இங்கு நவம்பரில் கார்த்திக் பூர்ணிமா விசேஷம். கார்த்திகை மாதம் பவுர்ணமியை ஒட்டி 15 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இந்தக் காலத்தில்.ஆயிரக்கணக்கில் பக்தர்கள், சம்பல் நதியில் நீராடி கேசவரை வழிபடுவர்.
தல சிறப்பு:
இங்கு மூலவர் வெள்ளைக் கல்லால் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளதுபடி காட்சியளிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இந்தக் கோயில் மிகப் பெரிய மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவிலான கருவறையின் மேல் கட்டப் பட்ட ராஜகோபுரம், கூம்பு வடிவில் உள்ளது. தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், மலர்கள், மிருகங்கள், அரசர்களின் சிற்பங்கள் உள்ளன. உச்சத்தில் கலசம் உள்ளது. கோயிலின் உட்புறத்தில் நமஸ்கார மண்டபத்தை ஜக்மோகன் என்று அழைக்கின்றனர். இது ராஜதர்பார் போல் ஜொலிக்கிறது. உப்பரிகைகளில் இங்கும் சிற்பிகளின் கைத்திறன் பளிச்சிடுகிறது. இங்குதான் கேசவர் கொலு வீற்றிருக்கிறார். இவரை கேசவ்ராய்ஜி என்கின்றனர். பத்மாசனத்தில் அமர்ந்துள்ள இவரது விக்ரகம் வெள்ளைக் கல்லால் ஆனது (கருமையான ஒரு விக்ரகம் கோயிலின் வேறு இடத்தில் உள்ளது). இடது கையில் சக்கரம். வலது கையில் சங்கு. பட்டு, பீதாம்பரத்துடன் அழகாய் காட்சி தருகிறார். மார்பில் ஹாரம் பளபளக்கிறது. பூஜைகள் புஷ்டிமர்க்ய சம்பிராயதத்தில் செய்யப்படுகிறது. மாலை வேளையில் சென்றால், கோயிலின் சுற்றுச்சூழல் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருமாலின் திருநாமங்களில் ஒன்று கேசவன். கேசவா... என்றால் தடைகளை நீக்குபவர். காலையில், நமது பணிக்கு கிளம்பும் முன், வீட்டு வாசலில் நின்று ஏழுமுறை கேசவா என்று சொல்லிவிட்டு கிளம்பினால், அன்றைய பணிகள் தடையின்றி நடக்கும் என்பர் வைணவப் பெரியவர்கள். கே÷ஷாராய்பட்டன் என்பதிலுள்ள பட்டன் என்பதற்கு நதிக்கரை ஓரம் என்று பொருள்.இந்தப் பெயருக்கேற்ப கேசவர் கோயில், சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ளது. நதியின் மறுகரையில் கோட்டா என்ற ஊர் உள்ளது. படகு மூலமாக நதியை கடக்க வேண்டும். படகில் கூட்டத்துடன் சென்றால் ரூ.10. தனியாக சென்று திரும்ப ரூ.400 வரை வசூலிக்கின்றனர். இறங்கியவுடன் பல படிகள் ஏற வேண்டும்.
தல வரலாறு:
இந்தக் கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அமைப்பு காசி போல் உள்ளது. பூந்தியின் அரசனுமான ராந்ததேவ் என்பவனுடைய கனவில் இரண்டு உருவங்களாக, வெள்ளை நிறக் கல்லில்கேசவனாக, கருநிறத்தில் நான்கு கைகளுடன் காட்சி தந்தார். அரசனும் 1250ல் கோயில் கட்ட ஆரம்பித்தார். ஆனால் , பலவித அரசியல் கிளர்ச்சிகளால், 400 ஆண்டுகளுக்கு பிறகு 1641ல், சத்ருசால் என்ற மன்னனால் கட்டி முடிக்கப்பட்டது.
இருப்பிடம் : சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் கோட்டா என்ற ஊரில் நிற்கும். தூரம் 1945 கி.மீ.,. செவ்வாய் மற்றும் ஞாயிறு மாலை 5.40க்கு கிளம்பும். கோவையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலும் கோட்டாவில் நிற்கும். வெள்ளிக் கிழமைகளில் மாலை 5.40க்கு கிளம்பும். கோட்டாவில் இருந்து 15 கி.மீ., சென்றால் கே÷ஷாராய்பட்டன் சம்பல் நதிக்கரை வரும். அங்கிருந்து படகில் அக்கரையில் உள்ள கோயிலை அடையலாம். கே÷ஷாராய்பட்டனில் இருந்து பூந்திக்கு 40 கி.மீ., பூந்தியில் பழங்கால நினைவுச் சின்னங்கள் உள்ளன.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோடா
அருகிலுள்ள விமான நிலையம் :
கோடா
தங்கும் வசதி :
பூந்தியிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.