|
ஒருமுறை, இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் எனும் பல்லவ மன்னன், வீரபாண்டியநல்லூர் கிராமத்துக்கு வந்தான். அந்த ஊரின் சிவாலயத்துக்குச் சென்று, தேவியின் கருணைப் பார்வையில் மெய் மறந்தவனாக நின்றான். மூலவர் அதுல்ய நாதேஸ்வரரின் முன்னே பவ்யமாக நின்றான். கண்கள் மூடிப் பிரார்த்தித்தான். என் சிவனே! இந்த ஊர் சிறப்புறத் திகழ வேண்டும். தாகம் தணிக்கத் தண்ணீரும் சாப்பிட தானியங்களும் குறையறக் கிடைக்கும் வகையில், பூமி செழிக்க வேண்டும். பசி-பட்டினியின்றி, அனைவரும் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும். இந்தக் தேசத்தை ஆள்பவனுக்கு, மக்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தவிர வேறென்ன வேண்டும் இறைவா! என்று பிரார்த்தித்தான். அன்றிரவு, மன்னனின் கனவில் வந்த இறைவன், இன்று வழிபட்ட ஆலயத்துக்கு அருகிலேயே இன்னொரு கோயிலை எழுப்புவாயாக! எனச் சொல்லி மறைய... சிலிர்த்துப் போனான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்.
விடிந்ததும் ஊர்ப்பெரியவர்களிடம் விவரம் சொல்ல, ஊர்மக்கள் திரண்டு, மன்னனை வாழ்த்தினார்கள்; கோஷமிட்டார்கள். ஹரியும் சிவனும் ஒன்று என்று உணர்ந்து வழிபடுகிறவர்கள் நாங்கள். எங்கள் ஊரின் மையத்தில், அழகிய ஆலயமாக, பிரமாண்டமான கோயிலாக ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இதற்கு அருகில், திருமாலுக்குக் கோயில் அமையுங்கள். ஏனென்றால், உலகையே ஆளுகிற எங்கள் பெருமாள், உலகளந்த பெருமாளாகக் காட்சி தரும் திருக்கோயிலூரைத் தரிசிக்க, பல மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால், இக்கரை வரைக்கும் சென்று, பெருக்கெடுத்து ஓடுகிற தண்ணீரைக் கண்டு நடுங்கியபடி, அக்கரையில் தெரிகிற கோயில் கோபுரத்தை மட்டும் தரிசித்துவிட்டு, ஊர் திரும்பியிருக்கிறோம். ஆகவே எங்கள் ஊரில், பெருமாளுக்குக் கோயில் கட்டிக் கொடுங்கள் மன்னா! என்றனர். அதன்படி, ஊர்மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வீரபாண்டியநல்லூர் எனும் அந்தக் கிராமத்தில், அற்புதமான வைணவக் கோயிலைக் கட்டிக் கொடுத்தான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்க மன்னன். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்-ஸ்ரீ கரியசேவக விண்ணகர் எம்பெருமான். தாயாரின் திருநாமம்-ஸ்ரீபெருந்தேவி தாயார். சிவாலயமும் வைணவக் கோயிலும் அருகருகில் இருக்க.... அந்த ஊர், மிகச் செழுமையான கிராமமாக வளர்ந்தது. |
|