தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.
திருவிழா:
பங்குனி உத்திரத் திருவிழா -13 நாட்கள்.மார்கழித் திருவிழா - ஆருத்ரா தரிசனம் - 13 நாட்கள்.
பிரதோச காலங்கள் , குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது.மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 211 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது.
இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது.
புகழ்ச்சோழர் மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று.
நடராஜர் சன்னதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில் ஒரு சுவாமி சன்னதியும், இலக்குமி சன்னதியும் அடுத்து ஆறுமுகர் சன்னதியும் உள்ளது.
பிரார்த்தனை
ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், மற்றும் தாலி, ஆபரணங்கள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்யலாம்.
மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
தலபெருமை:
புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம். முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்த புராதான சிறப்பு பெற்ற தலம் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்தனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.
இங்குள்ள ஆனிலை எனும் லிங்க வடிவமானது முற்றிலும் சுயம்பு மூர்த்தியாகும். புற்றிடங்கொண்ட ஈசரை முதலில் வழிபடும் பெருமை பெற்றவராக பிரம்மதேவர் குறிப்பிடுகிறார். காமதேனுவால் வழிபடப்பட்ட சிவாலயம் இது. காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளது.
கருவூர் சித்தர் : பதிணென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற, மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது, குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது.
தல வரலாறு:
பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து , வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, ""புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு,' என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது.
ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், ""நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்,' என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான்.
இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.