பல மகான்கள் வந்து தரிசனம் செய்த இக்கோயில் கருடவடிவில் அமைந்த பாறையின் மீது அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களும் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்,
அந்திலி - 605752
விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91-413-225 238, 94867 89200
பொது தகவல்:
பகவான் மகாவிஷ்ணு தனது நரசிம்மர் அவதாரத்தில் தூணிலிருந்து தோன்றி இரணியனை அழித்து,தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்றி தரிசனம் தந்தார். அதே போல் தனது வாகனமான கருட பகவானுக்கும் நரசிம்மராக காட்சி தந்த தலம் விழுப்புரம் மாவட்டம் அந்திலி நரசிம்மர் கோயிலாகும்.
பிரார்த்தனை
கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் நோய், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் நரசிம்மருக்கு திருமஞ்சனம், நரசிம்மர் ஹோமம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
இத்தலத்தின் சிறப்பை கேள்விப்பட்ட மத்வ சித்தாந்த மகான் "ஸ்ரீவியாசராஜர்' அந்திலிக்கு விஜயம் செய்தார். இவர் தனது மறுபிறவியில் ராகவேந்திரராக அவதரித்தவர். பல மகான்கள் வந்து தரிசனம் செய்த இக்கோயில் கருடவடிவில் அமைந்த பாறையின் மீது அமைந்திருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.சில காலம் இத்தலத்திலேயே தங்கிய அவர் கோயிலுக்கு பின்புறம், நாராயணனின் சிறிய திருவடியான அனுமனுக்கு தனி சன்னதி அமைத்து தனது திருக்கரத்தினால் அனுமனை பிரதிஷ்டை செய்தார்.சுமார் 400 வருடங்களுக்கு முனபு அந்திலி ஆச்சாரியார் என்பவர் இத்தல நரசிம்மரை பூஜித்து வந்தார். அதன் அடையாளமாக ஆச்சாரியாரின் சிலை இத்தல தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:
தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் மீது ஏறி செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் தூணில் தோன்றினார். இதனால் பரமபதத்தில் இருந்த கருடனுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. நாராயணன் எங்கு சென்றாலும் தன் மீது தானே ஏறிச்செல்வார். இப்போது திடீரென பரமபதத்தில் இருந்து எங்கோ சென்று விட்டாரே! தன் மீது ஏதேனும் கோபமா? என்பது தெரியாமல் குழம்பினார். இதனால் வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியில் நிம்மதியின்றி தவித்தார்.கடைசியில் "தெட்சிண பினாகினி' என போற்றப்படும் புனித நதியான தென்பெண்ணை ஆற்றின் கரையில் அந்திலி எனும் அமைதியான பகுதிக்கு வந்தார். நாராயணனை வேண்டி தண்ணீர், உணவு ஏதுமின்றி அங்கிருந்த பாறைமீது கடும் தவம் இருந்தார். இதனால் பலசாலியான கருடன் மிகவும் பலவீனமானார். இவரது கடும் தவத்தினால் வைகுண்டம் முதல் திருக்கைலாயம் வரை வெப்பத்தினால் தகித்தது. தேவர்கள் முதலானோர் நாராயணனிடம் சென்று கருடனை காப்பாற்றும்படி வேண்டினர். இவர்களது வேண்டுதலின்படியும், கருடனின் விருப்பப்படியும் கருடனின் முன்பு நாராயணன் தோன்றினார். ""கருடா! உனது தவத்தில் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்''என்றார் நாராயணன்.நாராயணனை தரிசித்து மகிழ்ந்த கருடன், ""பகவானே! குழந்தை பிரகலாதனை காப்பாற்ற உடனே சென்று , தூணில் நரசிம்மராக தோன்றினீர்கள். அதே நரசிம்ம தரிசனம் எனக்கும் காட்டியருளி, இப்பூவுல மக்களையும் காக்க வேண்டும்,''என வேண்டி னார்.கருடனின் விருப்பப்படி நாராயணன் இத்தலத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருளினார். மகாலட்சுமியும் நரசிம்மரின் மடியில் அமர்ந்தாள். அதனடிப்படையில் இங்கு லட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வருடத்தின் 365 நாட்களும் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் சிறப்பம்சமாகும்.
இருப்பிடம் : விழுப்புரத்திலிருந்து (30 கி.மீ) திருக்கோவிலூர் செல்லும் வழியில் அரகண்டநல்லூரில் இறங்கி கிழக்கே 2 கி.மீ தூரம் சென்றால் கோயிலை அடையலாம். அரகண்டநல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.