Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வாலீஸ்வரர்
  அம்மன்/தாயார்: அறம் வளர்த்த நாயகி
  தல விருட்சம்: வன்னிமரம்
  தீர்த்தம்: கங்கை நீர் (கிணற்று நீர்)
  ஆகமம்/பூஜை : சத்யோ ஜாத பந்ததி
  ஊர்: சேவூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் பிரதி திங்கட்கிழமை காலை - சோமவார பஞ்ச கவ்ய அபிஷேகம், பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, கிருத்திகை ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மாத விழாக்களில் வருடத்தில் ஆறு முறை நடைபெறும் “நடராஜர்” அபிஷேகம், வருட விழாக்களில் சிவராத்திரியும், ஆருத்ரா தரிசனமும் இத்தலத்தின் முதன்மை பெருவிழாக்கள் ஆகும்.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக முருகன் சேவற்கொடியினை ஏந்தி இருப்பார். இங்கு மாறாக சேவலையே தன் கையில் ஏந்தி உள்ளார். மேலும் சிம்ம பீடத்தில் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர்-632 106 திருப்பூர்.  
   
போன்:
   
  +91 97906 42114, 99443 93557 
    
 பொது தகவல்:
     
  கனகசபையின் எதிரே 3 நிலை சால கோபுர வாயிலைக் காணலாம். வாலீஸ்வரர் வாசல் அருகில் தெற்கு நோக்கிய வண்ணம் உள்ள நால்வர் திருமேனிகள் ஈசனைப் போற்றி துதிப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுகிறது. சோபன மண்டபத்தின் கிழக்கு பகுதியில் சனி பகவான், நவகிரஹங்கள், பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது தனிச் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதி எதிரே ராஜகோபுரம் அமைக்கும் பணி முற்றுப் பெறாத நிலையில் உள்ளது.

வாலீஸ்வரர் சன்னதியின் பின் பக்கமுள்ள மண்டபத்தில் பிருத்வி, அப்பு, வாயு, தேயு மற்றும் ஆகாச லிங்கங்கள் தனித்தனியே காணலாம். உடன் சகஸ்ர லிங்கமும் உள்ளது. சுப்ரமணியரின் சன்னதியின் பின்பக்கம் பாலதண்டாயுதபாணிக் கென தனிச்சன்னதியும் தென் மேற்குத் திசையில் நிருதி விநாயகர் சன்னதியும் உள்ளன.
ஐந்து கலசங்களைத் தாங்கி நிற்கும் 5 நிலை ராஜ கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரதான சன்னிதிகளுக்கு பொதுவான சோபன மண்டபம் உள்ளது. கோயில் கிழக்கு முகமாக உள்ளது. 12 தூண்களுடன் கூடிய திறந்த வெளி சோபன மண்டபத்தை ஒட்டி மேற்குபுறமாக வாலீஸ்வரர், முருகன் மற்றும் அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சன்னதிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பு சோமாஸ் கந்த சொரூபம் எனப்படும்.

வாலீஸ்வரர் சன்னதி அர்த்த மண்டபத்துடன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், துர்கை அருள்புரிகின்றனர். கருவறையில் வாலீஸ்வரர் லிங்கரூபில் எழுந்தருளி உள்ளார். கோமுகி அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  தொழிலில் நல்ல முன்னேற்றம், ஆயுள் விருத்தி, இழந்த பதவி பெற, 
    
நேர்த்திக்கடன்:
    
  ஈசனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் 
    
 தலபெருமை:
     
  முருகன் சன்னதியில் உள்ள முருகனும் திருவாச்சியும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டவை. பெரும்பாலான கோயில்களில் பைரவரின் வாகனமான நாய் நின்ற நிலையில் பைரவரின் வலது கைப்பக்கம் இருக்கும் இங்கு மாறாக இடது கைப் பக்கம் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. சோபன மண்டபத்தின் வட பகுதியில் தெற்கு திசை நோக்கியுள்ள கனக சபையில் நடராஜப் பெருமான் அக்னி தாண்டவ கோலத்தில் சிவகாமி அம்மையுடன் திருவருள் புரிகின்றார். எனவே இக்கோயிலை அக்னி தாண்டவ க்ஷேத்திரம் எனவும் மத்திய சிதம்பரம் எனவும் அழைக்கின்றனர்.

