பொல்லாப்பிள்ளையார்: நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார்.
அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.
திருமுறை தந்த தலம்: ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். இராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்தியங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார், ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று இராஜ ராஜனும், நம்பியும் வேண்ட தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வவாக்கு ஒலித்தது. (இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தின் மேற்கு உள் பிரகாரத்தில் ஸ்ரீதிருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது).
இராஜ ராஜன், தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறை தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்து பூஜித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு, உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவள்ளுவர் வாக்கால் ஒருவாறு அமைதிப்பெற்றனர். திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள்.(திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது இராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது.
திருஞான சம்பந்தர் சுவாமிகள் பதிகம் பெற்ற நடுநாட்டு ஸ்தலம் இது. இறைவன் திருநாமம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் இறைவி திருநாமம் ஸ்ரீ நீலமலர்க்கண் அம்மை இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது). திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது.(இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.
இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி, இராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.
ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்கள் (பதினோராந் திருமுறை): ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜாஷடைய வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார். திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார்.
கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார்.
|