இத்தலத்தில் நவராத்திரி 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். தினசரி சிறப்பு அலங்காரங்களுடன் அபிஷேக பூஜைகளும் லட்சார்ச்சனைகளும் நடைபெறும். விஜய தசமியன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியான “வித்யாரம்பம்” நடைபெறும். இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொள்வர்.
மார்கழி திருவாதிரையில் வரும் ஆருத்ரா தரிசனம் விழா சதய நட்சத்திரன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கி ஊஞ்சல் சேவை விநாயகர், ஈசன், அம்பாள், மாணிக்கவாசகர், அத்ரதேவர் என பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெளிப்பிரகார உலா மற்றும் திருவாதிரையன்று விடியற்காலை திரவிய அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் என வெகு விமர்சையாக நடைபெறும் விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கு பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரை அனுஷம் அன்று ஆண்டு விழாவும் ஆடிப் பூரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
தல சிறப்பு:
புராதனமான கோயில்களில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை இத்தலத்தில் உணரமுடிகிறது. தினசரி இருகால பூஜைகள் நடந்து வருகின்றன. பிரதோஷ காலங்களில் விஸ்வநாதருக்கு விசேச பூஜைகள் உண்டு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
மாங்கரை அம்மன் கோயில்,
எலப்புள்ளி பாற,
பாலக்காடு,
கேரளா
போன்:
+91 491 2583327, 94951 33717
பொது தகவல்:
கோயில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விஸ்தீரணமாக அமைந்திருப்பது சிறப்பு. சாலை மட்டத்திலிருந்து கோயில் தளம் சற்றே தாழ்ந்துள்ளது கோயில் கிழக்குப் பார்த்து இருந்தாலும் நுழைவு வாசல் வடக்கு நோக்கி உள்ளது. கோயில் மேற்கு மூலையில் வாகனங்கள் உள்ளே வரும் வகையில் தனி வழி உள்ளது. கோயில் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பிரதான சன்னதியின் வாயிலில் கிழக்கு நோக்கியபடி விமானத்துடன் கூடிய சன்னதியில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். முன் மண்டபத்தைக் கடந்தால் நாம் காண்பது வடக்குப் பகுதியில் மாங்கரையம்மன் சன்னதியின் எதிரே கொடிக்கம்பம் சூலம், பலிபீடம் மற்றும் சிம்ம வாகனம் உள்ளன. தென் பகுதியில் ஐயப்பன் மற்றும் மஹா கணபதி ஆகியோரின் தனி சன்னதிகள் உள்ளன.
மண்டபத்தின் மேல் பகுதியில் 14 கற்தூண்கள் தாங்கியபடி அமைந்த மண்டபத்தில் அருள் நடனம் புரியும் நடராஜரும் சிவகாமி அம்மையும் எழுந்தருளியுள்ள தனிச் சன்னதி தெற்கு நோக்கியபடி வட பகுதியில் அமைந்துள்ளது. அடுத்துள்ளது 20 தூண்கள் தாங்கியபடி அமைந்திருக்கும் இரு சன்னதிகளுக்கும் பொதுவாக மண்டபம். ஒவ்வொரு தூண்களிலும் ராமர், ஈசன் போன்ற தெய்வீக புடைப்புச் சிற்பங்களை வடித்துள்ளனர். வடபகுதியில் அம்மன் சன்னதியும் தென் பகுதியில் ஈசன் (விஸ்வநாதர்) சன்னதியும் உள்ளன. இரண்டிற்கும் நடுவே உற்சவர்கள் எழுந்தருளியுள்ள சன்னதி உள்ளது. மகா மண்டபத்தில் விஸ்வநாதர் மற்றும் அம்மன் சன்னதி எதிரே தனி வாயில்கள் உள்ளன.
அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையில் மாங்கரையம்மன் அஷ்ட புஜ நாயகியாய் வலது கரங்களில் சூலம் வாள், சக்கரம், கர்கம் மற்றும் இடது கரங்களிலும் அக்னி கலசம், மணி, பாணபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி’ அமர்ந்த கோலத்தில் வலது காலை மடித்து இடது காலை மஹிசாசூரனை வதம் செய்த நிலையில் எழிலார்ந்த வடிவில் எழுந்தருளி உள்ளார். தென்பகுதியில் விஸ்வநாதர் லிங்க வடிவில் அருள் புரிகின்றார். ஈசனின் சன்னதியின் முன் வடபுறத்தில் அன்னை விசாலாட்சி தெற்குமுகமாக அருள் பாலிக்கின்றார். அம்மன் மற்றும் ஈசன் அர்த்த மண்டப நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள துவார பாலகர்கள் மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் கலையம் சத்துடன் இருப்பதைக் காணமுடிகிறது. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் வெளிச்சுற்றில் பிரதான விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியர், மஹாலட்சுமி, சண்டிகேஸ்வரர் வேட்டை கருப்பண சாமி, நவகிரஹங்கள் ஆகியோர் தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமண தடை, குழந்தையின்மை உடல் நலம் போன்ற எண்ணற்ற வேண்டுதல்களுக்காக பக்தர்கள் அன்னையிடம் சரணடைகின்றனர். கருணையே உருவான அன்னை, தாயுள்ளத்தோடு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதால் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிேஷகம் செய்கின்றனர்.
தலபெருமை:
கோயில் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்படுவது குறிப்பிடதக்க அம்சமாகும். இத்தலத்தில் சிவாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தேனாரி தீர்த்தம் தீர்த்தமாக விளங்குகின்றது.
தல வரலாறு:
ஆதியில் கேரளத்தில் உள்ள வணிகர்கள் தமிழ்நாட்டிற்கு தானியம், மிளகு ஏலம் போன்ற வாசனை மிகுந்த பொருட்களை காளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வாணிபத்திற்காக நீண்ட தூரம் செல்வர். நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்ததால் வழியில் ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு முறை தமிழகத்தில் உள்ள சந்தைக்கு செல்லும் வழியில் எலப்புள்ளி பாற தேசத்தில் காளை மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். வண்டியில் மிக மதிப்பு மிக்க குருமிளகு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது அழகிய சிறுமி ஒருத்தி அங்கு வந்து வணிகர்களிடம், “சிறிது குருமிளகு வேண்டும் தாருங்கள்” எனக் கேட்டாள். ஆனால் வணிகர்களோ இந்த மூட்டையில் இருப்பது மிளகு அல்ல தானியஙகள் தான் ” எனக் கூறி மறுத்து விட்டார்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் அச்சிறுமி திரும்பிச் சென்று விட்டாள்.
வணிகர்கள் ஓய்வுக்குப் பின் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊரில் சந்தை கூடும் இடத்தை அடைந்து மூட்டைகளை இறக்கி வைத்தனர். வியாபாரத்திற்காக மூட்டைகளைப் பிரித்தனர். மிளகுக்குப் பதில் மூட்டைகளில் தானியங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர். ஒவ்வொரு மூட்டையாய் அனைத்து மூட்டைகளையும் பிரித்துப் பார்த்ததில் அனைத்திலும் தானியங்கள் இருப்பதைக் கண்டு அனைத்து வியாபாரிகளும் நிலைகுலைந்து போயினர். விலைமதிப்புமிக்க மிளகுகள் எல்லாம் சாதாரண தானியங்களாக மாறியதால் ஏற்பட்ட நஷ்டத்தை எண்ணி குழம்பிபோயினர். காரணம் தெரியாமல் தவித்தனர்.