இக்கோயிலில் உள்ள முருகன் சன்னதி உருவான விதம் இறை உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது. சோமவார பஞ்ச கவ்ய அபிஷேகம் இத்தலத்தில் பிரசித்தம். பஞ்ச கவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் கலவையாகும். இந்த ஐந்து பொருட்களும் சிவனின் ஐந்து முகங்களைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஈசனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்தால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் புதியதாக ஆர்டர்கள் வருவதாகவும் நம்புகின்றனர். இதை விளக்கும் உண்மை சம்பவத்தைக் காணலாம்.

முன்னொரு காலத்தில் ஏழை தச்சன் ஒருவன் தனது தொழிலில் மிகுந்த நஷ்டம் அடைந்து மன வேதனையில் இருந்தான். இனி தொழிலை எப்படி தொடர்வது என்ற கலக்கத்தில் இருந்த சமயம், வியாபார நிமித்தமாக இவ்வூருக்கு வருகை புரிந்த கையோடு இக் கோயிலுக்கும் வந்தான். வாலீஸ்வரரின் ஆற்றலை அறிந்து ஐந்து வாரம் தொடர்ந்து வந்து சோமவாரத்தில் ஈசனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்து, தன்னுடைய கஷ்டத்தை நீக்கி தொழில் வளர்ச்சியடைய மனதார வேண்டிக்கொண்டார். ஐந்தாவது வாரம் கோயிலை வலம் வரும் போது ஓர் அந்தணர் தச்சனைச் சந்தித்து, “தான் ஒரு பிரம்மச்சாரி துறவரம் பூண்டு காசிக்குச் செல்கிறேன். செல்லும் போது தன்னிடம் உள்ள தானியங்களை காசியில் உள்ள அன்ன பூர்ணிக்கு தானமாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எனக்கு ஐந்து எருமை மாட்டு வண்டிகள் வேண்டும். உடனே செய்து தரவேண்டும். எத்தனை தொகை ஆகும் எனவினவி, அதற்குண்டான முழுத் தொகையையும் வழங்கினார். தச்சன் ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு வார காலத்தில் செய்து தருவதாக உறுதியளித்தார்.

பொதுவாக காளை மாடுகளை பூட்டி இயக்கும் வண்டிகள் தான் இருந்தன. எருமைகளை உழவுக்கு பயன்படுத்தி வந்தனர். எருமைகள் ஆற்றல் மிக்கவை என்பதால் வண்டிகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். அவை எருமை மாட்டு வண்டிகள் எனப்பட்டன.

தச்சன் முழுவீச்சில் செய்து முடித்து வண்டிகளை கோயிலுக்குக் கொண்டு வந்தான். கோயிலில் அந்த அந்தணரை எங்கு தேடியும் காணவில்லை. ஊர் மக்களிடம் விசாரித்தபோது அப்படி ஓர் அந்தணர் இப்பகுதியில் இல்லை எனத் தெரிவித்தனர். அப்போது தான் அந்தணர் வடிவில் வந்து தனக்கு அருளியது சாட்சாத் “வாலீஸ்வரர்” தான் என தச்சனுக்கு புரிந்தது. பஞ்சகவ்ய அபிஷேகத்தையும் தொடர்ந்து செய்துவந்தார். தொழில் விருத்தியடைந்து செல்வச் செழிப்போடு வாழ்ந்தான். இச் செய்தி சேவூர் புராணக் குறிப்பில் உள்ளது.

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மாத்தூரில் இருந்து சொக்கன் பெருமாள் என்பவர் வியாபார நிமித்தமாக இவ்வூருக்கு வந்தவர். இக் கோயிலுக்கும் வருகை புரிந்தார். தச்சனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அறிந்து தானும் ஐந்து வாரங்கள் சோமவாரத்தில் ஈசனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்தார். (சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செயல்படும் ஓரியண்டல் நூலகத்திலுள்ள “சேவூர் புராணம்” எனும் ஓலைச் சுவடியில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது.) அதன் பலனாக வணிகம் பெருகி மிகப்பெரிய செல்வந்தன் ஆனார். அதற்கு நன்றிக் கடனாக இக்கோயிலில் வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியருக்கு விமானத்துடன் கூடிய தனிச் சன்னதியினை கட்டிக் கொடுத்ததுடன், தங்கு தடையின்றி பூஜை நடத்த தேவையான பெருந்தொகையினையும் அளித்துள்ள செய்தி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள கோவை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி - 1ல் பக்கம் 124ல் காணப்படுகிறது. இச்சன்னதி13ம் நூற்றாண்டில் கொங்கு பாண்டியன் வீரபாண்டியன் காலத்தில் கட்டப்பெற்றது.

