அம்பிகை புற்றில் இருந்து சுயம்புமூர்த்தியாக வெளிப்பட்டதாகவும், நான்கு கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் ஏந்தி நிற்பதும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 2 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
குகை கருவறை: மைசூரு சாமுண்டி மலையை அடுத்த குன்றில் கோயில் அமைந்துள்ளது. அம்பிகை புற்றில் இருந்து சுயம்புமூர்த்தியாக வெளிப்பட்டதாக ஐதீகம். மிகச் சிறிய வாயிலில் குகை போன்று சந்நதி அமைந்துள்ளது. அர்ச்சகர்கள் குனிந்தபடியே சன்னதிக்குச் சென்று பூஜை செய்கின்றனர். நான்கு கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் ஏந்தி நிற்கிறாள். மூலவரும், உற்சவரும் ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும், கருவறையில் அம்மன் நாக்கினை வெளியில் நீட்டியபடியே கோபத்தோடு காட்சி அளிக்கிறாள். உற்சவ அம்பிகை சாந்தமாக வீற்றிருக்கிறாள். தமிழகத்தில் காளி, மாரியம்மனை அக்கா தங்கையாக கருதுவது போல இங்கும் ஜுவாலாமுகியை மைசூரு சாமுண்டியின் தங்கையாக குறிப்பிடுகின்றனர். முதலில் ஜுவாலாமுகியைத் தரிசித்தபின், சாமுண்டீஸ்வரி மலைக் கோயிலுக்குச் செல்வதை நியதியாகப் பின்பற்றுகின்றனர்.
ராகுகால தீபம்: சன்னதி முன்பு அம்மனின் பாதம் இருக்கிறது. அதன் அடியில் அசுர சக்திகள் செயல் இழந்து உயிரற்ற நிலையில் கிடப்பதைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. இங்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும். பவுர்ணமியன்று எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்கின்றனர். ராமநாதேஸ்வரர்: ஜுவாலாமுகி சன்னதியை அடுத்து ராமநாதேஸ்வரர் சன்னதி உள்ளது. அசுரனை வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை சிவபெருமானை வழிபட்டு பாவமன்னிப்பு பெற்றாள். நம் சித்தத்தை(அறிவை) தெளிவாக்கி நம்மை சிவமாக்கும் தன்மை கொண்டவர் என்பதால் இவர் சித்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தண்டகாரண்யத்தில் காட்டில் அலைந்த ராமனும் லட்சுமணனும் சீதையைத் தேடி தெற்கே வந்தனர். வழியில் தேவியால் பிரதிஷ்டை செய்த சித்தேஸ்வர லிங்கத்தைக் கண்டனர். சீதாதேவியைக் கண்டுபிடிக்க அருள்புரியும்படி அவரிடம் வேண்டிக்கொண்டனர். ராமர் வழிபட்டதால் இக்குன்றுக்கு ராமநாதகிரி என்றும், சுவாமிக்கு ராமநாதேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது. வசிஷ்டமகரிஷியும் இவரை வணங்கியுள்ளார். லிங்க பாணத்தில் முகம் போன்ற கவசம் சாத்தப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகம், கங்கை, சந்திரனை தலையில் சூடியிருக்கிறார். தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. வாகனமாக இரு நந்திகள் உள்ளன. அவை சுவாமிக்கு நேராக இல்லாமல் விலகி இருப்பது மாறுபட்ட அமைப்பாகும். சனிப்பிரதோஷ நாளில் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
பரிவாரமூர்த்திகள்: விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், நாகபைவரர், மாரகதண்ட நாயக்கர் சன்னதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மாரகதண்ட நாயக்கர் இப்பகுதியில் ஆண்ட மன்னரின் சேனாதிபதி ஆவார். வலக்கையில் ஈட்டியும், இடக்கையில் வாளும் ஏந்தி போருக்குச் செல்வது போல காட்சி தரும் இவருக்கு, பணியாள் ஒருவன் குடைபிடித்த நிலையில் இருக்கிறான். போரில் தன்னுயிரைக் கொடுத்து மன்னரைக்காத்து வீரசொர்க்கத்தை அடைந்தவர். இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது.
தல வரலாறு:
ரத்த பீஜாசுரன் என்னும் அசுரன், தவசக்தியால் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்று உயிர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய உடம்பில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரர்களை தோற்றுவிக்கும் என்பதும் ஒரு வரம். இதைப் பயன்படுத்தி பூலோகத்தையும், தேவலோகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். ஆணவத்தால் ரிஷிகளின் யாகங்களைத் தடுத்து மகிழ்ந்தான். இதுபற்றி உலகத்தைக் காக்கும் பரம்பொருளான பராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். அன்னை உக்ரரூபத்துடன் அனல்பறக்கும் விழிகளோடு, நாக்கை நீட்டியபடி, கோரைப்பற்களுடன் ஜுவாலாமுகி என்ற திருநாமத்தோடு பூலோகம் கிளம்பினாள். ரத்தபீஜாசுரனுடன் போரிட்டாள். திரிசூலத்தால் அவனைக் குத்திக் கிழித்தாள். அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தம் முழுவதையும் தேவியே குடித்துவிட்டாள். அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அம்பிகை அங்கேயே கோயில் கொண்டாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்பிகை புற்றில் இருந்து சுயம்புமூர்த்தியாக வெளிப்பட்டதாகவும், நான்கு கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் ஏந்தி நிற்பதும் சிறப்பு.