இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக புற்றுவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
வேதாத்ரி, கிருஷ்ணா மாவட்டம்
ஆந்திர மாநிலம்.
போன்:
+91 8678- 284 899, 284 866, 98482 75169
பொது தகவல்:
விஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.
காலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.
சென்னையில் இருந்து... 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.
புதுச்சேரியில் இருந்து... 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி. 12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி. 12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.
கோவையில் இருந்து... 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி. 13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி. 12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி. 12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி. 16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி
மதுரையில் இருந்து... 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி. 12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி. 12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி. 16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி. 14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)
பிரார்த்தனை
குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு கத்தியைக் காணிக்கையாக செலுத்தி விட்டுச் செல்கின்றனர்.
தலபெருமை:
மலைக்கோயில்: வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்றுவடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கும் சுதை சிற்பம் உள்ளது. திருமணம் ஆகாத பெண்கள் இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். நாகர் சிற்பங்களும் உள்ளன. மலையில் இருந்து கிருஷ்ணாநதியின் எழில்மிகு தோற்றத்தைக் காணலாம். நதியில் பாதுகாப்பாக நீராட படித்துறை வசதி செய்யப்பட்டுள்ளது.
உய்யால வழிபாடு: குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். உய்யால என்றால் தொட்டில். குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும், செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
சிவன் சன்னதி: நரசிம்மர் கோயிலாக இருந்தாலும், இங்கு சிவனுக்கும் சன்னதி உள்ளது. சந்நிதி முன்பு தனி கொடிமரம் இருக்கிறது. சிவபெருமானை ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி என்றும், அம்பிகையை பார்வதி அம்மவாரு என்றும் அழைக்கின்றனர். விழாக்காலங்களில் உற்சவர் சிவபார்வதி சிறிய தேரில் பவனி வருகின்றனர். சிவன் முன் நந்தி இருக்கிறார். வீரபத்ரசுவாமிக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு திருநீறு வழங்கப்படுவதில்லை. தீர்த்தம் தருகின்றனர். சிவபாதம் பொறித்த ஜடாரியும் வைக்கின்றனர்.
இந்தக் கோயிலுக்கு வந்த ஒரு பக்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஆபரேஷன் செய்தாலும் பிழைப்பது அரிது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் வேதாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு அழைத்து வந்து, அவரைக் காப்பாற்றும்படி சுவாமியிடம் சரணடைந்தனர். என்ன ஆச்சரியம்! அந்த அம்மையார் அதிசயமாக உயிர் பிழைத்தார். நரசிம்மருக்கு கத்தி ஒன்றை அவர் காணிக்கையாக்கினார். பிழைக்க முடியாத தனக்கு, டாக்டர் ரூபத்தில் வந்து, ஆபரேஷன் செய்தது வேதாத்ரி நரசிம்மனே என அவர் மனம் நெகிழ்ந்து சொல்கிறார். மாதம்தோறும் கோயிலுக்கு வருகிறார். காணிக்கை கத்தி நரசிம்மர் முன் இருக்கிறது. இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று வியாசமுனிவர் கூறியிருக்கிறார். இந்த கோயிலுக்கு செல்பவர்கள் முக்தி அடைவர். 900 ஆண்டுகளுக்கு முன், ரெட்டி மன்னர்கள் தற்போது இருக்கும் கோயிலை கட்டியுள்ளனர். புலவர் எர்ர பிரகதா, கவிஞர் சர்வ பவ்ம ஸ்ரீநாதா, வியாக்ய கார நாராயண தீர்த்தலு ஆகியோர் இந்த நரசிம்மர் குறித்து பாடியுள்ளனர். ஸ்தோத்திர தண்டகம், காசிக்காண்டம் ஆகிய நூல்களில் இந்த நரசிம்மர் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
தல வரலாறு:
சோமாக்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்குவேதங்களையும் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். இதனால், படைக்கும் தொழிலைச்செய்ய முடியாமல் தவித்த பிரம்மா, ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டார். பெருமாள் மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று சோமாக்சுரனை அழித்தார். வேதங்களை மீட்டு வந்தார். அந்த வேதங்கள் மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன. தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில், பெருமாளும் தங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தன. தற்போது அங்கு தங்க இயலாது என்றும், நரசிம்ம அவதார காலத்தில் இரண்யனை அழித்த பிறகு, அங்கு வருவதாக பெருமாள் உறுதியளித்தார். வேதங்கள் கிருஷ்ணவேணி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம மலையில் தங்கின. அவர்களைக் கண்ட கிருஷ்ணவேணி, தனக்கும் பெருமாள் தரிசனம் வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தாள். வேதங்களும், கிருஷ்ணவேணியும் சில யுகங்களாகத் தவமிருந்தன. நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரண்யனை அழித்த பிறகு அங்கு வந்தார். வேதங்கள் தங்கிய இடத்திற்கு வேதாத்ரி என்று பெயரிட்டு அங்கேயே தங்கினார். அவரது உக்ரம் தாங்க முடியாததாக இருந்தது. எனவே,அவரை ஜ்வாலா நரசிம்மர் என்றனர். இதன் பிறகு, பிரம்மா சத்தியலோகத்தில் இருந்து வேதாத்ரி வந்தார். வேதங்களை தன்னுடன் அழைத்துச் செல்லும்போது, கிருஷ்ணவேணி நதியில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராமக்கல்லுடன் திரும்பினார். ஆனால், அந்தக் கல்லின் உக்ரத்தை தாளமுடியாமல், மீண்டும் கிருஷ்ணவேணி நதியிலேயே வைத்து விட்டார். பிற்காலத்தில், தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்க முனிவர் வேதாத்ரி வந்தார். அவர் அங்கிருந்த நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில், லட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதனால், உக்ர நரசிம்மர் லட்சுமிநரசிம்மராக மாறினார். லட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து வந்தார். அவர், தன்னுடன் நரசிம்மரின் ஒரு வடிவத்தை எடுத்துச் சென்று வேதாத்ரி அருகில் உள்ள ஒருமலையில் வைத்தார். அந்த மலை கருடாத்ரி எனப்படுகிறது. இங்குள்ள நரசிம்மருக்கு வீரநரசிம்மர் என்பது திருநாமம். ஆக, வேதாத்ரியில் ஜ்வாலாநரசிம்மர், வீரநரசிம்மர், சாளக்ராமநரசிம்மர், லட்சுமிநரசிம்மர், கருவறையில் யோகானந்த நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் வீற்றிருக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக புற்றுவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : விஜயவாடா- ஐதராபாத் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் சில்லக்கல்லு என்னும் சிறுநகரம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் ரோட்டில் 10 கி.மீ., கடந்தால் வேதாத்ரி.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விஜயவாடா
அருகிலுள்ள விமான நிலையம் :
விஜயவாடா
தங்கும் வசதி :
இங்கு தேவஸ்தானம் சார்பில் தங்கும் வசதி உள்ளது.