ஓய்வு எடுத்தபோது சிறுமி ஒருத்தி வந்து மிளகு கேட்டதும் இவை எல்லாம் தானியங்கள் எனக் கூறியதும் நினைவுக்கு வரவே, பொறி தட்டியது தவறு நேர்ந்த தருணத்தை உணர்ந்தனர். பயத்தினால் உடல் வியர்த்தது அச்சிறுமியை காண விரைந்தனர். ஆனால் அச் சிறுமியை அவ்விடத்தில் காணவில்லை. சுற்று வட்டாரத்தில் தேடினர். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் மாமர நிழநில் அச்சிறுமி நிற்பதைக் கண்டனர். அச்சிறுமியிடம் தெய்வீக அம்சம் பொருந்திய வடிவைக் கண்டனர். ஓடிச் சென்று அச்சிறுமியின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினர். “தாங்கள் யாரென்று தெரியாமல் நடந்து கொண்டதற்கு வருந்துகிறோம். தயவு செய்து எங்களை மன்னித்தருள்வீர்களாக ” எனக் கோரினர்.
அச்சிறுமி சிறிது நேர அமைதிக்குப்பின், “அறியாமல் நீங்கள் நடந்து கொண்டதற்காக உங்களை மன்னித்து விட்டேன். நான் இங்கு தான் வாசம் புரிகிறேன். நீங்கள் செய்த தவற்றுக்குப் பரிகாரமாக இதே இடத்தில் எனக்கு ஒரு கோயில் எழுப்பி, என்னை பூஜித்து ஆராதனை செய்து வாருங்கள். உங்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் காத்து வருவேன். மேலும் உங்கள் தானிய மூட்டைகள் மறுபடியும் மிளகு மூட்டைகளாக மாறிவிடும்” எனக் கூறி மறைந்தார்.
இச்செய்தி வணிகப் பெருமக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. அம்மனே நேரில் வந்து தனது விருப்பத்தைத் தெரிவித்ததால், பெரிய செல்வந்தர்கள் பலரும் நிலம் வயல்கள் என தானமாக வழங்கினர்.
கோயில் அமைப்பை திட்ட மிட்டு இறுதி வடிவம் கொடுத்தபின் சிறிய அளவில் அழகிய கோயிலைக் கட்டி அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். (சிறுமியாக வந்த அம்பிகை நின்றிருந்த இடம் மாமரங்கள் அடர்ந்த தோப்பு அருகில் ஆகும். எனவே மாந்தோப்பில் உள்ள அம்பிகை என பொருள்படும்படி வடமொழியில் “ஆம்ரதீர அம்பிகா ” என அழைத்து வந்தனர். பின்னாளில் “மாங்கரை அம்மன் ” என்ற தமிழ்ப் பெயரால் அழைக்க பின் அப்பெயரே நிலைத்து விட்டது.) இது “1115 ம் ஆண்டு ஜெய வருடம் தை மாதம் 11ம் தேதி சோமவாரம் ரோகணி நட்சத்திரத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.” என கோயிலில் காணப்படும் கல்வெட்டில் காணப்படுகிறது. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் கோயில்களுடன் 1919 ஆண்டில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். முன் மண்டபம், கோபுரங்கள், விமானங்கள், சுற்று மதிற்சுவர் எழுப்பி கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமை பெற்ற கோயிலுமாக 1961ம் ஆண்டில் ஜீர்ணோத்தாரணம் செய்து மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் 1979 மற்றும் 2002 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது மேற்கூறிய விபரங்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில் பதித்து, கோயில் முன்மண்டப வாசலில் பதித்துள்ளனர். இதன்படி கோயில் 900 ஆண்டுகள் புராதனமானது என்பது நிரூபணமாகிறது.
இருப்பிடம் : பொள்ளாச்சியில் இருந்து 30 கி.மீ. தொலைவு. பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு. பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையில் 10 வது கி.மீ.ல் எலப்புள்ளி பாற எனுமிடத்தில், பிரதான சாலையில் பஸ் நிறுத்தத்தருகே கோயில் அமைந்துள்ளது.