ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
கோயில் அலுவலகம்,
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில்,
இரணியூர்- 623 212.
சிவகங்கை மாவட்டம்.
போன்:
+91- 4577 - 265 645, 98424 80309.
பொது தகவல்:
இத்தலம் அஷ்டபைரவ தலங்களில் ஒன்று. பைரவர்: கால பைரவர். தலவிநாயகர்: வித்தகவிநாயகர் விமானம்: ஒருதள விமானம்
பிரார்த்தனை
பணி, வியாபாரம், தொழில் சிறக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
கோப குணம் உள்ளவர்கள் இங்கு சிவன், பைரவரை வழிபட கோபம் குறையும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணமும் நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.
அம்பாள் சிவபுரந்தேவி இரண்டே கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது உருவான திகள், இவளது சன்னதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவ திகளாக காட்சி தருவதாகச் சொல்கின்றனர். அஷ்டலட்சுமி மண்டபம் ஒன்றும் இருக்கிறது.
அம்பாள் சன்னதி அருகில் பைரவர் சன்னதி இருக்கிறது. இவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடக்கிறது. அப்போது ஜவ்வாது, புனுகு ஆகிய வாசனைப்பொருட்கள், வாசனை மலர் மாலைகள் அணிவித்து, மார்பில் குளிர்ச்சிக்காக சந்தனம் சாத்தி அலங்காரம் செய்கின்றனர்.
இவ்விழாவின் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி பின்பு, பல்லக்கில் புறப்பாடாகிறார். பிரகாரத்தில் உள்ள விநாயகர் "வித்தக விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். மாணவர்கள் இவரிடம் கல்வி சிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.
கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்.
குதிரை வாகன குபேரன்: இங்கு குபேரன், வாயு பகவான் இருவரும் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம். இவர்கள் இருவரும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
நவக்கிரக சன்னதி, கஜலட்சுமி சன்னதிகளும் உண்டு. இரண்யனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், "இரணியூர்' என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு:
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.
திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் "ஆட்கொண்டநாதர்' என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, "நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி.
இருப்பிடம் : மதுரையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டிலுள்ள திருப்புத்தூர் (60 கி.மீ.) செல்ல வேண்டும். இங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் கீழச்சீவல்பட்டி வழியாக, 4 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
திருப்புத்தூரில் இருந்து கீழச்சீவல்பட்டிக்கு பஸ்கள் உள்ளன. ஆனால், அங்கிருந்து இரணியூருக்கு பஸ்வசதி அதிகமில்லை. ஆட்டோவில் செல்லலாம்.