|
பீமா தீரத்தில் விஷ்ணு, சித்தடேக் பர்வதத்தில் கடும் தவம் புரிந்து விநாயகரின் அருளைப் பெற்றார். அந்த வரத்தின் மூலம் பயங்கர அரக்கர்களான மது, கைடபர்களை அழிக்கும் காரிய சித்தியினை அடைந்தார். இந்தச் சரிதம் திரேதா யுகத்தில் நிகழ்ந்தது. ஈஸ்வரன், பிரம்மனைப் படைத்ததும், படைக்கும் தொழிலைத் தொடங்குவதில் பிரம்மன் முனைந்தார். முதலில் கணபதியை மனதில் நினைத்து தியானம் செய்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், ஏகாட்சர மந்திரத்தை உபதேசித்து கடுந்தவத்தை மேற்கொள்ளும் படி கூறினார். தவத்தின் முடிவில் பிரம்மனை சிருஷ்டிப் பணியில் ஈடுபட அருளுகிறார். பிரம்மன் மூலம் படைப்புகள் ஆரம்பமாகின்றன. பிரம்மனது கண்களிலிருந்து ஆதித்தியன், இதயத்திலிருந்து சந்திரன், பாதங்களிலிருந்து புவி.. என ஒவ்வொன்றாகப் படைக்கப்படுகின்றன. அந்தத் தருணத்தில் பள்ளிகொண்டிருந்த விஷ்ணுவின் காதுகளிலிருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் உருவாகினர். அந்த அரக்கர்கள் பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு பங்கம் விளைவிக்கத் தொடங்கினர். அதோடு, தேவர்களையும் பலவாறு துன்புறுத்தினர். அஞ்சி ஓடிய தேவர்கள், சயனத்தில் இருந்த நாராயணனைக் கூவி எழுப்பத் தொடங்கினார்கள். பிரம்மனும் நித்திரா தேவியை நாராயணனை விட்டு அகலுமாறு பணித்தார். பள்ளியிலிருந்து எழுந்த விஷ்ணுவை தேவர்கள் நமஸ்கரித்து, மது, கைடபர்களை அழிக்க வேண்டினார்கள். விஷ்ணுவும் அஸ்திர, சாஸ்திரங்களுடன் எழுந்தருளி, அரக்கர்களை மாய்க்கப் புறப்பட்டார். யுத்தம் நீண்டகாலம் நடந்தது. ஆனால், விஷ்ணுவால் அரக்கர்களை வீழ்த்த முடியவில்லை. துணுக்குற்ற விஷ்ணு என்ன செய்வதென்றறியாமல் யுத்தத்தை நிறுத்தி மறைந்தார். கந்தர்வனாக வடிவெடுத்து, அமர்ந்துகொண்டு தனது மனக் குழப்பத்திற்கு விடைகாண வீணை மீட்டுகிறார். தேவர்கள், அரக்கர்கள் என யாவரும் அந்த இசைக்கு மயங்குகின்றனர். வீணா கானம், கைலாயத்தையும் எட்டுகிறது. சிவபெருமான் நிகும்பன், புஷ்பதந்தன் என்ற தனது பிரத்யேக கணங்களை அழைத்து, வீணையை மீட்டுபவரை கைலாயத்திற்கு அழைத்து வரப் பணித்தார். இசைமழை கைலாயத்திலும் தொடர்ந்தது. தங்களை மகிழ்விப்பவர் நாராயணனே என்று அறிந்து கொண்ட ஈசன் மகிழ்வுற்று அவரை ஆலிங்கனம் செய்து கொள்கிறார்.
விஷ்ணுவிடம், அவரது கவலைக்குக் காரணம் என்னவென்று வினவுகிறார். எவ்வளவு முயன்றும் மது, கைடபர்களை அழிக்க முடியாததை சிவபெருமானிடம் விஷ்ணு கூறினார். நல்ல நோக்குடன் செய்யும் அந்தச் செயலுக்கும் தடங்கல் இடைஞ்சல்கள் வருவதற்குக் காரணம் முதலில் கணபதியை தியானிக்காததே என ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார். அதோடு, நாராயணனுக்கு, விக்னேஸ்வரனின் ஷடாட்சர மந்திரத்தை உபதேசித்தார். தெளிவுற்ற நாராயணர் சித்த ÷க்ஷத்திரம் என்ற தலத்தை அடைந்து அங்கிருந்த ஒரு சிறு குன்றில் அமர்ந்து ஸ்ரீ கணேசாய நமஹ மந்திரத்தை இடைவிடாது ஜபிக்கத் தொடங்கினார். அவரது மனம் ஒன்றிய பக்தியில் மயங்கிய விநாயகர், அவருக்குக் காட்சி அளித்து தமது ஆசியை வழங்கினார். விஷ்ணு, மது கைடபர்களுடன் மறுபடியும் யுத்தத்தைத் தொடங்கினார். நீண்ட காலம் யுத்தம் நடந்தும் அரக்கர்களை நோக்கி, அசாதாரண பலத்துடன் போர் புரியும் உங்களைக் கண்டு என் மனம் பூரிக்கிறது. உங்களை நான் வதம் செய்யும் முன் உங்களுக்கு வேண்டியதை வரமாகக் கேளுங்கள்! என்றார் விஷ்ணு. அரக்கர்கள் நகைத்தார்கள். நீங்கள் தான் எங்களை அழிக்க முடியாமல் நீண்ட காலம் யுத்த பூமியில் திணறுகிறீர்கள். உங்களுக்கு வேண்டிய வரத்தை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் ! என்றார்கள். விஷ்ணுவும் புன்முறுவலுடன் அவர்களை அழிக்கும் வரத்தை அவர்களிடமே வேண்டினார். அரக்கர்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள். எல்லாப் பக்கமும் நீர் நிறைந்திருந்தது. எனவே, நீரில்லா இடத்தில் தான் தங்களை வதம் செய்ய இயலும் என அவர்கள் வரம் தந்தார்கள். விஷ்ணு உடனே விஸ்வரூபம் தரித்தார். மதுகைடபரைத் தன் மடியில் கிடத்தி, சக்ராயுதத்தால் வதம் செய்தார். மது, கைடபர் அழிந்தனர். எந்த மேட்டுப் பகுதியில் விஷ்ணு அமர்ந்து விதிப்படி கணபதியை பூஜித்தாரோ அவ்விடத்தில் கண்டகி நதிக் கல்லில் வடித்த விநாயகரை வைத்து, விஷ்ணுவே ஆலயம் எழுப்பினார். காரிய நிறைவு பெற நாராயணருக்கே சித்தி கிடைத்ததால் இவ்விடம் சித்தடேக் என அழைக்கப்பட்டது. கணபதி சித்தி விநாயகர் என்ற திருநாமத்தை அடைந்தார். மதுகைடபாரிவரத் விநாயகர் என்று குறிப்பிடுவோரும் உண்டு. |
|