கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகையன்று மதியம் ஆறாட்டு பூஜை நடக்கிறது. இந்த பூஜையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம்.
விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
இது தவிர, நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
குமாரநல்லூர் திருக்கார்த்திகை விழா கேரளாவில் பிரசித்தி பெற்றது. இரண்டாம் திருவிழா முதல் பத்தாம் திருவிழா வரை காலையில் ஆராட்டு முறையும், திருக்கார்த்திகையன்று மதியம் ஆராட்டு பூஜையும் நடக்கிறது. நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் முறை ஜபம், சப்தாகம் ஆகிய சடங்குகள் நடக்கின்றன. த்வஜ பிரதிஷ்டை தினம் ஆகியவையும் முக்கிய விழா நாட்களாகும்.
வடக்குநாதரை வரவழைக்கும் விழா: கேரளா திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பூரம் விழா நடக்கிறது. சிவபெருமான் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். குமாரநல்லூர் கோயிலில் திருக்கார்த்திகையன்று ஆராட்டு விழாவைக் காண திருச்சூரிலிருந்து வடக்கு நாதரே வருவதாக ஐதீகம்.
தல சிறப்பு:
கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் வில்வமங்கலம் என்ற முனிவர் இருந்தார். இவரது அகக்கண்ணில் வடக்குநாதர் தனது கோயிலின் தெற்கு மதில் மேல் குடிகொண்டு ஆராட்டைக் காண்பது தெரியவந்தது. அன்று முதல் வடக்குநாதர் கோயிலில் திருக்கார்த்திகையன்று தெற்கு மதிலில்தான் உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு பகவதி திருக்கோயில்,
குமாரநல்லூர் - 680664,
கோட்டயம் மாவட்டம்,
கேரளா மாநிலம்.
போன்:
+91-481-231 2737
பொது தகவல்:
இத்தலத்திற்கு அருகில் அற்புத நாராயணன் திருக்கோயில், மகாதேவர் திருக்கோயில், மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில், கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், சுப்ரமணியர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.
கோயிலின் இதர சன்னிதிகள்: குமாரநல்லூர் கோயிலில் துர்க்கை தவிர, சிவன், பத்ரகாளி, மண்டப தூணில் சாஸ்தா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சிவன் சன்னிதியில் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடும், தினமும் தாரை வழிபாடும் உண்டு. பத்ரகாளிக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குருதி வழிபாடு நடக்கிறது.
பிரார்த்தனை
நீண்டகாலம் திருமணத்தில் தடைஉள்ளவர்கள் இத்தலத்தில் "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால் "மஞ்சள் நீராட்டு' முக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.
மஞ்சள் கோயில் வளாகத்தில் தூளாக்கப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. வேண்டும் வரம் தரும் அன்னையிடம், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் மஞ்சள் வழிபாடு செய்கின்றனர். ஜாதக தோஷங்களுக்கு பரிகாரம் தேடவும், சுயம்வர புஷ்பாஞ்சலி பூஜை நடத்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
குடும்பத்தில் பிரச்னை நீங்கி, தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு பட்டு, தாலி சாத்தப்படுகிறது. அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோயில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
தலபெருமை:
2ஆயிரத்து400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம் தூர விலகி விடுகிறது.
அஞ்சன சிலையில் வார்த்தெடுக்கப்பட்ட திருக்கோலம், கைகளில் சங்கு, சக்கரம், பாதங்களில் பொற்சிலம்பு, கழுத்தில் முத்து மாலை, சந்திரவதனம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறாள் பராசக்தியின் வடிவமான குமாரநல்லூர் கார்த்தியாயினி தேவி. துர்காதேவியின் திருக்கோலங்களில் கார்த்தியாயினியும் ஒன்று. மதுரை மீனாட்சியின் மறு அவதாரம்: பரசுராமர் உருவாக்கிய கேரள மண்ணில் அமைந்துள்ளது கோட்டயம். இங்குள்ள குமாரநல்லூரில் அன்னை பகவதி, தேவியின் பூரண ரூபமாக, அண்ட சராசரங்களை ஆள்பவளாக அருள்பாலிக்கிறாள். மதுரை மீனாட்சி அம்மனின் மறு அவதாரமாக இத்தல கார்த்தியாயினி அருள்பாலிக்கிறாள்.
