பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திரம் தினத்திற்கு 10 நாள் முன்பாக திருவிழா ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையறாக்கள் மூலமாக திருவிழா நடத்தப்படுகிறது. 10-வது நாள் பங்குனி உத்திரத்தன்று மாலை ஊர் மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பங்குனி உத்திரத்தின் மறுநாள் மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டு வழியில் உள்ள ஊரின் மண்டகப்படிகளில் அருள்பாலித்து விட்டு கடைசியாக முத்தனேந்தல் வரும். அங்குள்ள ஆற்றில் தீர்த்தமாடிய பின் மறுநாள் சுவாமி கோயிலுக்கு சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறும்.இது தவிர மற்றும் வருடத்தின் அனைத்து விசேஷ தினத்தன்று சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார்.
தல சிறப்பு:
வருடத்தின் அனைத்து தினங்களும் அதிகாலை சூரிய ஒளி கோயிலின் உட்புறம் தரையில் பட்டு மூலவரின் மீது பிரதிபலிக்கும். அம்மன் கோயில் கட்டுவதற்காக நிலத்தை தோடிய போது கிடைத்த சிவலிங்கம் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி திருக்கோயில்
கட்டிக்குளம், மானாமதுரை வட்டம், சிவகங்கை-630 609.
போன்:
+9188831 31361, 73736 42020
பொது தகவல்:
ஆகம விதிகளின்படியே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக கொடிமரம் அமைந்துள்ளது. மூலவர் விநாயகராக இருந்தாலும் கோயிலின் முன் பீடத்தில் நந்தியே பிரதானமாகவும் அதன் அருகில் மூஞ்சுறும் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறத்தில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
திருமணம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு மற்றும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அங்கபிரதட்சணம், மொட்டையடித்தல், பால்குடம், காவடி எடுத்தல், குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கரும்புத் தொட்டிலில் எடுத்து செல்லுதல், மற்றும் பக்தர்கள் தங்கம், வைர ஆபரணங்கள் அளித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
300 ஆண்டுகள் பழமையான இக் கோயில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. பழமையும் பாரம்பரியமும் கொண்ட இக்கோயில் இராமலிங்க சுவாமி எனும் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தல வரலாறு:
இராமலிங்க சுவாமி எனும் சித்தர் பொதிகை மலையில் இருந்து விநாயகர் சிலையை எடுத்து வந்தார். வரும் வழியில் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து வீலி, விலா, வேம்பு, அரசு, சங்கு எனும் ஐந்து மரங்களை தனது தவ வலிமை மூலமாக வளர்த்து அந்த இடத்தில் விநாயகர் சிலையை வைத்து கோயில் எழுப்பினார். எனவே இராமலிங்க சுவாமிக்கு அஞ்சுமரத்தான் என்ற பெயரும் உண்டு. இராமலிங்க சுவாமி மூலம் உருவான கோயில் என்பதால் தான் மூலவர் விநாயகர் என்றாலும் இராமலிங்க சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. படம், தகவல்: மா.பிரபாகரன்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வருடத்தின் அனைத்து தினங்களும் அதிகாலை சூரிய ஒளி கோயிலின் உட்புறம் தரையில் பட்டு மூலவரின் மீது பிரதிபலிக்கும். அம்மன் கோயில் கட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது கிடைத்த சிவலிங்கம் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இருப்பிடம் : மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் எனும் இடத்தில் இறங்கி 6 கி.மீ தெற்கு நோக்கி சென்றால் கோயிலை அடையலாம். மானாமதுரையில் இருந்து மினி பஸ் வசதி உண்டு.