இங்கு தனிச்சன்னதியில் காட்சி தரும் லட்சுமி ஹயக்ரீவர் விசேஷமானவர். வியாழக்கிழமைகளில் இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள்கூட ஞாபகசக்தி அதிகரித்து கெட்டிக்காரர்களாக மாறுவார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்கின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் பவுர்ணமியில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு லட்சுமி ஹயக்ரீவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், சத்ரு பயம் நீங்கும், அறிவாற்றல் பெருகும்; தொழில் விருத்தியாகும். பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தேர்வுக்கு முன்னதாக இங்கு மாணவர்களுக்காகச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, இங்கு அட்சராப்பியாசம் எனப்படும் நெல்லில் குழந்தைகளை எழுதச் செய்யும் வைபவம் சிறப்புற நடைபெறும்.
புதன்கிழமைகளில் பெருமாளுக்கு அவல் படைத்து வழிபட்டால் பிள்ளை வரம் பெறலாம். மாசி மக கருடசேவையைத் தரிசித்தால், 12 வருடங்கள் பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும். செண்பகவல்லித் தாயாருக்கு வில்வ மாலை மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து நெய்தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்! |