பரசுராமரால் உருவான கோயில்: திருமாலின் அவதாரம் பரசுராமர். கனல் பறக்கும் கண்கள், கையில் கோடரி, ஜடாதாரியான முகம், காவி உடையுடன் சன்னியாசிக் கோலம். அவர் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பல கோயில்களை நிர்மாணித்த பின் பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதற்காக கருங்கல் சிலை ஒன்றை வடித்தார். தேவியின் தெய்வீக வடிவம் கொண்ட மும்மூர்த்திகள் ஒருசேர, தேவியின் பாதத்தை சாஷ்டாங்கமாக வணங்கினர். அந்த சிலையை தண்ணீரில் வைத்து (ஜலவாசம்) ஆயிரம் ஆண்டுகள் விக்ரக பூஜை நடத்த, வேதகிரி சிருங்கத்தில் (மலை) மோன நிலையில் அமர்ந்தார் பரசுராமர். வேதகிரி இன்றும் புண்ணிய தலமாக விளங்குகிறது. அந்த சிருங்கம் பகவதிமலை என்று அழைக்கப்படுகிறது.
குளித்து, சுத்தமான ஆடை அணிந்து, கிழக்க கோபுர நுழைவுவாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தை வணங்கி, பிரதட்சணம் (வலம்) செய்ய வேண்டும். தொடர்ந்து பரமசிவன் சன்னிதியில் வணங்கிய பின், நாலம்பல நடைக்குள் நுழைந்து, தேவி கோயில், மண்டபத்தை சுற்றி வரவேண்டும். மண்டபத்தின் தென் மேற்கு மூலையில் மணிபூஷணன், சாஸ்தாவை வழிபட்டு, தொடர்ந்து திருநடை சென்று தேவியை பிரார்த்திக்க வேண்டும்.
தல வரலாறு:
பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை ஜலவாசத்தில் வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார். கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. ""அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர்'' என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மன்னன் உத்தரவிட்டான்.
ஆனால், பூஜாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 41வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார் பூஜாரி. அப்போது அசரீரி தோன்றி, ""இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடு'' என்றது. கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, அதன்பின் அவர் மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி சென்றார். இந்த பயணம் மதுரையைக்கடந்து கேரளாவைத்தொட்டது.
குமாரநல்லுõரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கர்ப்பகிரகத்தில் அந்த ஒளி ஐக்கியமானது. அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில்,""குமரன் அல்ல ஊரில்'' (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது. இதனால் இத்தலம் "குமாரநல்லூர் என அழைக்கப்படுகிறது. இதனால் கலங்கிப்போன மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதிக்கு சிலை பிரதிஷ்டை முடித்து விட்டு அதன் பின் இங்கு வரலாம் என்று நினைத்து கொண்டு வைக்கம் நோக்கி சென்றான்.
வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நேரம் நெருங்கியது. அப்போது அதிசயத்தக்கவகையில், காவி உடை மற்றும் ஜடாமுடி கோலத்துடன் ஒரு சன்னியாசி கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு திடீரென மாயமானார். இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.
மதுரையிலிருந்து தெய்வீக ஒளியால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோயில் பூசாரியானார். இவரது வாரிசுகள் இன்றும் கோயில் அருகே தங்கியிருந்து பூஜைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
கார்த்தியாயினி வரலாறு: ஒரு சமயம் மகிஷாசுரன், கார்த்தியாயன மகரிஷியின் மகனை பெண் வடிவம் கொண்டு மோகிக்கச் செய்தான். இதனால் கோபம் கொண்ட கார்த்தியாயனர். பெண் உருவம் கொண்டு என் மகனை நிலைதடுமாறச் செய்தமையால் நீ ஒரு பெண்ணாலேயே மடிவாய், என சாபமிட்டார். மகிஷாசுரனை அழிக்கவும், மகரிஷியின் சாபத்தை நிறைவேற்றவும், தேவர்கள் கார்த்தியாயன ஆசிரமத்திற்கு வந்து தங்கி, பராசக்தியை குறித்து தவம் செய்தனர். தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற பராசக்தி கார்த்தியாயன ஆசிரமத்தில் அவதரித்து, அந்த கோத்ரத்தில் பிறந்ததால், கார்த்தியாயினி எனபெயர் பெற்றாள்.
