இங்கு குபேரர், லெட்சுமி, சித்ரலேகா, முத்துமாரி, சித்தி புத்தியுடன் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோரை வழிபாடு செய்யலாம்.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற, சகல சவுபாக்கியங்கள் கிடைக்க சந்தோஷிமாதாவை ஒவ்வொரு வெள்ளியும் பூரி, முந்திரிப்பாயாசம், வறுத்த கடலை, வெல்லம் படைத்து வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
விநாயகரின் மகளாகக் கருதப்படும் சந்தோஷி மாதாவுக்கு வடமாநிலங்களில் கோயில் உண்டு. தமிழகத்தில் மிக அரிது. இங்குள்ள சந்தோஷிமாதா சிலை பத்து அடி உயரம் உள்ளது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இவள் வெள்ளிக்கிழமை பிறந்ததாக கருதப்படுவதால்,வெள்ளிக்கிழமைகளில் இவளை எண்ணி விரதமிருப்பது வழக்கமாக உள்ளது. பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் சகல மங்களங்களும், சவுபாக்கியங்களும் உண்டாகும். எதாவது ஒரு வேண்டுதலை வைத்து, இக்கோயிலுக்கு வந்து ஏதாவது வெள்ளிக்கிழமையில் விரதம் துவங்க வேண்டும். தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளில் சந்தோஷிமாதா படத்தை வீட்டில் வைத்தே விரதத்தை தொடரலாம். (வசதிப்படாத நாட்களை விட்டுவிடவும்) எண்ணிய செயல் கைகூடிய மறு வெள்ளியன்று கோயிலுக்கு மீண்டும் வந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று சந்தோஷிமாதாவுக்கு பூரி, முந்திரிப்பாயாசம், வறுத்த கடலை, வெல்லம் படைக்க வேண்டும்.
தல வரலாறு:
ஆவணி மாதம் பவுர்ணமியன்று, வடமாநிலங்களில் உள்ள பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு சகல மங்கலங்களும் கிடைக்க ரக்ஷாபந்தன் விழா கொண்டாடுவர். இந்நாளில் சகோதர, சகோதரிகளின் கலகலப்பால் வீடுகள் குதூகலமாக இருக்கும். இவ்விழா, மண்ணுலகில் நடந்து கொண்டிருந்த வேளையில், விண்ணுலகில் விநாயகப் பெருமான் தம் ஆனந்தலோகத்தில் அமர்ந்திருந்தார். அவரருளால் சித்திக்கும், புத்திக்கும் பிறந்த சுபம், லாபம் என்ற ஆண் பிள்ளைகள் அவரருகே இருந்தனர். அப்போது நாரதர் அங்கு வந்தார். பூலோகத்தில் நடக்கும் ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியின் மகத்துவம் குறித்து விளக்கமளித்தார். உடனே அந்தப்பிள்ளைகள் தந்தையே! எங்களுக்கும் ஒரு சகோதரி இருந்தால், நாங்களும் ரக்ஷை கட்டி மகிழ்ச்சியாய் இருப்போமே என்று கெஞ்சலாகக் கேட்டனர். விநாயகர் யோசித்தபடியே இருந்தார். உடனே நாரதர், சகல மக்களுக்கும் சகல சவுபாக்கியங்களை நல்கும் பெருமானே, குழந்தைகள் உங்கள் யானை முகம் பார்த்து மகிழ்கின்றனர். உலகக் குழந்தைகளையெல்லாம் மகிழ்ச்சிப்படுத்தும் நீங்கள், உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டாமா! நீங்கள் நினைத்தால் நடக்காதது ஒன்றும் இல்லை. இந்த பிள்ளைகளுக்கு ஒரு சகோதரியை உண்டாக்கிக் கொடுங்கள், என்றார். விநாயகப்பெருமானும் சித்தி, புத்தி என்ற தம்மனைவிகள் மூலம் அழகே உருவான ஒரு சகோதரியை அந்தப் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் குழந்தை பார்வதியின் சக்தியையும், லட்சுமிதேவியின் செல்வத்தையும், சரஸ்வதி தேவியின் கல்விச் சிறப்பையும் பெற்றுத் திகழுமாறு அருள்பாலித்தார். மூன்று தேவிகளும் அங்கு தோன்றி குழந்தைக்கு ஆசி வழங்கினர். அந்தப் பெண்குழந்தை தம் சகோதரர்களுக்கு ரக்ஷை கட்டி மகிழ்வித்தாள். சகோதரர்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்கியதால் சந்தோஷி என்று பெயரைப் பெற்றாள். இந்த வரலாற்றின் அடிப்படையில் காரைக்குடி அருகிலுள்ள பாதரகுடியில் சந்தோஷி மாதா சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனுடைய அடிப்பகுதியில் விநாயகர் தன்னுடைய மனைவி சித்தி, புத்தியுடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நின்ற நிலையில் 10அடி உயரத்தில் சந்தோஷி மாதா சிலையுடன் தனிக்கோயில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : மதுரையிலிருந்து 92 கி.மீ., தூரம் காரைக்குடி. இங்குள்ள புதுபஸ் ஸ்டாண்டிலிருந்து திருப்புத்தூர் செல்லும் ரோட்டில் ஏழு கி.மீ., தூரத்தில் பாதரகுடி உள்ளது.