நெல்லிக்காட்டு மனா நம்பூதிரி குடும்பத்து டாக்டர்களால் நிர்வகிக்கப் படும் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை கோயில் அருகில் உள்ளது., தன்வந்திரி மூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது.
பிரார்த்தனை
கண் ஒளி, ஆரோக்கியம் மற்றும் செல்வவளம் பெருகவும், பாவதோஷம், ஜாதகதோஷங்கள், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் ஞாயிறு தோறும் நோய் தீர்க்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கு கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும்.
தலபெருமை:
கடின நோய்கள் கூட, இந்தக் கோயிலில் தரும் மருந்து பிரசாதம் மூலம் குணமாகி விடுகிறது. பூர்வஜென்ம நோய்கள் தீரவும், பாவதோஷம் நீங்கவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். ஜாதகதோஷங்கள் இந்த அம்மன் அருளால் நீங்கி, நோய்கள் காணாமல் போகும் என்பது இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை.
கோயிலும் மருத்துவமனையும்: நெல்லிக்காட்டு மனா நம்பூதிரி குடும்பத்து டாக்டர்களால் நிர்வகிக்கப் படும் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை கோயில் அருகில் உள்ளது. அம்மனுக்கு பூஜை செய்த பின்பே சிகிச்சை துவங்குகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாங்கிய மருந்தை அம்மன் முன் வைத்து பூஜை செய்த பின்பே கொண்டு செல்கின்றனர்.
மருந்து பிரசாதம்: கோயில் நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில், மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து அபூர்வ மருந்து பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் வீட்டில் சுத்தமாக வைத்து, தினமும் அருந்த வேண்டும். 41 நாட்கள் தொடர்ந்து அருந்தினால், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கி, நோய்கள் குணமாகி விடும். மீண்டும் நன்றியோடு அம்மனை வழிபட வரும் பக்தர்கள் தான் அதிகம், என்றார். ஞாயிறு தோறும் நோய் தீர்க்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கு கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும்.
தல வரலாறு:
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லிக்காட்டு மனா என்ற வீட்டில் வசித்த, பழமையான நம்பூதிரி குடும்பத்து ஆயுர்வேத வைத்தியர்களால் உருவாக்கப்பட்டது இந்தக் கோயில். அவர்கள் வழிவந்த நம்பூதிரி குடும்பத்தினரே, இப்போதும் பூஜை செய்கின்றனர். இக் கோயில் வளாகத்தில், மருத்துவத்திற்கான தெய்வம் என வணங்கப்படும் தன்வந்திரி மூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய் பரவத் தொடங்கியது. இதிலிருந்து காப்பாற்றும்படி தேவர்கள், தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே இந்நிலை உண்டானதாகவும், இதிலிருந்து உங்களைக் காக்க அம்பாளின் அம்சமான பகவதியம்மனின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து தேவர், அசுரர்களும், அஸ்வினி குமாரர்களும் பகவதியம்மனைச் சரணடைந்தனர். மனமிரங்கிய அன்னை நேரில் தோன்றி, மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களிடம், தன் முன்னிலையில் மருந்து தயாரிக்க உத்தரவிட்டாள். அவர்கள் அமிர்தத்திற்கு நிகரான மருந்தினை தயாரித்து தேவ அசுரர்களுக்கு அளித்தனர். அனைவரும் குணமடைந்தனர். இவளை வணங்குவோருக்கு முன்வினைப் பாவமும் நீங்கும். பிரம்மா அஸ்வினி குமாரர்களிடம், அவர்கள் மருந்து தயாரித்த இடத்தில் பகவதிக்கு கோயில் கட்ட ஆணையிட்டார். அந்தக் கோயிலே நெல்லியக்காட்டு பகவதியம்மன் கோயிலாகும். இங்கு பகவதி வேதாளத்துடன் காட்சி தருவது சிறப்பானது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது இங்கு சிறப்பு, நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.