நித்ய ஆராதனை, மாதா மாத புனர்பூச சிறப்பு திருமஞ்சனம், ராம நவமி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. பங்குனி அமாவாசை தொடங்கி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். இங்கு ராமன் வரபிரசாதியாக உள்ளார்.
தல சிறப்பு:
இப்பூமியில் ராமருக்கு பல கோயில்கள் இருந்தாலும், ராமருக்கு விருப்பமான இத்தலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. ராமர் வடக்கு நோக்கி அருள்பாலிப்பதும், ராமர், லட்சுமணன் வில்லில் மணி இருப்பதும் இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில்,
நாகந்தூர்-605 651
பெரிய தச்சூர் வழி, செஞ்சி தாலுக்கா
விழுப்புரம் மாவட்டம்.
இங்கு முக்கிய பிரார்த்தனையாக கிரக தோஷம், சகல சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம்,பித்ரு சாபம், திருமணத்தடை குழந்தைப்பேறு, வியாபார விருத்தி போன்றவற்றிற்காக பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தாங்கள் ராமரிடம் தங்களது கோரிக்கைகளை கூறிய பின், இத்தலத்திற்கு மூன்று முறை வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக்கொள்கின்றனர். மூன்றாவது முறை வருவதற்குள் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
தலபெருமை:
வைணவ தலங்களில் திவ்ய தேசத்திற்கு இணையாக அமைந்துள்ள கோயில் இது என்பது சிறப்புக்குறியவையாகும். ராமரின் அருள் நிறைந்துள்ள இத்தலம் ஆச்சாரியன் வேதாந்த தேசிகர் திருக்கரத்தால் நவகிரகத்தில் குருவின் திசையும், அஷ்டதிக்கில் குபேரனின் திசையுமான வடதிசை நோக்கி மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குருவின் நட்சத்திரமும், ராமர் பிறந்த நட்சத்திரமுமான மூன்று புனர்பூசங்கள் தொடர்ந்து வழிபட சூரியகுலத்தில் தோன்றிய சந்திரன், ராமச்சந்திரன் அனைத்து கிரக தோஷம், சகல சர்ப தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபம், தரித்திரம், சகல விதமான பீடையும் நீக்குவார் என்றும் ராமர் வில்லில் கட்டியுள்ள மணி ஒலித்து நமக்கு அபயம் அளிக்கும் என்பதும் ஐதீகமாக கொண்டுள்ளது. இத்தலத்தில உற்சவர் கீழுள்ள செப்பு படிமத்தினாலான மூலராமர் திருவிழாக்காலங்களில் கூட வெளியே வரமாட்டார்.
தல வரலாறு:
ராமர் தன் அவதார நோக்கமான ராவண வதத்தை முடித்துகொண்டு சீதா தேவியுடன் அயோத்தி நோக்கி திரும்பும்போது, பல தலங்களில் கால் பதித்து இப்பூமியை புனிதப்படுத்தினார். அவ்வாறு வந்த ராமர் இத்தலத்ற்கு வரும்போது இங்குள்ள தடாகம் பசுமை நிறைந்த வயல்வெளி, மேனி மெருகேறிய காளைகள், மேய்ச்சலின் போதே பால் சொரியும் ஆவினங்கள், ஊரை சுற்றியும் மரங்களின் அடர்ந்த நிழல், தாமரை, அல்லி பூத்து குலுங்கும் அழகைக்கண்டு, ராமர் அங்கு சற்று இளைப்பாறி, சீதா தேவியிடம் தன் மனம் மிகவும் ஆனந்தமாக உள்ளது என்றார். இப்பயணத்தில் நான் உகந்த ஊர் இதுவே என்று அகமகிழ்ந்து உவகையோடு ராமர் கூறினார். இப்படி ராமர் வைத்த பெயரே நாளடைவில் நாகந்தூர் என மாறியது. அதன்பின், இத்தலத்தில் ராமருக்கு திருக்கோயில் எழுப்பி ஆச்சாரியன் வேதாந்த தேசிகர் திருக்கரத்தால் மூலவரும், மூலவர் பீடத்திற்கு அடியில் சத்ரு சம்ஹார யந்திரமும், பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய ஆராதனை, மாதா மாத புனர்பூச திருமஞ்சனம், வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. கால மாற்றத்தால் நின்றுபோன பூஜைகள் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் கோயில் புதுப்பிக்கப்பட்டு அதுமுதல் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இப்பூமியில் ராமருக்கு பல கோயில்கள் இருந்தாலும், ராமருக்கு விருப்பமான இத்தலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. ராமர் வடக்கு நோக்கி அருள்பாலிப்பதும், ராமர், லட்சுமணன் வில்லில் மணி இருப்பதும் இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
இருப்பிடம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ., தூரத்தில் நாகந்தூர் கிராமத்தில் பட்டாபிராமர் கோயில் அமைந்துள்ளது.