தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.
திருவிழா:
தைமாதம் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும்.
தல சிறப்பு:
இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி. 1471இல் ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டு செய்தி.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 224 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)திருக்கோயில், டி. இடையாறு-607 209,
திருக்கோயிலூர் தாலுகா,
விழுப்புரம் மாவட்டம்.
அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
பிரார்த்தனை
நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
பலாச்சுளை பாலகணபதி சில சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது "இடையாறு' என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளார்கள். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
சந்தனாச்சாரியருள் மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர் , பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். (கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராணபெயர்) "சுகம்' என்ற சொல்லுக்கு "கிளி' என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியகராமப்பிள்ளையார் என்பதாகும்.
திருமணத்தடை நீக்கும் தலம்: சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு "கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு' என்பர். நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுக்கேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
இருப்பிடம் : திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்களில் சென்றால் எடையார் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.