ஐப்பசிமாத தேய்பிறை அஷ்டமி திதியன்று பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சன்னிதியின் வருட வைபவம் மகாசிவராத்திரி இரவு முழுவதும் ஆராதிக்கப்படும் ஒரு புனித திருவிழாவாகும். காலபைரவர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
பக்தர்கள் கொடுக்கும் மது பாட்டிலை பூசாரி திறந்து, அதை ஒரு தட்டில் ஊற்றி கால பைரவரின் வாயருகே வைக்கிறார். என்ன ஆச்சரியம்? சில நொடிகளில் தட்டில் ஊற்றப்பட்ட மதுவை உறிஞ்சிக் கொள்கிறார் காலபைரவர். இரண்டு, மூன்று முறை மது உறிஞ்சப்பட்டதும் மீதமுள்ள மது, பிரசாதமாக அதைத் தந்த பக்தருக்கே வழங்கப்படுகிறது. பைரவர் வாயில் சென்ற மது எப்படி எங்கே சென்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக இருக்கின்றது. மிகப்பழமையான இக்காலபைரவர் தலத்தில் தந்திர வழிபாடு முதன்மையானது என்றாலும் கூட, இந்த மாயம் யாருக்கும் விடை தெரியாத புதிராகவே உள்ளது. இந்த நிகழ்வைக் காண்பதற்கும், உறிஞ்சப்படும் மது எங்கே செல்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் ஏராளமான வெளிநாட்டவர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் யாராலும் இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்,
உஜ்ஜைனி, 456001
மத்திய பிரதேசம்.
பொது தகவல்:
இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனி சற்றே வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. உஜ்ஜையினி காலபைரவர் கோயிலின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் மால்வா கட்டடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. கோயில் சுவர்களில் அழகிய வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணப்படும் பைரவர்களைப் போல் அல்லாமல், பெரிய அளவிலான சிரசு மட்டும் கருவறையில் காணப்படுகிறது. இங்கு நடைபெறும் பூஜைகளும் வித்தியாசமாகவே உள்ளன. பக்தர்கள் பூஜைக்கு எடுத்துச் செல்லும் கூடையில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தியுடன் மதுபானமும் இருப்பதைக் காணலாம். கோயில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவி ஆகியோர் ஒருசேர அமைந்த புடைப்புச் சிற்பங்களை வடித்துள்ளனர். பைரவர் சன்னதியின் அருகில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரே நந்திதேவரும் எழுந்தருளியுள்ளனர்.
பிரார்த்தனை
சிவபெருமானின் உக்கிர வடிவமாக காலபைரவர் இருப்பினும், அவர் கருணை வடிவானவர். தன்னை வேண்டுபவர்களை எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் காத்து, அளவற்ற பேறுகளை அளிப்பவர். கிருஷ்ணபட்ச (தேய்பிறை) அஷ்டமி திதியில் பைரவருக்கு பூஜை செய்து வழிபட்டால் உடல்நலம் பெறும்; இழந்த பொருட்களை திரும்பப் பெறலாம்; செய்யும் தொழில் விருத்தியடையும்; தடைப்பட்ட திருமணம் நடக்கும்; எதிரிகள் தொல்லை நீங்கும் போன்ற நம்பிக்கைகளுடன் இத்தலத்திற்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் நம்பிக்கை வீண்போவதில்லை என்பதுதான் நிஜம்!
நேர்த்திக்கடன்:
இவர் வழித்துணைக் காவலராகவும் விளங்கின்றார். இரவு நேரங்களில் வாகனங்களில் நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள், புறப்படுவதற்கு முன்பு காலபைரவருக்கு முந்திரி மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றால், அவர்களை எந்தவித ஆபத்தும் அணுகாது என்பது ஐதிகம்.