இப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்ததால் தான தர்மங்களிலும், அறநெறிகளிலும், கோயில் பூஜை வழிபாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அச்சமயத்தில் “வேமன்” எனும் அரக்கன் இம்மக்களைக் கொடுமைபடுத்தி வந்தான். ஆண்களை அறநெறி தவறி நடக்கப் பணித்தான். இதனால் கவலையுற்ற மகளிர் அனைவரும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள அம்மனிடம் முறையிட்டு, தாள் பணிந்து வேண்டினர். அம்மன் மகளிர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, கையில் இருந்த அஸ்திரத்தை ஏவி அரக்கனை தாமரை மலராக்கி தன் கையில் ஏந்திக் கொண்டாள். இதன் காரணமாக 'அறம் வளர்த்த நாயகி ' எனும் பெயரினைப் பெற்றார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் நடராஜரும் சிவகாமி அம்மையும் சரித்திர புகழ் வாய்ந்தவையாகும். இங்கு ஆடல் பெற்ற தாண்டம் “அக்னி தாண்டவமாகும்” இங்கு தாண்டவம் ஆடிய பொழுது தாண்டவத்தின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அஞ்சி தேவர்களும் முனிவர்களும் தஞ்சம் அடைந்த இடமே 'திருப்புக் கொளியூர்' (அவினாசி என தற்போது அழைக்கப்படும் ஊர்) அதன் பின் ஈசன் அங்கு எழுந்தருளி தேவர்களுக்கு அருள் பாலித்தார் என்ற செய்தி 1971 ஆம் ஆண்டில் பதிப்பாகிய அவினாசி புராணம் மற்றும் சேவூர் புராணம் ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன. இங்குள்ள நடராஜர் சிரசில் அக்னி இருப்பதைக் காணலாம்.

இத்தனை சிறப்புக்குரிய இக்கோயில் நீண்ட காலம் ஆகி கட்டிடத்திற்கு வயதாகி வலுவிழந்ததாலும், தகுந்த பராமரிப்பு இல்லாததாலும் கட்டிடம் சிறிதுசிறிதாக சிதிலமடைந்து சரிந்து விடும் நிலைக்கு ஆளானது. கோயிலைச் சுற்றி புதர் மண்டியது. ஆனால் ஈசனின் திருவருளால் பூஜை மட்டும் எந்த வித தடங்கலுமின்றி நடந்து வந்தது. கோயிலின் நிலைகண்டு சிவத் தொண்டர்களும் ஊர் மக்களும் கவலை கொண்டனர். அனைவரும் ஒன்றாகக் கூடி பேசியதில் கோயிலை புனரமைக்க ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. திருப்பணி குழு அமைக்கப்பட்டு, முறையாக அறநிலையத் துறையினரிடம் அனுமதி பெற்று கோயிலின் கட்டிட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. ஒரு நல்ல முகூர்த்த நன்நாளில் பூமி பூஜை போடப்பட்டது. நிதிநிலைக்கேற்ப கட்டிட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று நிறைவடைய 9 ஆண்டுகள் ஆயின.

அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் வேத விற்பனர்கள், ஆதின குருமகா சன்னிதானங்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு 30.6.2004 அன்று கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்கள் இருப்பது பழங்காலத்தில் அரசர்கள் கட்டிய கோயிலை நினைவுபடுத்துகின்றது. கொங்கு நாட்டு கலாச்சாரத்தின்படி தீபஸ்தம்பம் ராஜ கோபுரத்தின் எதிரே மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சதுரவடிவ பீடத்தில் விநாயகர், வாலீ சிவபூஜை செய்யும் காட்சி, வீரபத்திரர் மற்றும் நந்தி என ஒவ்வொரு பக்கத்திலும் புடைப்பு சிற்பங்களை காணலாம் இத்தீப ஸ்தம்பத்தின் நீளம் சுமார் 80 அடி இத்தீபஸ்தம்பத்தின் வடபுறம் அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் நாகர்களுடன் எழுந்தருளியுள்ளார். இதன் எதிரே வாலி நதி உள்ளது. ஒரு காலத்தில் நதியாக இருந்து தற்போது அழிந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

