ஆண்டுதோறும் சித்திரை மாத செடல் உற்சவத்தில் முதல் நாள் சாகை வார்த்தல், இரண்டாம் நாள் செடல், தேர் வீதியுலா, மூன்றாம் நாள் சித்ரா பவுர்ணமி காளி பூஜை, நான்காம் நாள் கங்கையம்மன் ஊஞ்சல் உற்சவம், 5ம் நாள் சூலத்தம்மன் பாலாபிஷேகம், 6ம் தேதி பூச்சொரிதல், 7ம் நாள் கரகம் கருட நதி செல்லுதல், 8ம் நாள் காத்தவராய சுவாமிக்கு படையலிடுதல், காத்தவராய கழு மரம் எனும் தெருக்கூத்து ஐதீகம் உற்வசம் நடக்கிறது.
தல சிறப்பு:
வேம்புமரப்புற்றின் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மன் என்பது சிறப்பம்சமாகும். மற்றும் இங்குஞான தட்சிணாமூர்த்தி சுவாமி யோக நிலையில் காட்சியளிப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6:30 மணி முதல், பகல் 11:30 வரையும், மாலை 5:30 முதல், இரவு 8:30 வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரவூர் மாரியம்மன் திருக்கோயில்,
வண்டிப்பாளையம்,
கடலூர் - 607004.
போன்:
+91 94433 23545, 99526 05073
பொது தகவல்:
கோயில் கிழக்கு திசை நோக்கியும், கொல்கத்தா காளியம்மன் கோயில் வடிவமைப்பிலும் உள்ளது. கோயில் வளாகத்தில் வலம் சுழி விநாயகர், சூலத்தம்மன், வெங்கடாஜல பெருமாள், சப்த கன்னிகைகள், வள்ளி தெய்வாணை சமேத சக்திவேல் முருகன், கெஜலட்சுமி, விஷ்ணு துர்கா தேவி, நவக்கிரகம், சஞ்சீவினி ஆஞ்சநேயர், ஆரியமாலா காத்தவராயன் கருப்பழகி, சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் அனைத்துவித சகல தோஷங்களும் நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் அலகு குத்தி செடல், பாடை கட்டி செடல், அக்னி சட்டி ஏந்ததுல், 108 அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயில் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கோயிலுக்கு எந்த பக்தர்கள் வந்தாலும் அன்றிரவு அவர்கள் கனவில் அம்மன் தோன்றுவதாக நம்பிக்கை உள்ளது. காளிகா தேவியின் குலதெய்வ பக்தர்களுடன் ஊர் மக்கள் ஆலயத்தின் வடதிசையில் உள்ள மாமரம் அடியில் சித்திரை பவுர்ணமி தினத்தில் அந்திசாயும் நேரத்தில் ஊரணி பொங்கலிட்டு 21 மண் பிள்ளையார் பிடித்து காளிகாதேவியை வழிபட்டு வந்தனர். இக்கால கட்டத்தில் ஒரு முறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.வரவூர் மாரியம்மன் கோயிலின் வடபுறம் இருந்த பனைமரம் ஒன்று வேருடன் கோயில் குடில் மீது சாய்ந்தது. பனைமரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். அப்போது பக்தர் ஒருவர் கடப்பாறையுடன் வந்து மரத்தின் வேரை பறித்த போது, பூமியில் இருந்து வினோத ஓசை கேட்டது.அப்போது, கையினால் மண்ணை தோண்டிய போது, குங்கும நிறத்தில் மண்ணின் நிறம் மாறியிருந்தது. அந்த இடத்தில் இருதிருக்கரத்துடன் வலது மேற்கையில் திரிசூலமும், இடது மேற்கையில் அக்னி சட்டி ஏந்தியவாறு காதில் மகர குண்டலம் அணிந்து காளியம்மன் சிலை தென்பட்டது. காளிகா தேவியே சிலை வடிவில் தோன்றியிருக்கிறாள் என்ற மிகழ்ச்சியுடன் காளியம்மன் சிலையை காளிகா பரமேஸ்வரி என பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். மேலும், இக்கோயிலில் கங்யைம்மன் என அழைக்கப்படும் கங்கா தேவியானவள், வாகன ஓட்டிகளுக்கு வழிதுணையாக இருந்து வருகிறாள் என பக்தர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு:
