Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சரஸ்வதிஅம்மன்
  தீர்த்தம்: துளசி தீர்த்தம்
  ஊர்: பனிசிகாடு
  மாவட்டம்: கோட்டயம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  நவராத்திரி, சரஸ்வதி பூஜை பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், அவர்களது பிறந்த நாளின் போதும் பஞ்சாமிர்தம், பால்பாயாசம் படைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். துர்க்காஷ்டமி, மகாநவமி சரஸ்வதிபூஜை நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் இங்கு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்துகின்றனர். சரஸ்வதி சூக்தம் விதிதவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய் இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. புத்திக்கும் படிப்பிற்கும் உன்னதமான இங்கு நெய் இத்திருக்கோயிலின் முக்கிய வழிபாடாகும். சரஸ்வதி தேவிக்கு ஸாரஸ்வத ஸாக்த அர்ச்சனையும், விஷ்ணுவுக்கு புருஷ சூக்த அர்ச்சனையும் இங்கு தினந்தோறும் நடக்கிறது. நவராத்திரியின்போது சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  கேரளாவின் புகழ்பெற்ற சுயம்பு சரஸ்வதி கோயில் இது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில், பனிசிகாடு. கோட்டயம் மாவட்டம். கேரளா மாநிலம்.  
   
போன்:
   
  +91-0481 - 233 0670, 233 0020. 
    
 பொது தகவல்:
     
  கோபுர வாசலில் இருந்து 30 அடி பள்ளத்தில் கோயில் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கும் குழந்தைகள் குணமடையவும் நவராத்திரி பூஜையில் பங்கேற்கலாம்.

சரஸ்வதி அருளாட்சி செய்யும் தலம் என்பதால், பாட்டு, இசை, நாட்டியம் போன்ற பல்வேறு கலைகளில் வல்லோரும், கலைகளைக் கற்போரும் இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் தரிசனம் செய்யும்போது முதலில் மகாவிஷ்ணு, சரஸ்வதி, கணபதி, சிவன், சாஸ்தா, யக்ஷி, நாகராஜா என வழிபடவேண்டும். இங்கு விஷ்ணுவிற்கும், சரஸ்வதிக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணு கோயிலில் இருந்துதான் சரஸ்வதி கோயிலுக்கு நீரூற்றின் ஓட்டம் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை செல்லும் பக்தர்கள் சரணகோஷம் பாடியபடியே இங்கே வந்து சரஸ்வதியை வணங்கிச் செல்வது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு கிடைக்கும் துளசி தீர்த்தம் விசேஷ ஆற்றலுடையது. எட்டு வகையான துளசிகள் கொண்டு தயாரிக்கப்படும் இத்தீர்த்தம் குழந்தைகளுக்கு ஞாபகசக்தியையும், படிப்பார்வத்தையும் தூண்டக்கூடியது; நோய் நொடிகளை நீக்கவல்லது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இங்கு வந்து குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கிறார்கள். விஷ்ணு, சரஸ்வதி ஆகியவர்களுக்கு திருமதுரமும், அரவணையும், யக்ஷி கோயிலுக்கு வறபொடியும் முக்கியமான பிரசாதமாகும். சாஸ்தாவுக்கு தேங்காய்த் துருவல், சிவனுக்கு நெய் தாராவும், கூவற மாலையும், கணபதிக்கு மோதகம், அறுகம்புல் மாலையும் பிரதானமாகும். துர்க்காஷ்டமி நாளில் தேர்மண்டபத்தில் விசேஷமான ஓலைச் சுவடிகளுடன், பாடநூல்களும் புராண நூல்களும் விலை மதிக்க முடியாத புத்தகங்களும் பூஜைக்கு வைக்கப்படுகின்றன. பல ஆயிரம் கலைஞர்களை உன்னத நிலைக்கு உயர்த்திய இந்த தேவிக்கு அயல்நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். சபரிமலை செல்லும் பக்தர்கள், இந்த பனச்சிக்காடு சரஸ்வதியை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் செய்தால்தான் அவர்களின் யாத்திரை முழுமையடைவதாக நம்புகிறார்கள். அப்படி நம்புவோரை நிச்சயம் காக்கிறாள் பனச்சிக்காடு சரஸ்வதி.  
     
  தல வரலாறு:
     
  இவ்வூரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. கிழுப்புரம், கரிநாடு, கைமுக்கு என்ற மூன்று நம்பூதிரி குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர். இவர்களில் கிழுப்புரம் தாமோதரன் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லை. இதுகுறித்து, சரஸ்வதியின் சொரூபமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்பாளிடம் தன் குறை சொல்லி, அங்கேயே தங்கி வழிபட்டார்.

ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய அம்பிகை, ""பூர்வ ஜென்ம வினைப்பயனால் இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. உன் வீட்டின் அருகில் உள்ள நம்பூதிரியின் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அதை தத்தெடுத்து வளர்த்து வா!'' என்றாள். அதன்படி பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையை தத்து கொடுக்கும்படி கேட்டார் தாமோதரன். அவர்களோ தங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால், தத்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டனர்.
வருத்தமடைந்த தாமோதரன், மூகாம்பிகை கோயிலுக்கு தான் கொண்டு சென்ற குடையுடன், பெருமாள் கோயிலுக்கு வந்தார். குடையை ஓரிடத்தில் வைத்து விட்டு, கோயில் குளத்தில் நீராடினார். திரும்பி வந்து குடையை எடுத்த போது அதை எடுக்க முடியவில்லை.

அப்போது அசரீரி தோன்றி, ""தாமோதரா, குழந்தை தத்து கிடைக்காதது பற்றி வருந்தாதே. ஆதிசங்கரர் இங்கிருந்து மூகாம்பிகையை கொல்லூருக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்தார். இப்போது அவளது அம்சமான சரஸ்வதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் வந்திருக்கிறாள். நீ இங்குள்ள காட்டிற்குள் போ. உனக்கு ஒரு குழந்தை வடிவ சரஸ்வதி சிலை கிடைக்கும். அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து, அதில் குடையிலிருக்கும் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து (எழுந்தருளச் செய்தல்) பூஜித்து வா!'' என்றது.அதன்படி சரஸ்வதி சிலையை கண்டெடுத்த அந்த பக்தர், பெருமாள் தலமான இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

தாமோதரன் நம்பூதிரிக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவரது உறவினர்கள், அவர் பூஜித்த சரஸ்வதிக்கு எதிரில் மேற்கு நோக்கி ஒரு கல்லை பிரதிஷ்டை செய்து அதை சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். அதை மட்டுமே நாம் பார்க்க முடியும். தாமோதரன் பூஜித்த சரஸ்வதியைச் சுற்றிலும் வெற்றிலை கொடிகள் சூழ்ந்து விட்டது. இதற்கு அடியில் மூகாம்பிகை கோயிலில் இருந்து, சரஸ்வதி எழுந்தருளி வந்த குடை இருக்கிறது. இதை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால், குழந்தை சரஸ்வதியைப் பார்க்க முடியாது. "சரஸ்' என்றால் தண்ணீர் என்றும் "வதி'என்றால் "தேவி' என்றும் பொருள். இதனடிப்படையில் கோயிலை சுற்றிலும் குளம் அமைந்துஉள்ளது. சரஸ்வதி கோயில் அருகில் நம்பூதிரிகள் பூஜித்த பெருமாள் கோயிலும் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கேரளாவின் புகழ்பெற்ற சுயம்பு சரஸ்வதி கோயில் இது .
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar