|
சிவன்- விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) கையில் கிடைத்த அய்யனார் எனும் குழந்தையை, ஒரு முனிவர் வளர்த்து வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அய்யனார் குழந்தைப் பருவத்தில் அழகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். சிவ-விஷ்ணு திருவிளையாடல் நிகழ்ந்தது கீழப்புதுப்பட்டு என்றபோதும், அய்யனார் வளர்ந்தது தென்னம்பாக்கம் பகுதியில்தான். சிவனும், விஷ்ணுவும் இப்பகுதியில் வாழ்ந்த முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்தனராம். முனிவரும் அய்யனாரை வளர்ந்து வந்தார். அவருக்கு பூரணா புஷ்கலை எனும் இரண்டு மகள்கள் இருந்தனர். அய்யனார் மிகவும் வீரனாகவும் திரனாகவும் வளர்ந்து வந்தார்.
அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு எனும் மோடி வித்தை மூலம். அப்பகுதியின் சுற்றுப்புறத்திலிருந்த சில சிற்றரசர்களை சிறைப்பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான். அவனது மந்திர வித்தை அனைவரையும் சிறைப்படுத்தும் அளவு விபரீதமாக இருந்தது. எனவே மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் அய்யனாரை அழைத்து, நீ போய் அந்த மந்திரவாதியின் கொட்டத்தை அடக்கி, சிற்றரசர்களைக் காப்பாற்று. ஊர் மக்களின் அச்சம்போக்கு என்று கூற, அய்யனார் அந்த வலிமை மிக்க மந்திரவாதியுடன் மோதி, அவனை அழித்து, சிற்றரசர்களை சிறையிலிருந்து மீட்டார். இதனால் ஊர் மக்களும் பயம் நீங்கி சந்தோஷப்பட்டனர். அய்யனாரின் வீரத்தை மெச்சிய முனிவர், உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அய்யனார் பூரணா புஷ்கலையை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். மேலும் என்னைவிட பலசாலியான-மற்றும் என்னைவிட வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முனிவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார். என் மக்கள் இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வரக்கூடாது. அவர்கள் இருவரையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சம்மதித்தார். அய்யனாரும் சத்தியவாக்கு கொடுத்து பூரணா, புஷ்கலையை திருமணம் செய்துகொண்டார். சொன்ன சொல் மாறாமல் இருவரையும் கண் கலங்காமல் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டார். அய்யனார் கேட்டுக்கொண்டபடி வீரபத்திரை காவலாளியாக நியமித்தார் முனிவர். ஒரு நாள் அய்யனார் புஷ்கலையுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பூரணா, தன் சகோதரியும் கணவரும் அந்தரங்கமாக இருப்பதால், அதற்கு இடையூராக இருக்கவேண்டாம் என நினைத்து சற்று தள்ளிச் சென்று ஈரமான தன் கூந்தலை விரித்துப்போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள் தூரத்தில் இருந்து இதைப் பார்த்த முனிவர், தன் மகள் பூரணா அழுகிறாள் என நினைத்தார். மிகுந்த கோபம் கொண்ட அவர், உனக்கு அடுத்த பிறவியில் திருமணமே நடக்காது என்ற அய்யனாருக்கு சாபமிட்டார். எனவேதான் அடுத்த பிறவியில் மணிகண்டனாகப் பிறந்த அய்யனாருக்குத் திருமணமாக வில்லை என்று கூறப்படுகிறது. |
|