அழகிய, கிழக்குப் பார்த்த ஆலயம், அன்பே உருவெனக் கொண்டு காட்சி தரும் அம்பாளும் கிழக்குப் பார்த்தபடி குடியமர்த்திருக்கிறாள். பாலமுருகன், பாலவிநாயகர், ஆகமப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்கள் எனச் சன்னிதிகள் உள்ளன. உற்சவ மூர்த்திகளாக ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சி அம்பாளும் அழகு ததும்பக் காட்சி தருகின்றனர். இங்கு தியான மண்டபமும் உண்டு.
பிரார்த்தனை
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட்டால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம். அதாவது 25 கிராம் ஏலக்காயை எடுத்துச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு ஊசி நூல் கொண்டு கோத்து மாலையாக்கி, அந்த ஏலக்காய் மாலையை அம்பாளுக்குச் சார்த்திப் பிரார்த்திக்க வேண்டும், பிறகு வேண்டிக்கொண்ட பக்தரின் பெயர், முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து, பதிவு எண் கொடுக்கிறார்கள். அந்த பதிவு எண்ணையும் தேதியையும் ஏலக்காய் மாலையில் குறித்துக்கொண்டு ஒரு டப்பாவில் பத்திரமாக வைத்துவிடுகிறார்கள்.
தலபெருமை:
கடந்த வருஷம் மட்டுமே சுமார் 600 பேர் வரை ஏலக்காய் மாலை சார்த்தி, திருமண பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதில் டில்லி, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் உண்டு, அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி, கேட்டதையெல்லாம் தந்தருளக்கூடியவள் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அம்பாளின் அனுக்கிரகத்தால், விரைவில் திருமணம் நடந்தேறியதும் மாதந்தோறும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையைச் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருவது நல்ல விஷயம். அதுவும் கோயில் கருவறையில் இருக்கிற மூலவிக்கிரத்துக்கு பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என்று குழந்தைகளே செய்யச் செய்ய.. அதில் ஆர்வமும் பிரார்த்தனையில் ஈடுபாடும் இறைபக்தி உணர்வும் அவர்களிடம் மேலோங்கும்! என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
தல வரலாறு:
கேரளாவில் கோயில் குறித்துப் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் காமாட்சி அம்பாளுக்கு குழந்தைகள் தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்தால் அவர்கள் படிப்பிலும் வாழ்விலும் சூட்டிகையாக இருப்பார்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியத்துடனும் இறையுணர்வுடனும் திகழ்வார்கள் எனத் தெரிவிக்கப்பட அது முதல், வருஷாபிஷேக நாளான ஆனி மாத உத்திர நன்னாளில் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்.