தலபெருமை:
கோயிலுக்கு வெளியே பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் பலவித வெளிநாடு மற்றும் உள்ளூர் மதுவகைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். பக்தர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப மதுவை வாங்கி இறைவனுக்குப் படைக்கின்றனர். காலபைரவரின் வாகனமான கருப்பு சிலை வடிவ நாய் ஒன்று வாசலில் உள்ளது. பைரவரின் வாகனமாக இருப்பதால் நாய்களை பக்தர்கள் கனிவோடு உபசரிக்கின்றனர். சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான நாய்களுக்கு பக்தர்கள் உணவு வழங்குவதையும் அன்போடு கவனித்துக் கொள்ளும் காட்சியினைக் காணலாம். இச்செயல் அந்த இறைவனுக்கே அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
காபாலிகா மற்றும் அகோரி பிரிவினர்களின் தாந்திரீக பூஜைக்கு மிக முக்கியமான இடமாக விளங்குகிறது உஜ்ஜைனி. நீண்ட சடையுடன் உடல் முழுதும் திருநீறு அணிந்த சாதுக்கள் கோயிலைச் சுற்றி வலம் வருவதை சர்வ சாதாரணமாக காணலாம். கருவறையின் எதிரே தீபஸ்தம்பம் உள்ளது. இது நம்நாட்டில் உள்ளது போலல்லாமல் கூம்பு வடிவில் உள்ள உயர்ந்த தூணில், சுற்றிலும் தீபங்களை வைத்து ஏற்றுவதற்கு ஏதுவான ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் மாலைவேளையில் தீபங்கள் ஒளிர்வது கண்களை விட்டு அகலாத காட்சி. பைரவருக்கு வலப்புறம் பாதாள பைரவியின் சன்னதி உள்ளது. பூமி மட்டத்திற்குக் கீழ் சுமார் இரண்டரை அடி சதுர வடிவிலான நுழைவாயிலில் குனிந்து தவழ்ந்துதான் அங்கே செல்ல முடியும். பாதாள பைரவியின் பரவச தரிசனம் கிடைக்கிறது. இங்கு தந்திர பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்த ஜென்மத்தில் நாம் அடையும் துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் கர்வம், ஆணவம் மற்றும் பூர்வ ஜென்ம பாவங்களின் கர்மவினையாகும். காலபைரவரின் அருட்துணை கொண்டு கர்மவினைகளிலிருந்து விடுபட்டு ஞானத்தோடு, குறைவில்லா வாழ்வு வாழலாம் என்பது திண்ணம். காலபைரவர் வழித்துணை காவலராகவும் விளங்குகின்றார்.
தல வரலாறு:
சிவன்கோயில்களில் பைரவர் க்ஷேத்திரபாலகராக காத்தருளுகின்றார். சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்குள்ள தீர்த்தங்களையும், காத்து காவல் புரிபவர் பைரவர். சிவன்கோயில்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாகவே விளங்குகிறது. ஜைன, புத்த மதத்தவர்களும் பைரவரைத் தனிச் சிறப்புடன் போற்றித் துதிக்கின்றனர். மந்திர தந்திரங்களின் நாயகர், பூத வேதாள, பிரேத, பிசாசு கூட்டங்களை அடக்கி அதன் தலைவராகத் திகழ்பவர். அவற்றால் உண்டாகும் துன்பங்களை நீக்குபவர். அந்தகாசுரன் என்ற அசுரன், பஞ்சாக்னி நடுவே நீண்ட காலம் கடுந்தவம் செய்ததன் பலனாக சிவபெருமானிடம் அரிய பல வரங்களைப் பெற்றான். அதனால் அவன் ஆணவம் மேலோங்கியது, தேவர்களுக்கு இடையறாது துன்பங்களையும், தொந்தரவுகளையும்க்) கொடுத்து வந்தான். பிரம்மா முதலானோர்களாலும் இவனைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வேறுவழியில்லாமல் அவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தன்னால் வரமளிக்கப்பட்ட ஒருவன் இந்திராதி தேவர்களை கொடுமைப்படுத்துவதை எண்ணி சினம் கொண்டார் சிவனார். அந்தகாசுரனின் ஆணவத்தை ஒடுக்க முடிவு செய்தார். அவனைத் தன்னால் மட்டுமே அழிக்க இயலும் என்பதால் தன் அம்சமாக பைரவரை உருவாக்கி, அசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். கடும் சினத்துடன் சென்ற பைரவர், முதலில் அந்தகாசுரனின் படைகளைப் போரிட்டு அழித்தார். இறுதியில் அந்தகாசுரனை சூலத்தால் குத்திக் கொன்றார். அசுரன் மாண்டதால் தேவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு சிவபெருமானுக்கும் பைரவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்தனர். ஐப்பசிமாத தேய்பிறை அஷ்டமி திதியன்று பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சைவ சமய வழிபாட்டில் பைரவர் வழிபாடு பிரதானமானதாகும். அஷ்ட பைரவர்களில் முதன்மையானவர் காலபைரவர். சிவன்கோயில்களில் க்ஷேத்திரபாலனாக வீற்றிருக்கும் காலபைரவர் சில தலங்களில் தனிக்கோயிலில் பிரதான மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அவ்வாறுள்ள தலங்களில் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் குடிகொண்டுள்ள பிரசித்திபெற்ற, புராதனமான காலபைரவர் கோயில். இங்கு ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. மிகப்பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயில். பத்ராசென் எனும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாக ஸ்கந்த புராணத்தில் அவந்திகா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பக்தர்கள் கொடுக்கும் மது பாட்டிலை பூசாரி திறந்து, அதை ஒரு தட்டில் ஊற்றி கால பைரவரின் வாயருகே வைக்கிறார். என்ன ஆச்சரியம்? சில நொடிகளில் தட்டில் ஊற்றப்பட்ட மதுவை உறிஞ்சிக் கொள்கிறார் காலபைரவர். இரண்டு, மூன்று முறை மது உறிஞ்சப்பட்டதும் மீதமுள்ள மது, பிரசாதமாக அதைத் தந்த பக்தருக்கே வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண்பதற்கும், உறிஞ்சப்படும் மது எங்கே செல்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் ஏராளமான வெளிநாட்டவர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் யாராலும் இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சிறப்பு.