இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
பைரவர் சிறப்பு: அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.
தோஷம் நீக்கும் பல்லி: அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது.
தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு:
சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.
ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிஎறிந்தார்.
இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.