மகிஷாசுரனின் அட்டகாசம் பெருகியதால், மும்மூர்த்திகளும் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு சக்தியை உருவாக்கினர். அந்த மகாசக்தியை கார்த்தியாயன மகரிஷி வழிபட்டதால் இவளும் கார்த்தியாயினி என பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றனர். கார்த்தியாயன மகரிஷிக்கு மகளாக பிறந்த கார்த்தியாயினி புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகாலட்சுமியாக அவதாரம் செய்தாள் என்றும். சுக்கிலபட்ச அஷ்டமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும், நவமியில் தேவர்கள் அவளை வழிபட்டனர் என்றும், விஜயதசமி அன்று அவள் தேவர்களிடம் விடைபெற்று தேவி வாசம் செய்யும் மணித்வீபம் சென்றடைந்தாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
மகிஷாசுரனை அழிப்பதற்காக அவதரித்த கார்த்தியாயினிக்கு சிவதேஜஸ் முகமாகவும், யமன் தேஜஸ் கேசங்களாகவும், அக்னி தேஜஸ் மூன்று கண்களாகவும், சந்தியா தேஜஸ் மூன்று புருவங்களாகவும், தட்சனின் தேஜஸ் அழகிய பற்களாகவும், குபேர தேஜஸ் காதுகளாகவும், கருணை தேஜஸ் மேல் உதடாகவும், கார்த்திகேயன் தேஜஸ் கீழ் உதடாகவும், விஷ்ணு தேஜஸ் 18 கரங்களாகவும் தோன்றின.
கார்த்தியாயினியின் முகம் சிவப்பாகவும், கைகள் நீல நிறத்திலும், மத்திய பாகம் வெளுப்பாகவும் இருந்தது. வண்ண மலர்மாலை, ஆபரணங்கள் இவள் அணிந்திருந்ததாக வைக்ருதிக ரகசியம் கூறுகிறது. மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கார்த்தியாயினிக்கு அனைத்து தேவர்களும் ஆயுதங்களை உருவாக்கி, கொடுத்தனர். சிவன் சூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி பகவான் சக்தியையும், வாயு வில் மற்றும் அம்பறாதூணியையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் மணியையும், எமன் காலதண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரம்மா அட்சமாலையையும் கொடுத்தனர்.
கிருஷ்ணனை தங்களது கணவனாக அடைவதற்கு கோபியர்கள் யமுனை நதிக்கரையில் கார்த்தியாயினிக்கு பூஜைகள் செய்ததாக கிருஷ்ணபுராணம் கூறுகிறது. நவராத்திரியின் ஆறாவது நாளில் உபாசனைக்குரிய தேவதையாக கார்த்தியாயினி பூஜிக்கப்படுகிறாள். இவளை உபாசிக்கும் பக்தனின் மனம் அமைதி அடைகிறது. காசியில் ஆத்ம விஸ்வேஸ்வரர் கோயிலில் பின்பக்க நுழைவு வாயிலை அடுத்துள்ள சுற்றுச்சுவரில் கார்த்தியாயினி காவல் தெய்வமாக ஆராதிக்கப்படுகிறாள். நவராத்திரியின் ஆறாம் நாள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் வில்வமங்கலம் என்ற முனிவர் இருந்தார். இவரது அகக்கண்ணில் வடக்குநாதர் தனது கோயிலின் தெற்கு மதில் மேல் குடிகொண்டு ஆராட்டைக் காண்பது தெரியவந்தது. அன்று முதல் வடக்குநாதர் கோயிலில் திருக்கார்த்திகையன்று தெற்கு மதிலில்தான் உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.
இருப்பிடம் : கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் குமாரநல்லூர் அமைந்துள்ளது. அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
கோட்டயத்திலிருந்து கோயிலுக்கு நேரடிபஸ் வசதிஉள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோட்டயம்
அருகிலுள்ள விமான நிலையம் :
கொச்சி
தங்கும் வசதி :
கோட்டயத்தில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்