மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்,
ராயசோட்டி - 516 269.
கடப்பா மாவட்டம்,
ஆந்திர மாநிலம்.
போன்:
+91- 8561 - 250 307, 98854 79428, 94410 12682.
பொது தகவல்:
திங்கள்தோறும் வீரபத்திரர், பத்திரகாளி இருவரும் பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். உயர் பதவி, தலைமை பொறுப்பு கிடைக்க பக்தர்கள் வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்வித்து, குதிரையில் அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். இதற்கு கட்டணம் ரூ.450. அம்மை, தோல் வியாதி ஏற்பட்டவர்கள் வீரபத்திரர் பாதத்தில் தேங்காய் வைத்து பூஜித்து, தேங்காய் தண்ணீரைப் பருகியும், உடலில் தேய்த்தும் வேண்டிக் கொள்கின்றனர். இத்தல வீரபத்திரருக்கு "ராஜராயுடு' (அனைவருக்கும் தலைவர்) என்ற பெயரும் உண்டு. ஆவுடையின் மீது சிவலிங்கத்தை பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில், ஆவுடையின்மீது சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். இவரை "ஆவுடைசிவன்' என்கிறார்கள். வரசித்தி விநாயகர், காலபைரவர், எல்லம்மன், சண்முகர், இரட்டை லிங்கம், அகோரசிவன், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இங்குள்ள கோபுரம் 3 நிலைகளை கொண்டது.
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சடாரி சேவை: ராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார். பெருமாள் தலங்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. வெற்றிலையை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர்.
அம்பாள் அருகில் நந்தி: ராஜகோபுரத்திற்கு வெளியில் விமானத்துடன் கூடிய தனி மண்டபத்தில் நந்தீஸ்வரர் இருக்கிறார். வீரபத்திரர் சன்னதி எதிரில் சிவன், வீரபத்திரர் இருவருக்குமாக வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இந்த இரண்டு நந்திகளும் சன்னதியிலிருந்து விலகியிருப்பது வித்தியாசமான அமைப்பு. பத்ரகாளி சன்னதி அருகிலும் ஒரு நந்தி இருக்கிறது.
சாதத்தை சிதறடிக்கும் நிகழ்ச்சி: சிவராத்திரியை ஒட்டி 11 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. எட்டாம் நாளில் தட்சன் வதம் வைபவம் நடத்தப்படுகிறது. அப்போது வீரபத்திரர் சன்னதி எதிரில் 365 படி சாதம், பூசணிக்காய், அதிரசம், கிழங்கு ஆகியவற்றை மலை போல குவித்து, வீரபத்திரரிடம் உள்ள கத்தியால், அன்னத்தை (சாதம்) கிளறி சன்னதி முழுவதும் சிதறடிக்கின்றனர்.வீரபத்திரர், தட்ச யாகத்தை துவம்சம் செய்ததன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த அன்னமே பிரசாதமாக தரப்படும். இந்நிகழ்ச் சியின்போது மட்டும் வீரபத்திரருக்கு நெற்றிக்கண் வைக்கப்படுகிறது.
தல வரலாறு:
தன்னை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால் சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். யாகத்தை அழித்தபின்பும் வீரபத்திரரின் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில், மாண்டவ்ய மகரிஷி என்பவர், வீரபத்திரரின் தரிசனம் வேண்டி சிவலிங்கம் அமைத்து தவமிருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார்.இதைக்கண்ட மகரிஷி அம்பிகையிடம் அவரைச் சாந்தப்படுத்தும்படி வேண்டினார். அதன்படி அம்பாள் பத்ரகாளியாக இங்கு வந்தாள். வீரபத்திரர் சாந்தமானார். இருவரும் தான் தவமிருந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டினார் மாண்டவ்யர். அத்தலமே தற்போதைய ராயசோட்டி. பிற்காலத்தில் மன்னன் ஒருவன், இங்கு கோயில் எழுப்பினான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.
இருப்பிடம் : ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இவ்வூர் உள்ளது. வேலூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் சித்தூர் சென்று, அங்கிருந்து 110 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். (திருப்பதியில் இருந்து 120 கி.மீ.) பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கடப்பா, திருப்பதி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருப்பதி
தங்கும் வசதி :
கடப்பா மற்றும் திருப்பதியில் உள்ள விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.