிட்டது. நீ வாசக்னவியின் புதல்வன் அல்லன்! எனவே இந்தப் போட்டியில் பங்கேற்க உனக்குத் தகுதியில்லை! என்று ஏளனம் செய்துவிடுகிறார். அவமானத்தைத் தாங்க இயலாமல் துடிதுடித்துப் போன கிரித்சமதா தன் தாய் முகுந்தாவிடமே சென்று உண்மையை உரைக்க வேண்டினான். முகுந்தாவும் வேறுவழியின்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். பரிதவித்துப்போன கிரித்சமதா தாய்மீது ஏற்பட்ட சினத்தை, அடக்க இயலாமல் நீங்கள் எவருமே தீண்ட முடியாத ஒரு முள் மரமாக மாறக் கடவீர்களாக! என்று சாபமிட்டான். நான் உன் தாய் என்பதையும் மறந்தாய்! என் சாபத்தை நீ பெற்றுக்கொள்! இரக்கமில்லாத ஓர் அரக்கனை நீ மகனாகப் பெறுவாய்! என்று முகுந்தாவும் பதிலுக்கு கிரித்சமதாவைச் சபித்துவிட்டு முள் மரமாக மாறினாள். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.

கிரித்சமதா இந்திரனின் மகன் என்ற உண்மையை அது வெளிப்படுத்த, வெட்கம் மேலிட; புஷ்பக் என்ற வனத்திற்குச் சென்று கிரித்சமதா தனிமையில் கடும் தவம் புரியத் தொடங்கினான். விநாயகரை தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு வெறும் இலை, தழைகளை மட்டுமே உண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். முடிவில், விநாயகர் அவனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டிய வரத்தைக் கோருமாறு பணித்தார். இறைவனே! எனக்கு பிரம்ம ஞானத்தை அளிப்பீர்களாக! இந்த வனத்தில் தாங்கள் என்றும் உறைய வேண்டும். தங்களை தரிசிக்க வருபவர்களுக்கு சித்தியையும் முக்தியையும் அளிக்க வேண்டும். கிரித்சமதா கேட்ட வரத்தை அவனுக்கு அளித்தார் கணபதி. கிரித்சமதா! வேதம் உணர்ந்து மேன்மையை அடைந்த ரிஷி முனிவர்களுள் நீயும் ஒருவனாகக் கருதப்படுவாய். கணாபத்ய சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தவனாகவும் நீயே புகழ் அடைவாய். கலியுகத்தில் இந்த புஷ்பக் வனம் பத்ரக் என்ற நாமத்தை அடையும். இங்குவந்து நீராடி எம்மை தரிசித்து தான தருமங்கள் செய்பவர்களுக்கு, வேண்டியன யாவும் கிட்டும். எனது பூரண அருள் கிடைக்கும். விநாயகர் சொல்லி மறைந்ததும், தான் தவம் செய்த இடத்திலேயே ஓர் ஆலயத்தை நிறுவி விநாயகரின் விக்கிரகத்தையும் கிரித்சமதா பிரதிஷ்டை செய்தான். வேண்டும் வரத்தை அளிப்பவர் என்பதால், வரத் விநாயகர் என்ற நாமத்துடன் இந்த விநாயகர் துதிக்கப்படுகிறார்,

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விநாயகர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar