சித்திரை அட்சயதிரிதியையிலிருந்து வைகாசி பவுர்ணமி வரை வசந்த உற்சவம், ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, மார்கழி மாதம் முழுவதும் பூஜை, நரசிம்ம ஜெயந்தி, மகாசிவராத்திரி.
இங்கு நடத்தப்படும் திருவிழாக்களிலேயே பிப்ரவரியில் நடத்தப்படும் "மத்வநவமி' திருவிழா தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இத்தல கிருஷ்ணர் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தாலான திருமேனி ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 4.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்,
உடுப்பி - 576101,
மங்களூரு
கர்நாடகா மாநிலம்.
போன்:
+91- 820 - 252 0598.
பொது தகவல்:
ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ள இக்கோயிலில் கிருஷ்ணர் மேற்கு பார்த்து அருளுகிறார். மேற்கு பார்த்த கிருஷ்ணரை தரிசிப்பது மிகவும் விசேஷம். இவரை தரிசிக்க தெற்குபார்த்த வாசல் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். கோயிலின் கிழக்கே மத்வாச்சாரியார் உண்டாக்கிய தீர்த்தக்குளம் உள்ளது. இது "மத்வ புஷ்கரிணி' எனப்படுகிறது. அதன் நடுவில் கருங்கல் மண்டபம் உள்ளது.குளத்தின் தென்மேற்கு மூலையில் பாகீரதி அம்மன் (கங்கா தேவி) தனி சன்னதியில் அருளுகிறாள். இந்த தீர்த்தம் கிருதயுகத்தில் விரஜ தீர்த்தம், திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் ஆனந்த சரோவர், கலியுகத்தில் மத்வசரோவர் என அழைக்கப்படுகிறது.
இங்கு காலை 4.30 - 5 மணிக்குள் நடத்தப்படும் நிர்மால்ய பூஜை இங்கு சிறப்பு. கிருஷ்ணமடத்தின் முதல் மடாதிபதி மத்வாச்சாரியார். தற்போது 35வது மடாதிபதியாக வித்யாசாகர தீர்த்த சுவாமிகள் உள்ளார். மடப்பள்ளியின் வலதுபக்கம் உள்ள அறையில் கிருஷ்ணருக்கு பூஜைசெய்யும் "பாரியாய சுவாமிகள்' அருளாசி வழங்குவார். பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை ஆண்டுதோறும் கர்நாடக அரசு கொடுத்து வருகிறது. கிருஷ்ணர் கோயிலுக்கு அருகிலேயே சந்தரமவுலீஸ்வரர், அனந்தேஸ்வரர் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குள் சிவனுக்கு தனி சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளது. பிரகாரத்தின் கடைசியில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார்.மண்டபத்தின் அருகே துளசி தோட்டமும், தீப ஸ்தம்பமும் உள்ளது. மதியமும், இரவும் அன்னதானம் நடக்கிறது. பிரமாண்டமான பசுமடம் கோயிலுக்குள் இருக்கிறது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
நேர்த்திக்கடனாக துலாபாரம், கோதானம், ரத உற்சவம் செய்யப்படுகிறது.
தலபெருமை:
பெயர்க்காரணம் : "உடு' என்றால் நட்சத்திரம். "பா' என்றால் தலைவன். "உடுபா' என்பதே மருவி "உடுப்பி' ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணன் நட்சத்திரங்களின் தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாகவும் கருதப்படுகிறார்.
மத்வாச்சாரியார் பிரதிஷ்டை : கி.பி.1238ல் நாராயணபட்டர், வேதவதி தம்பதியினருக்கு மத்வாச்சாரியார் மகனாக அவதரித்தார். இவரது இயற்பெயர் வாசுதேவன். இவருக்கு 8 வயதாகும் போது உபநயனம் செய்யப்பட்டது. துவைதம் (இறைவன் வேறு; மனிதன் வேறு) என்ற கொள்கையை இந்த உலகிற்கு வழங்கியவர். 79 வயது வரை வாழ்ந்த இவர் கி.பி. 1317ல் இறைவனுடன் கலந்தார். இவரது காலத்திற்கு பின்னரே இக்கோயில் மிகவும் பிரபலமானது.
