இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்,
ராசிபுரம் - 637 408,
நாமக்கல் மாவட்டம்.
போன்:
+91- 4287 - 220 411, 99940 71835.
பொது தகவல்:
இத்தல இறைவனுக்கு பச்சரிசி சாதம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இத்தல விநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோயில் விமானம் எண்கோண விமானம் ஆகும்.
பிரார்த்தனை
நோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின்றனர்.
குழந்தை பிரார்த்தனை: பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்பாளுக்கு எதிரே "கம்பம்' நடப்படும். இந்த கம்பத்தை அம்பிகையின், கணவனாக கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பாள் எதிரே கம்பம் இருக்கிறது. அம்பிகை, தனது கணவனாக கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே இவளை, "நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
புத்திரப்பேறு இல்லாதவர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்பாளுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.
அம்பாள் சிறப்பு: கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோயில் இது. ஐப்பசி விழாவின்போது அம்பிகை சிலை முழுக்க பூ அலங்காரம் செய்கின்றனர். இந்த அலங்காரத்தை "பூச்சாட்டு' என்கிறார்கள். இந்நேரத்தில் அம்பிகையை வழிபடுவது விசேஷம். மூலஸ்தானத்தில் மாரியம்மனுக்கு முன்பு, சுயம்புவாக தோன்றிய அம்பிகையின் வடிவம் இருக்கிறது. முதலில் சுயம்பு அம்பிகைக்கே பூஜை செய்யப்படுகிறது. அம்பாள் சதுர வடிவ ஆவுடையாரில் அமர்ந்திருப்பதும், சுயம்பு அம்பிகை லிங்க வடிவில் காட்சி தருவதும் விசேஷம். அம்பிகைக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அம்பிகைக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. புத்திரத்தடை உள்ள பெண்கள் இந்த ஊஞ்சலை ஆட்டி, அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் விநாயகர், முருகன் மட்டும் இருக்கின்றனர். இவர்களது சன்னதி மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கிறது. வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதி வயலாக இருந்தது. இதில் விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர், வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் ரத்தம் வெளிப்பட்டது. பயந்த விவசாயி, மக்களை அழைத்து வந்தார். அவர்கள் இவ்விடத்தில் தோண்டியபோது சுயம்பு வடிவம் ஒன்று இருந்தது. அப்போது அம்பிகை பக்தர் ஒருவர் மூலம் அசரீரியாக தோன்றி, தனக்கு அவ்விடத்தில் கோயில் கட்டும்படி கூறினாள்.
அதன்பிறகு மக்கள் சுயம்பு கிடைத்த இடத்திலேயே கோயில் கட்டினர். பிற்காலத்தில் சுயம்புவாக இருந்த அம்பிகைக்கு பின்புறத்தில், மாரியம்மன் உருவச்சிலையையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக அருள்பாலிக்கிறார்.