முருகன் சன்னதியில் 12 ம் நூற்றாண்டில் வடித்த சதுர்புஜ முருகன் சிங்க பீடத்தின் மீது நின்ற நிலையில் பின்னிரு கைகளில் வேல் மற்றும் சேவலை ஏந்தியும் முன்னிரு கைகளில் அபய, வரத ஹஸ்தம் காட்டிய படி புன்னகை ததும்பும் பேரழகுடன் அருள்பாலிக்கின்றார். மயில் வாகனம் முருகனின் இடது பக்கம் நோக்கி உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்து தெய்வயானையை மணம் முடித்த நிலையினை உணர்த்துகிறது. சுப்ரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வயானை சமேதராய் அருள்கிறார்.

அடுத்துள்ள சன்னதியில் சதுர்புஜ நாயகியாக நின்ற கோலத்தில் பின்னிரு கரங்களில் தாமரை மலரையும் தாமரை மொட்டையும், முன்னிரு கரங்களில் அபய, வரத ஹஸ்தம் காட்டி எழிலார்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார். இந்த மூன்று சன்னதிகளுக்கு உரிய வாகனங்கள் சோபன மண்டபத்தை அடுத்து விமானத்துடன் கூடிய மண்டபங்களில் காணலாம். சோம வாரத்தில் நடைபெறும் பஞ்ச கவ்ய அபிஷேக பூஜையில் தொடர்ந்து 5 வாரங்கள் செய்தால் வியாபார அபிவிருத்தி ஏற்படுகின்றதாம். ஆருத்ரா தரிசன பூஜையில் கலந்து கொண்டால் தம்பதியினர் ஒற்றுமை ஓங்கும். அம்மன் சன்னதியில் ஆடிபூரத் தன்று நடைபெறும் 'மாங்கல்ய பூஜையில் கலந்து கொண்டால் கணவரின் ஆயுள் பலம் கூடும் என நம்பப்படுகிறது.

சிதம்பரம் சென்று பூஜித்து வந்தால் என்ன பலன் கிடைக்குமோ அப்பலன் இத்தல ஈசனை பூஜித்தால் கிடைக்கும். எனவே இத்தலத்தை மத்திய சிதம்பரம் என அழைக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக கோயிலில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை நன்கு உணரமுடிகின்றது. கரிகாலன் தான் இழந்த சோழ நாட்டை வாலீஸ்வரரை பூஜித்த பின்பே மீண்டும் கைப்பற்றி அரசு புரிந்தான். கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் இந்த சேவூர் ஈசனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவுக்கு அரசன் ஆனான். சேவூர் வாலீஸ்வரரை தாள் பணிந்து வேண்டி பூஜித்தால் அரச பதவி தேடி வரும் என்பது புராண கால வரலாறு.
 
     
  தல வரலாறு:
     
  13ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 பிரிவுகளாகப் பிரித்தாண்டது. கோவை மற்றும் அவினாசி வட்டப்பகுதிகளை உள்ளடக்கியது ஆறை நாடு. ஆறை நாட்டில் அமைந்த ஊர் சேவூர் ஆகும். கொங்கு நாட்டின் தலைநகராகவும் திகழ்ந்தது. சேவூர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தில் உள்ளது. இவ்வூரில் எழுந்தருளி இருக்கும் “வாலீஸ்வரர்” கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் புராதனமானது. 'சே 'என்றால் மாடு எனப் பொருள்படும். சேவூரின் புராணப் பெயர் 'ரிஷப புரி' (மாட்டூர்) புலியும் மாடும் ஒன்றாக விளையாடிய பூமி இது.

ராமாயணம் நடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் என கூறப்படுகிறது. வாலியும் சுக்ரீவனும் சகோதரர்கள் அதில் வாலி மிகவும் பலசாலி. ராவணன் எமனையே வென்றவன். அந்த ராவணனை வென்ற இருவரில் ஒருவர் வாலி.

