ஒரு சமயம் சிவபெருமான் பன்னிரண்டு வயதுச் சிறுவனாக, தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் கைலாயத்தில் தவத்தில் ஆழ்ந்தார். அப்போது பிரம்மா மற்றும் தேவர்கள் சிவனை நாடி, தங்களுக்கு உபதேசம் செய்து அருளும்படி வேண்டினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு ஈசன் வந்தமர்ந்த தலமே இது. திரிகூட மலையான இங்கே அமர்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்ததால் இங்கே கோயில் கொண்டுள்ள ஈசன், திரிகொடேஷ்வர் என்றே அழைக்கப்படுகிறார். லிங்க ரூபத்தில் அருளும் திரிகொடேஷ்வரருக்கு சாலங்கயா என்னும் சிவபக்தரால் ஆரம்பத்தில் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. யார் இந்த சாலங்கயா?
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் எனும் மூன்று சிகரங்கள் கொண்ட இந்த மலைப்பிரதேசத்தில் இரு சகோதரர்களுடன் விறகு வெட்டி வாழ்க்கை நடத்தி வந்தவர் சாலங்கயா. அவர்கள் தங்கள் வாழ்வைவிடப் பெரிதாக நினைத்தது சிவபூஜையைத்தான். ஒருநாள் பிரளயமே வந்தது போல் பலத்த மழை பெய்தது. பயந்து போன அவர்கள் பாதுகாப்புக்காக ஒரு குகைக்குள் தங்க நேரிட்டது. அங்கேயே சிவபூஜையில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் மழை நின்றுவிட, குகைக்கு வெளியில் உடுக்கையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை சிவனாகக் கருதி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தனர்.
சில காலம் கழித்து அவர் காணாமல் போய்விட, மலை முழுவதும் அவரைத் தேடி அலைந்தனர். அவரைக் கண்டுபிடித்து தரும்படி அதே பகுதியில் வசித்து வந்த கொல்லபாமா என்ற சிவ பக்தையிடம் வேண்டினர். அவளோ, நான் சிவனைத் தேடி தவம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் நீங்கள் குறிப்பிடும் நபரை என்னால் கண்டுபிடித்துத் தரமுடியாது என்று கூறி, அவர்களின் கோரிக்கையை நிராகரித்தாள்.
சிவனின் தீவிர பக்தையான அவளின் வாழ்வே சிவனை பூஜிப்பதும் ஆராதிப்பதும் மட்டும்தான். ஒருநாள் சிவபூஜைக்கு தண்ணீர் வைத்திருந்த குடத்தை காகம் ஒன்று தட்டி விட, கோபம் கொண்டு காகத்தை சபித்தாள் கொல்லபாமா, அதன் காரணமாக இன்றும் இந்த மலையில் காகங்கள் பறப்பது இல்லை. கொல்லபாமாவை மேலும் சோதிக்க எண்ணிய ஈசன், கன்னிப் பெண்ணான அவளை கர்ப்பிணியாக மாற்றித் திருவிளையாடல் புரிந்தார். ஆனால் ஆவளோ உடல்ரீதியான சிரமங்களைப் பொருட்படுத்தாமல், பூஜைகளை தொடர்ந்து செய்தாள். மனம் இரங்கிய சிவபிரான் அவளுக்குக் காட்சிதந்தார். தான் இருக்கும் ருத்ர சிகரத்திற்கு தன்னுடன் வருமாறு வேண்டினாள் கொல்லபாமா. நான் உன் பின்னால் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் நீ திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவளுடன் வர சிவன் சம்மதித்தார்.
ஆனால் பிரம்ம சிகரம் அருகே வந்தபோது, மனக்குழப்பத்தால் பின்னால் வருகிறாரா என்று சந்தேகத்துடன் அவள் திரும்பிப் பார்க்க, சிவன் அங்கிருந்த குகையில் நுழைந்து லிங்க ரூபமாக மாறினார். அதேசமயம் கொல்லபாமாவிற்கு குழந்தை பிறந்து அதுவும் மறைந்து விட, கொல்லபாமாவின் பூலோக வாழ்க்கையும் நிறை வுக்கு வந்து கடவுளுடன் ஐக்கியமானாள் அவள். விவரம் அறிந்து அங்கு வந்தான், சாலங்கயா. மூன்று சிகரங்களுக்கு நடுவே லிங்க ரூபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த ஈசனைக் கண்டான். தாங்கள் தேடியது அவரையே என உணர்ந்தான். அங்கிருந்த ஈசனுக்கு திரிகொடேஷ்வரர் எனத் திருப்பெயர் சூட்டி கோயில் கட்டினான். கொல்லபாõமாவை வழிபட்ட பிறகே தன்னை தரிசிக்க வேண்டும் என இறைவன் அருள்வாக்காகச் சொல்லவே, கொல்லபாமாவுக்கும் கோயில் அமைத்தான்.
|