ஒருமுறை இந்த விக்ரகத்தை படகோட்டி ஒருவன் கடல் வழியாக எடுத்து வரும்போது, புயல் கடுமையாக வீசியது. அந்த வழியாக வந்த மத்வாச்சாரியார் இதைக்கண்டார். புயலை அமைதியாக்கி கிருஷ்ணரை மீட்டு 4 மைல் தூரம் பாடல்கள் பாடிக்கொண்டே இத்தலம் வந்து பிரதிஷ்டை செய்தார். இவர் பாடிய பாடல்கள் "துவாதச ஸ்தோத்திரம்' எனப்படுகிறது. இன்றும் இந்த பாடல்கள் கிருஷ்ணர் கோயிலில் பாடப்படுகிறது. கிருஷ்ணருக்கு இவரால் நியமிக்கப்பட்ட பாலசன்னியாசிகள் பூஜை செய்தனர்.
கிருஷ்ண தரிசனம் : மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு பூட்டியே இருக்கிறது. விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே இந்த கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை "நவக்கிரக துவாரம்' என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் முன்புள்ள மண்டபம் தீர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்கு தான் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது. தீர்த்த மண்டபத்திலுள்ள கருடன் அயோத்தியிலிருந்து "வதிராஜா தீர்த்தா' என்பவரால் கொண்டுவரப்பட்டது.
அஷ்டமடம் : மத்வாச்சாரியார் தனக்கு பின் கிருஷ்ணருக்கு பூஜைசெய்ய கிருஷ்ணபூர மடம், சீரூர் மடம், காணியூர் மடம், சோடே மடம், பாலிமர் மடம், அடாமர் மடம், பேஜாவர் மடம், புத்திகே மடம் என்ற 8 மடங்களை ஸ்தாபித்தார். இவை அஷ்ட மடங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த மடங்களை சேர்ந்தவர்கள் தான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து வருகின்றனர்.
இதில் முக்கியமானது கிருஷ்ணபூர மடம். இந்த மடத்தில் தான் கிருஷ்ணரின் கோயில் உள்ளது. இங்குள்ள மத்வாச்சாரியாரின் கையெழுத்துப் பிரதிக்கு இன்றும் பூஜை நடக்கிறது.
ஒளிவடிவில் அருளாசி : மூலஸ்தானத்தை சுற்றியுள்ள சுவர் முழுவதும் எண்ணெய் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் இந்த விளக்குகள் ஏற்றப்படும். கிருஷ்ணர் அருள்பாலிக்கும் மூலஸ்தானத்தின் வடக்குப் பக்கம் மத்வாச்சாரியாரின் அறை உள்ளது. இங்கு அவர் ஒளி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
கங்கை கலக்கும் புண்ணிய குளம் : இங்குள்ள மத்வ புஷ்கரணியில் ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் கலப்பதாக ஐதீகம். இதிலிருந்து தான் கிருஷ்ணருக்கு தினமும் அபிஷேகதீர்த்தம் எடுக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே மிகவும் புண்ணியம் கிடைக்கும். குறிப்பாக மார்கழி மாதத்தில் நேரில் சென்று, தீர்த்தம் தெளித்து வந்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
தல வரலாறு:
உடுப்பி கிருஷ்ணர் ருக்மணியால் பூஜிக்கப்பட்டவர். ஒருமுறை ருக்மணிக்கு பகவான் கிருஷ்ணர், பாலகனாக இருந்த போது எப்படி இருந்தார் என்று பார்க்க ஆசை ஏற்பட்டது. தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து தன் ஆசையைக் கூறினாள். ருக்மணியின் ஆசையை நிறைவேற்ற சாளக்கிராம கல்லில், வலது கையில் தயிர்மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணன் விக்ரகத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. ருக்மணி அதன் அழகில் மயங்கி தன்னுடனேயே வைத்து பூஜித்து வந்தாள். ருக்மணிக்கு பின் பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் இவரை பூஜித்தார். இவருக்கு பின் இந்த விக்ரகம் கோபி சந்தனத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல கிருஷ்ணர் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தாலான திருமேனி ஆகும்.
இருப்பிடம் : சென்னை, மதுரை, கோவை, பாலக்காட்டில் இருந்து ரயில் அல்லது பஸ் மூலம் மங்களூரு சென்று, அங்கிருந்து 60 கி.மீ. பஸ்களில் பயணம் செய்தால் உடுப்பியை அடையலாம். கர்நாடகாவின் அனைத்து முக்கிய ஊர்களிலிருந்தும் பஸ்கள் செல்கின்றன.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
உடுப்பி
அருகிலுள்ள விமான நிலையம் :
மங்களூரு
தங்கும் வசதி :
உடுப்பியில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்