இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாதூர் மகா கணபதி திருக்கோயில்
மாதூர், காசர்கோடு, கேரளா.
பொது தகவல்:
கும்பாலாவை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரைப் பிரார்த்திக்கொண்டு சென்று வெற்றிவாகை சூடினான். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினான். 1784-ல் இக்கோயிலைச் சூறையாட வந்த திப்பு சுல்தான், தன் வாளால் இக்கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்த சுவரை இடிக்க ஆரம்பித்தான். அச்சமயம் தாகம் மேலிட, அருகிலுள்ள கிணற்று நீரைப் பருகினான். உடன் ஓர் உற்சாக ஊற்று உள்ளத்தில் பரவிட, ஒரு வாய் நீர் அருந்தியதற்கு இத்தனை நிம்மதியா என விநாயகரின் கருணையால் புத்தி தெளிந்து ஊர் திரும்பிவிட்டான்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிதறுகாய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயிலில் சிவலிங்க பிரதிஷ்டைக்குரிய யாகத்தை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்குண்டான பூஜைகளை முறைப்படி செய்யத் தவறியதால், திடீரென இடியும் மின்னலுமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி கோயிலைச் சுற்றி பெருவெள்ளம் ! கோயிலே மூழ்கிவிடும் நிலை ! இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று வேத விற்பன்னர்கள் யோசித்தபோதுதான், தங்கள் தவறை உணர்ந்தார்கள். விநாயகப் பெருமானே ! நாங்கள் அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள் என மனமாரப் பிரார்த்தித்து, யாகம் நடக்கவிருக்கும் இடத்திலுள்ள வடகிழக்குச் சுவரில் விநாயகரின் படத்தை வரைந்து வணங்கினார்கள். படம் மட்டும் போதுமா ? அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் கொழுக்கட்டை அல்லவா ! அந்தக் கொட்டும் மழையில் கொழுக்கட்டையை எப்படிச் செய்வது என அனைவரும் குழம்பி நின்ற வேளையில், தலைமை வேத விற்பன்னர் ஒரு காரியம் செய்தார். கோலம் போடுவதற்காக வைத்திருந்த பச்சரிசி மாவை ஒரு பிடி அள்ளி, அங்கு எரிந்துகொண்டிருந்த நிலவிளக்கில் சூடாக்கி உருண்டையாக்கி, விநாயகா ! இந்தப் பச்சப்பமே இன்று உனக்கு நைவேத்தியம். இதனைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டு, ஒரு விக்னமும் இன்றி இந்த யாகத்தைச் சிறப்பாக முடித்துக் கொடு என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார். அவர் இவ்விதம் பிரார்த்தித்த கணமே மழை முற்றிலுமாக நின்றுபோனது. வரைந்த படத்தில் விநாயகரின் சக்தி முழுமையாகப் புகுந்துகொண்டதற்கு இதனை விட வேறு அத்தாட்சி எதற்கு? சிவலிங்கப் பிரதிஷ்டைக்குப் பின்னர், விநாயகருக்கும் சிலாரூபம் அமைத்தார்கள். நாளாக நாளாக விநாயகரின் உருவம் வளர ஆரம்பித்தது. கோயிலின் மேற்கூரையை இடிக்கும் அளவு அவரின் உருவம் உயர்ந்து வளர, பக்தர்கள் திரும்பவும் விநாயகரைப் பிரார்த்தித்தார்கள். உடன் அவரும் தன் உயரத்தைக் குறைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பித்துவிட்டார். இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருக்கிறார். இங்கு விநாயகருக்கு மூட்டப்ப சேவை என்ற விசேஷ சேவை நடைபெறுகிறது. விநாயகரின் கழுத்துவரை அரிசி மாவு, வாழைப்பழம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட அப்பத்தால் மூட வேண்டும். இதுவே மூட்டப்ப சேவை. இந்த மூட்டப்ப சேவைக்கு நாள் குறிக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அருகிலுள்ள ஆரூர், டுகன்காவு மற்றும் கனிப்புரு என்ற மூன்று ஊர்களிலும் கணபதி ஹோமம் மற்றும் ஏனைய திருவிழாக்களைக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். மூட்டப்ப சேவை ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலில் விநாயகர் விக்கிரத்தைச் சுற்றி கரும்பால் வேலி அமைக்கிறார்கள். அதன்பின் விதவிதமான அபிஷேகங்கள்... கடைசியாக நெய் அபிஷேகம் ! இந்த அபிஷேகம் முடிந்ததும் விநாயகரின் கழுத்துவரை அப்பத்தால் மூடி அப்ப நைவேத்தியம். அப்பம் சார்த்தி புது வஸ்திரத்தால் மூடிவிடுகிறார்கள். அதன்மேல் அருகம்புல்லால் கும்ப வடிவில் மூடி, ஒரு மூட்டை அரிசியையும் விநாயகரின் முன்னே வைத்து விடுகிறார்கள். இதற்குப் பின் மிக விமரிசையாக உதய அஸ்தமன பூஜை, வசந்த பூஜை, சோமவார பூஜை, கணபதி ஹோமம் போன்றவை அனைத்தும் நடைபெறுகின்றன. மறுநாள் அதிகாலை மகா பூஜைக்குப் பின்னர் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
தல வரலாறு:
மாதுரி என்றொரு இளம்பெண் புல்லறுக்கச் சென்றபோது சட்டென்று அவள் அரிவாள் ஓர் இடத்தில் பட, அவ்விடத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பயந்துபோன அவள் ஓடிப்போய் அவ்வூர் அரசரிடம் விவரத்தைக் கூறினாள். உடன் அங்கு சென்று பார்த்த அரசன் அவளிடம், பெண்ணே, நீ பயப்படாதே ! தெய்வத்தை முழுமையாகப் பிரார்த்தித்துக்கொண்டு உன் கையிலுள்ள அரிவாளை, வேகமாக கிழக்குப்புறமாக வீசியெறி என்றான். அவளும் கண்களை மூடிப் பிரார்த்தித்து, அரிவாளைக் கிழக்குப்புறமாக வீச, அந்த அரிவாள் பாயஸ்வினி ஆற்றின் மேற்குப்புறம் போய் விழுந்தது. அவ்விடத்தில் புலியும் பசுமாடும் அருகருகே புல் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அவ்விடத்தின் தெய்வீகத்தை உணர்ந்த அரசன் அங்கே சிவன் கோயில் ஒன்றை எழுப்பினார். இந்த தெய்வீகம் உறையும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவிய அந்தப் பெண்ணின் பெயரையே அவ்விடத்துக்குச் சூட்டினான் அரசன். நாளடைவில் அவ்வூர் மாதூர் ஆகிவிட்டது. இந்தக் கோயில் சிவனுக்காகவே கட்டப்பட்டது என்றாலும், இங்குள்ள விநாயகர் மிகவும் பிரசித்தம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருப்பது சிறப்பு.