இத்தலத்தில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. வருட உற்சவத்தில் மண்டல பூஜை, மகர ஜோதி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதிஷ்டா தினம் ஆகிய விழாக்கள் மிகச் சிறப்புடன், அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் சபரி மலையில் உள்ள ஐம்பொன் சிலை போன்றே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. (விழாக் காலங்களில் நேரம் மாறுபடும்.)
முகவரி:
முகவரி :
ஸ்ரீ ஐயப்பா கோயில் டிரஸ்ட்,
கருப்பத்துார், கிருஷ்ண நாராயணபுரம் தாலுகா,
கரூர் மாவட்டம்-639 105
போன்:
+91 8778150883
பொது தகவல்:
கோயில் கிழக்கு நோக்கி, அமைந்துள்ளது. கோயிலின் உயரம் முன்பிருந்ததைவிட சுமார் 6 அடி உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 10 படிகளைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். அர்த்த மண்டபத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் காவல் புரிந்து வர, ஆகம சிற்ப சாஸ்திரபடி அமைக்கப்பட்ட மூல ஸ்தானத்தில், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஐயப்ப சுவாமி எழுந்தருளி உள்ளார். மகா மண்டபம் சபரி மலையில் உள்ளதைப்போல் அமைந்திருப்பது சிறப்பு.
கோயில் வளாகத்தில் தென் மேற்கு பகுதியில் கன்னிமூல கணபதி சன்னதியும், வடமேற்கு திசையில் மாளிகை புரத்தம்மன் சன்னதியும், கேரள கோயில் விதிப்படி கலசமும் விமானமும் அமைக்கப்பட்டுள்ளன. கன்னி மூல கணபதியும் மாளிகைபுரத்தம்மனும் கருங்கற்களால் வடிக்கப்பட்ட சிலா ரூபங்கள் ஆகும்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது அனைத்து விதமான வேண்டுதல்களையும் இங்குள்ள ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் ஐயப்பனுக்கு பலவிதமான அபிேஷகம் செய்து, சிறப்பு அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தமிழகத்தில் அமைந்த முதல் ஐயப்பன் கோயில். சபரிமலையில் பம்பா நதி உள்ளது போல் இங்கு அகண்ட காவேரி நதி உள்ளது. சபரி மலையில் சிவனைத் தரிசித்த பின் ஐயப்பனை ரிசிப்பது வழக்கம். அதுபோலவே இங்கு ஐயப்பன் கோயிலிற்கு எதிரே உள்ள சிம்மபுரீஸ்வரரை தொழுத பின் ஐயப்பனைத் தரிசிக்கலாம். இங்கு பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லை. சபரிமலையில் உள்ள மூலவரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்ரகமும் ஒரே மாதிரி உள்ளது. குறிப்பாக இங்கு சிறிது பெரிய அளவில் இருப்பது கூடுதல் சிறப்பு.
சபரிமலையில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் சென்று வழிபட முடியாது இங்கு அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம். அங்கப் பிரதட்சணம் செய்யும் வசதிகள் உள்ளன. சபரிமலையில் நடைபெறும் வழிபாடுகள் போன்றே இங்கும் கடைபிடிக்கப் படுகின்றன. சபரிமலைக்குச் சென்று வேண்டினால் கிடைக்கும் பலன், இங்கு வந்து தரிசித்தாலேயே கிடைக்கின்றது என நம்புகின்றனர். அதனால் சபரிமலைக்கு செல்ல முடியாத வயதானோர் இங்கு வந்து தரிசித்து பலனடைகின்றனர். மேலும் சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலையணிதல், இரு முடி கட்டுதல் போன்ற பூஜைகள் இங்கு பிரசித்தம்.
தல வரலாறு:
இக் கோயிலை நிர்மாணித்தவர் “விமோசனானந்தா குருமக ராஜ்” என்ற ஐயப்ப பக்தர் ஆவார். ஐயப்பன் மீது ஆழ்ந்த பக்தியும் பற்றுதலும் கொண்டவர். ஐயப்பனின் தெய்வ வழிபாட்டினையும், பக்தி நெறியனையும் வளர்க்கும் நோக்கோடு, ஐயப்பன் கோயில் இல்லாத பகுதிகளில் கோயில்களை நிர்மாணிக்க தமக்கு தாமே சபரிமலையில் சபதம் மேற்கொண்டார். அக்கால கட்டத்தில் ஐயப்ப வழிபாடு பிரபலமாக இல்லை. முதன் முதலில் உத்தரபிரதேசம் காசியில் 1952 லும், ஹரித்துவாரில் 1955லும், கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணத்தில் 1959லும், ஆந் திரமாநிலம் விஜய வாடாவில் 1975லும் ஐயப்பன் கோயில்களை நிர்மாணித்தார். தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் அகன்ற காவேரி நதிக்கரை ஓரத்தில் கருப்பத்தூரில் நிலத்தைத் தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கிரையம் செய்தார். இவ்விடம் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பின் கோயில் கட்டுவதற்காக வரைபடத்தையும் சிலை வடிவ அமைப்பினையும் இறுதி செய்தார்.
கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க 1962 நவம்பர் 13ம் நாள் பூமி பூஜை போடப்பட்டது. பணிகள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் கோயிலில் பிரதிஷ்டை செய்ய தேவையான ஐயப்பன் விக்ரகத்தை கும்பகோணத்தைச் சார்ந்த தலைசிறந்த ஸ்தபதி ஒருவரை வைத்து கோயிலுக்கு அருகிலேயே வார்ப்படம் செய்து சிலை உருவாக்கப்பட்டது. ஐயப்பன் விக்ரகம் மிகவும் நேர்த்தியாகவும் தெய்வீகத் தன்மையுடனும் சுடரொளி மிக்கதாகவும் அமைந்திருந்தது.
அந்த ஐயப்பன் விக்ரகத்தை விமோசனானந்தா குருமகராஜ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் பி.டி. ராஜன் அவர்கள் திருச்சி மலைக் கோட்டையில் இருந்து புனித பயணத்தைத் துவக்கி வைத்தார். தமிழகத்தில் முக்கிய ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வைத்து சிலையை பூஜித்த பின்னர் கருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புகழ் பெற்ற ஐயப்பன் திருவு ருவச் சிலை பி.டி.ராஜன் அவர்களால் வழங்கப்பட்டதாகும். எனவே தான் அவரை வைத்து சிலையின் புனித பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற கோயில்களில் வைத்து பூஜிக்கும் போது விக்ரகத்தின் ஆற்றலும் சக்தியும் கூடிக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். விக்ரகத்தின் புனித பயணம் நிறைவடைந்து கருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தது. கோயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்த நிலையில், புனித நன்னாளாம் 1965ம் வருடம் ஜூலை மாதம் 1ம் தேதியன்று முன்னாள் சபரிமலை மேல் சாந்தி பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் ஐயப்பன் கோயில் அமைந்த செய்தி பரவத்துவங்கியது. வெளி ஊர்களில் இருந்தெல்லாம் ஐயப்ப பக்தர்கள் வரத் தொட ங்கினர். சனிக்கிழமை, மண்டல பூஜை காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை இருந்தது. பூஜைகளும் விழாக்களும் தொடர்ந்து தங்குதடையின்றி நடந்து வந்தன.
சுற்று பிரகார மண்டபத்தைக் கட்டிய பின், 1977ம் வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இரண்டாவது கும்பாபிஷேக விழாவும் மிகச் சிறப்பாகவே நடந்தேறியது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் மேற்கொள்ளும் காலம் வந்து விட்டது. பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஒரு காலகட்டத்தில் திருப்பணி துவங்க இருந்த நேரத்தில், அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிப்பாதையாக மாற்றப்படுவதாக செய்தி வந்தது. அதனால் ஏற்படும் நில அளவு மாற்றங்களைக் கரு த்தில் கொண்டு கும்பாபிஷேகம் தள்ளிப் போனது. மேலும் ஏற்கனவே இருந்த கோயில் பள்ளத்தில் அமைந்திருந்ததால் மழைகாலங்களில் தண்ணீர் கோயிலின் உள்ளே வர ஆரம்பித்தது. இது போன்ற காரணங்களினால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. இந்நிலையில் 4 வழிசாலையாக மாற்றி அமைக்கும் பணி நிறைவு பெற்றது. சாலையின் உயரமும் சுமார் 4 அடி உயர்த்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் திருப்பணியை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரம் கோயிலின் மொத்த உயரத்தையும் நெடுஞ்சாலையின் உயரத்திற்கு மேல் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கோயிலை புதியதாக நிர்மாணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு நல்ல முகூர்த்த நாளில் பூமி பூஜை போடப்பட்டு திருப்பணி வேலைகள் துவங்கப் பட்டன. பக்தர்களில் பங்களிப்புடன் ஐயப்பன் திருவருளால் திருப்பணி வேலைகள் எந் தத் தொய்வும் இல்லாமல் நடந்தேறியது.
28.10.2018 அன்று சபரிமலை மாளிகைப்புரம் மேல் சாந்தி (மனோஜ் எம்ப்ராந்திரி) அவர்களால், ஐயப்ப பக்தர்களும் ஊர்ப் பொது மக்களும் திரளாக பங்கேற்க மூன்றாவது கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. கோயில் அமைப்பும் தோற்றமும் புதுப்பொலிவு பெற்றது. சபரிமலையில் இருக்கும் கோயிலின் தோற்றத்தை ஒத்திருந்ததாலும், கும்பாபிஷேக விழா நடந்த விதமும், தோற்றப்பொலிவும் 40 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்ற குறையை மறைத்து விட்டன.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் சபரி மலையில் உள்ள ஐம்பொன் சிலை போன்றே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இருப்பிடம் : கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாலா பேட்டைக்கு அருகில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. தூரம் கரூரில் இருந்து 35 கி.மீ.
திருச்சி இருந்து 40 கி.மீ. லாலா பேட்டையில் இருந்து 1 கி.மீ. குளித்தலையில் இருந்து 5 கி.மீ. பஸ் மூலம் லாலபேட்டை அல்லது குளித்தலையில் இறங்கி ஆட்டோ/ டாக்ஸி மூலம் வரலாம்.