மூன்று தலைமுறைக்கு முன், பருவமழை பெய்த வேளையில் வண்டிப்பாளையத்தில் இருந்து விவசாயி ஒருவர் இரட்டை மாடு பூட்டிய வண்டியில் அதிகாலை திருப்பாதிரிப்புலியூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் பனை ஓலையிலான சம்பு குடை அணிந்து கையில் லாந்தர் விளக்குடன் வந்த மூதாட்டி, விவசாயிடம் கருடநதிக்கரைக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் எனக் கேட்டார்.விவசாயி ஏன் நதிக்கரையை கேட்கிறீர்கள் எனக் கேட்டதும், மூதாட்டி நான் தென்மேற்கு திசையில் நெடுந்தொலைவில் உள்ள வரவூர் கிராமத்தில் இருந்து வருகிறேன்.
இங்குள்ள கருடநதிக்கரையில் அப்பர்பெருமான் அருங்கரையேறிய புண்ணிய பூமியில், மயானத்திற்கு (ஸ்ரீகாளிதேவிக்கு சித்திரை பவுர்ணமி பூஜை நடக்கும்) அருகில் வேம்பு மரத்தடியில் அமர வந்திருக்கிறேன் எனக் கூறி விவசாயியை கடந்துச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் விவசாயி, மூதாட்டியை திரும்பி பார்த்த போது, சாலையில் லாந்தர் விளக்கு மட்டுமே சென்றது. மூதாட்டியின் உருவம் தெரியவில்லை. விவசாயி நடந்த சம்பவத்தை மக்களிடம் கூறினார். மக்கள் திரண்டு கருட நதிக்கரையில் உள்ள மயானத்திற்கு சென்று மூதாட்டியை தேடிய போது வேம்பு மரத்தின் கீழ் ஆளுயர புற்றின் மீது நாகம் படம் எடுத்து ஆடி காட்சியளித்தது. அந்நேரத்தில், ஒரு குரல், நான் வரவூரில் இருந்து வந்திருக்கிறேன்; இங்கு அமர்ந்து கால காலத்திற்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்; என்னை மனதார வேண்டும் பக்தர்களுக்கு மகிழ்வான வாழ்வு தருவேன் எனக் கூறி நின்றது. அன்று முதல், புற்றுக்கு பால் வைத்து வழிபட்டனர். சில ஆண்டுகள் கழித்து வண்டிப்பாளையத்தில் காலரா நோய் பரவியது. இந்நோயின் சீற்றம் தனிய அம்மன் பூஜைக்காக வேண்டி வேம்பு மரத்தின் கீழ் இருக்கும் புற்றின் ஈசானிய திசையில் மக்கள் ஊற்று கிணறு தோண்டினார்கள். தோண்டிய கிணற்றில் நீருடன் சேர்ந்து பழமையான மாரியம்மன் சிலை கிடைத்தது. இச்சிலையை கீற்று கொட்டகையில் வைத்து வரவூர் மாரியம்மன் என வழிப்பட்டனர். அன்று முதல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, கிணற்று நீர் தீர்த்தத்தை உடல்மீது தெளித்து, அருந்தினால் அம்மை நோயுடன் அனைத்து நோய்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வேம்புமரப்புற்றின் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மன் என்பது சிறப்பம்சமாகும். மற்றும் இங்குஞான தட்சிணாமூர்த்தி சுவாமி யோக நிலையில் காட்சியளிப்பது சிறப்பாகும்.