|
சுற்றிலும் பச்சைப்பசேல் மரங்கள், செடி கொடிகள் சூழ இப்பிரதேசம் இயற்கை அழகு கொஞ்சும் இடமாக உள்ளது. இந்தக் குன்றின் கீழும், மேலும் நரசிம்மர் இருக்கிறார். கீழே உள்ளவரை போக நரசிம்மர் என்றும், மேலே உள்ளவரை யோக நரசிம்மர் என்றும் அழைக்கின்றனர். இதைத் தவிர மூன்றாவது அடுக்கில் கும்பி நரசிம்மர் எனவும் ஒரு நரசிம்மர் குடி கொண்டுள்ளார். கீழேயுள்ள நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்திக் கொண்டுகம்பீரமாய் காட்சி தருவதால் இவர் லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். கோயில் அமைப்பு எளிமையானது. கர்ப்பகிரகம், முன் மண்டபம், துவஸ்தம்பம் என திராவிடர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் தோற்றத்தை போன்றே மேலேயுள்ள யோக நரசிம்மர் கோயில் உள்ளது.
பல அரசர்களால் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை மன்னர்கள் நிர்வகித்து வந்தனர். மைசூரு மன்னர் ஆட்சி வந்ததும், இரு கோயில்களையும் 1858ம் ஆண்டு புதுப்பித்தார். கீழே உள்ள போக நரசிம்மரை தரிசித்த பின் பக்தர்கள் மேலேயுள்ள யோக நரசிம்மரை தரிசிக்க செல்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மேலேயுள்ள கும்பி நரசிம்மர், மிகப்பழைய ஆஞ்சநேயர் மற்றும் கருடன் கோயிலையும் தரிசிக்கலாம். குன்றின் அடியில் ஒரு இடத்தில் நீரூற்று உள்ளது.
|
|