கிஸ்கிந்தா பகுதியை வாலி ஆண்டு வந்தான். அச் சமயத்தில் மாயாவி என்ற அசுரன் கிஸ்கிந்தா மக்களைத் துன்புறுத்தி வந்தான். வாலி தன் தம்பியுடன் அவன் மீது போர் தொடுத்தான். வாலியின் பலத்தைக் கண்டு அஞ்சி ஓடி ஒரு நீண்ட குகைக்குள் புகுந்து கொண்டான். வாலி தன் தம்பி சுக்ரீவனை வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கூறி குகை வாசல்முன் நிறுத்திவிட்டு குகைக்குள் அரக்கனுடன் போர் புரிந்தான். ஓராண்டு வரை சண்டை நீடித்தது. குகை வாயில் வரை இரத்தம் வந்து விட்டது. இதைக் கண்ட சுக்ரீவன் தன்னையும் அரக்கன் வந்து கொன்று விடுவானோ என்ற பயத்தில் ஒரு பெரிய கல்லைக்கொண்டு குகையின் வாயிலை அடைத்து விட்டு கிஸ்கிந்தாவுக்குத் திரும்பினான்.

மாயாவியை வாலி கொன்று விட்டதால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கல்லை அகற்றி விட்டு வெளியே வந்த வாலி, நாடு திரும்பும் முன் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய எண்ணினான்.

வசிஷ்ட முனிவரிடம் சென்று இந்த தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுமாறு வேண்டினான். ஒரு கணம் யோசித்த வசிஷ்டர் வாலியிடம், “இந்த கானகத்தின் வழியே சென்றால் கடம்ப வனத்தை அடையலாம். அங்கு எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகின்றதோ, அந்த இடம் தெய்வத் தன்மை வாய்ந்த இடம். அங்கு ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட இந்த பிரம்மஹத்தி தோஷம் அறவே நீங்கும்” என அருளினார்.

வாலி வசிஷ்டர் சொல்லியபடி பயணத்தைத் தொடர்ந்தான். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வாலி ஆச்சரியம் அடைந்தான். அங்கு உண்மையில் மாட்டின் முதுகின் மீது புலி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து தான் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான். இந்த திவ்ய பூமிக்கு நாரதருடன் வந்த, வசிஷ்டர் ஈசனை வணங்கி 'வாலி' நதி என்ற புண்ணிய தீர்த்தத்தை உண்டு பண்ணினார். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இந்த இடம் “ரிஷப புரி” என போற்றப்படும் என்றார். அவ்வாறு வாலியினால் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம் அமைந்த கோயில் தான் இத்திருத்தலம். எனவே மூலமூர்த்தி “வாலீஸ்வரர்” எனப் பெயர் பெற்றார்.

இக் கோயிலில் 16 கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்தியவை. இக்கல்வெட்டுக்களில் ஈசனின் பெயர் “காபலீஸ்வரர்' என குறிக்கப்பட்டுள்ளது. சைவத்தின் பிரதான உட்பிரிவு பாசுபத சைவம், கபாலிகள் சைவம் என கூறப்படுகிறது. பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து தன் கையில் வைத்திருக்கும் சிவசொரூபமே கபாலீஸ்வரர். இவரை தெய்வமாக வணங்குபவர்கள் கபாலிகள் சைவர்கள் எனவும் இறைவன் கபாலீஸ்வரர் எனப்படுகின்றார். 11 ம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழனால் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

ஆதியில் அம்மனுக்கென தனி சன்னதி கிடையாது. ஈசனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். பின் அம்மனை சிலைரூபமாக வடித்து மரத்தடியில் வைத்து பூஜித்து வந்தனர்.

இக் கோயிலுக்கு வழிபட வந்த கரிகால் சோழன் அம்மனின் திருமேனி அழகைக் கண்டு வியந்தான். அம்மனுக்கென தனிக் கோயில் இல்லாமல் மரத்தடியில் உள்ள நிலை கண்டு மனம் வருந்தினான். உடனடியாக ஒரு கற்கோயில் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு, கோயில் கட்டி முடித்து, அம்மனின் திருமேனியை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சோழன் பூர்வ பட்டயம் கூறுகின்றது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக முருகன் சேவற்கொடியினை ஏந்தி இருப்பார். இங்கு மாறாக சேவலையே தன் கையில் ஏந்தி உள்ளார். மேலும் சிம்ம பீடத்தில் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar